Translate Tamil to any languages.

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

ஒன்றுபடு தமிழா! ஒன்றுபடு!

 28/08/2020 வெள்ளி மறக்காமல் இணையுங்கள்.

மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 02

தமிழா! தமிழரே உலகின் முதற்குடி!

தமிழா! தமிழே உலகின் முதன்மொழி!

தமிழா! தமிழில் தான் நல்ல பண்பாடு!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! கடந்த காலம் கண்ணில் தெரிகிறதா?

தமிழா! இழந்ததைத் தான் கணக்கிட முடிகிறதா?

தமிழா! பிரிவினை வளர்த்துப்   பட்டதை நினை! - இனி

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! அன்புக்கும் உண்டோ  அடைக்கும் தாழ்ப்பாள்!

தமிழா! அடம்பன் கொடியும்  திரண்டால் மிடுக்காம்!

தமிழா! எட்டவிலகி நீயிருந்தால் கேடுதான் வருமாம்!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! சாதி, மதப் பேச்சைக் கைவிடு!

தமிழா! ஊருக்கூர் வேண்டாம் முரண்பாடு!

தமிழா! நீயுடுத்து நம்தமிழ் பண்பாட்டை!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! கண்டதையும் பேசிக் காலம் கடத்தாதே!

தமிழா! கைக்கெட்டியதைக் கையாளக் கற்றிடு!

தமிழா! உன்னாயுதமே ஒற்றுமைதானென உணர்ந்திடு!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! தலைக்கனத்தைக் கொஞ்சம் இறக்கி வையடா!

தமிழா! தலைநிமிர்ந்து வாழவென முன்னேறப் பாரடா!

தமிழா! விழித்தெழு, விடியல்கூட நெருங்குமடா!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! முரண்பட்டு மோதுண்டு வீழ்ந்துவிடாதே!

தமிழா! நமக்குள்ளே நாமுடைந்தால் விடிவு கிட்டாதே!

தமிழா! சூழவுள்ள காக்கைகளின் ஒற்றுமையைப் பார்!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! நாளும் விடியும் கிழக்கும் வெளிக்கும்

தமிழா! நமக்கும் வாழ்வு மேம்பட உழைப்போம்

தமிழா! ஒடுக்க வருமாள்களை விரட்ட ஒன்றுபடு!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! உள்ளம் சோர்ந்து முயற்சியில் தளராதே!

தமிழா! வெள்ளம் வந்தாலும்  நீந்தக் கற்றிடு!

தமிழா! பள்ளம் திட்டி, பார்த்து நடைபோடு!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! அழிவைத் தடுக்க அறிவுக் கண்ணைத் திற!

தமிழா! தோல்வியை விரட்டிடப் பலமறிந்து நடைபோடு!

தமிழா! வெற்றியை நெருங்க ஒன்றுபட்டுச் செயற்படு!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! தன்நலம் கருதிப் பிரிவதும் இலகுதான்!

தமிழா! பொதுநலம் பேணித்தான் இணைவதும் நலமே!

தமிழா! தமிழினம் மேம்பட ஒன்றுபடுதலே மருந்து!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பாங்க!

தமிழா! ஒற்றுமை கெட்டால் தாழ்வுதான் என்பாங்க!

தமிழா! தமிழனென்று சொல்லித்தான் நடைபோடு!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!





2 கருத்துகள் :

  1. நன்று. ஒன்றுபடவேண்டியவர் பெயர் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகெங்கும் கிட்டத்தட்ட 155 நாடுகளில் தமிழர் வாழ்கின்றனர். ஆங்காங்கே ஒற்றுமை இன்றி அவர்களுக்கான இலக்கை (எடுத்துக்காட்டாக இலங்கைத் தமிழர்) அடைய முடியாதுள்ளனர். உலகெங்கும் வாழும் தமிழர் ஒற்றுமை பேணினால் உலகையே ஆட்டிப்படைக்கலாமே!

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!