Translate Tamil to any languages.

சனி, 15 செப்டம்பர், 2018

அலைகள் ஓய்வதில்லை!


எழுதுகோலும் எழுதுதாளும்
என் கையில் சிக்கிவிட்டால்
என்னென்னமோ எழுத வருகிறதே!
எழுதிக்கொண்டே இருக்கும் வேளை
இல்லாள் கண்டுவிட்டால்
"அரைச் சதம் வருவாய் தராத எழுத்தால
உலகை உருட்டலாமென எழுதும்
முட்டாளைக் கட்டிப்போட்டு அழுகிறேனே!" என
ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிடுவாள்!
அடிக்கடி பழையதை மீட்டும்
என் உள்ளத்து அலைகளும் கூட
எழுதியதை எழுதி முடிக்காமல்
கரையைத் தேடும் அலைகளைப் போல
ஒரு போதும் ஓய்ந்ததில்லை!
பள்ளிக்குப் போனோம் வந்தோம்
படிப்புக்கு முழுக்குப் போட்டது
தொழில் தேடி அலைந்தது
"நாலு காசு உழைக்கத் தெரியாத
உனக்கெல்லாம் காதல் அரும்புதோ?" என
காதலிக்க மறுத்த கண்ணகிகள்
பேரனைப் போலப் பண்டிதராகாமல்
எழுதிக் கிழித்து
என்ன பண்ணப் போறாரென
ஒதுக்கி வைக்கும் உறவுகள்
எழுத்து உனக்குக் கஞ்சி ஊற்றுமாவென
வேடிக்கை பார்க்கும் நட்புகள்
உவருடைய எழுத்தைப் படித்து
ஊரு, நகரு, நாடு, உலகம்
திருந்துவதற்கு வாய்ப்பில்லையென
நழுவிச் செல்லும் சுற்றத்தார்
என்றவாறு தான்
எண்ணிச் சொல்ல முடியாதளவு
நினைவுகள் தான் உள்ளத்தில் உருள
அலைகள் ஓய்வதில்லைப் போல
எழுதுகோலும் எழுதுதாளும்
என் கையில் சிக்கிவிட்டால்
என்னென்னமோ எழுத வருகிறதே!
எழுதுவதெல்லாம் - அந்த
பாவரசர் கண்ணதாசன்
பட்டறிந்ததைப் பகிர்ந்தது போல
நானும் கெட்டுத் தெளிந்ததை
பகிரலாமென ஓயாமல் எழுதுகிறேன்!
என் எழுத்தை எடை போடும்
வாசகரின் வாக்கில் தான்
உலகம்
என்னை எடை போடப் போகிறதே!


ஓயாத அலைகள்

உள்ளத்தில் குந்தி இருக்கும்
எண்ண அலைகள்
அடிக்கடி மீட்டுப் பார்க்கத் தூண்டுமே!
மீட்டுப் பார்க்கத் தூண்டிய
எண்ணங்களைப் பாவண்ணங்களாக
எழுத முயன்று கொண்டிருப்பேன்!
நான் எழுதும் வேளை
அத்தான் கண்டார் என்றால்
எழுது தாள் கிழிந்து விடாமல்
எழுது கோல் தேய்ந்து விடாமல்
ஓயாத எண்ண அலைகளை
அழகாக எழுதிக் கொள்வதால்
உள்ளம் ஆறுமென ஆதரவு தருவாரே!
வறுமையில் வாடிய நினைவு
அரிசி விற்றுப் புளி விற்று
வயிறு கழுவிப் பள்ளிக்குப் போனது
வயிறு கடிக்கும் ஏழை ஆயினும்
கடவுள் என்னை அழகியாகப் படைத்ததால்
என்னைப் பின் தொடர்ந்த பிஞ்சுகள்
முயன்றளவு முடிந்தளவு படித்ததை
முன்வைத்து நேர்முகத் தேர்வுக்குச் சென்றால்
பாலியல் பார்வையோடு முதலாளி நோக்க
வீடு வந்து சேர்ந்த நினைவுகள்
திருமணப் பேச்சு மேடையிலே
வீடு, காணி, நகை நட்டு போதாதென
மணமகனை விற்க இயலாதென
ஓடி ஒழிந்த மணமகன் வீட்டார்
நட்போடு பழகிய ஆண்களைக் காட்டி
அவன், இவன், உவன், எவன் என்றறியாது
கூடிப் போன கொண்டோடி இவளென்றோர்
பெண் என்றால் இழிவாகப் பார்க்கும்
குமுகாயத்தில் (சமூகத்தில்) மாற்றம் காண எண்ணியவை
இன்னும் இன்னும் நிறையவே
ஓயாத அலைகளாக உள்ளத்தில் உருளும்
எண்ணங்களை 'பா' நடையில
எழுதிப் பார்க்க முயன்று பார்ப்பேன்!
எப்பாலும் ஒளிந்து இருந்து பார்த்த
அத்தான் வந்து முதுகில தட்டிப்போட்டு
நீயுமொரு பாவரசியாக விரும்புகிறேனென
கன்னம் சிவக்க இறுக்கிக் கொஞ்சுவாரே!
அத்தானின் ஊக்கமளித்தல் தான்
கண்டதும் கேட்டதும் பலதும் பத்துமென
ஓய்வு நேரங்களில் எழுதி அனுப்பியதால்
உள்ளூர் ஊடகங்களில் சில வெளியாகின!
எழுதுகோல் ஏந்திய பின்
எனது எண்ணங்களைத் தொகுக்க இயலாதே
என் எழுத்துக்குச் சான்று பகிரும்
வாசகர் எதிர்பார்ப்புகளை உள்வாங்கியே
எழுதிக்கொண்டிருப்பதே என் பணி!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!