Translate Tamil to any languages.

ஞாயிறு, 15 நவம்பர், 2015

வலைப்பூக்களில் பதிவுகளைக் காணவில்லையே!

என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அறிஞர்களே! என்னூரில் தீபாவளி நாளன்று ஏஆர்டெல் வலையமைப்புப் பணி சரியாகக் கிட்டவில்லை. கடும்மழையால் கவனிக்க மறந்துவிட்டார்கள் போலும். அதனால். உரிய நேரத்தில் வாழ்த்துகளைப் பகிர முடியாமையால் துயருற்றேன். எல்லாமே கடும்மழையின் வஞ்சனை தான்.

சரி! தீபாவளி நாளுக்கு அடுத்த நாளாவது தீபாவளி வாழ்த்துகளைப் பகிர வலைப்பூப் பக்கம் நுழைந்தேன். எனது பிளக்கர் விருப்பத் தெரிவில் முந்நூறிற்குக் கிட்டவும் எனது வேர்ட்பிரஸ் விருப்பத் தெரிவில் இருநூறிற்குக் கிட்டவும் திரட்டி வைத்திருந்த வலைப்பூக்களில் வாழ்த்துகளைப் பகிர இறங்கினேன். அடக் கடவுளே! நான் 2015 தைப்பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து; பின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து; தீபாவளி வாழ்த்துகளைப் பகிரும் வரை 2014 ஆம் ஆண்டு பதிந்த இறுதிப் பதிவோடு பல வலைப்பூக்களைப் பார்த்தேன். அதன் விளைவே 'வலைப்பூக்களில் பதிவுகளைக் காணவில்லையே!' என்றொரு பதிவை தர முன்வந்தேன்.

எனது பார்வையில் இப்படிப் பல வலைப்பூக்களில் புதிய பதிவுகளைக் காணவில்லை. நான் விருப்பத் தெரிவில் திரட்டிய வலைப்பூக்கள் செயலிழந்தவையாக இருக்கலாம். அல்லது புதிய பதிவுகளைப் பதியாமல் வலைப்பதிவர்கள் ஒளிந்திருக்கலாம். வலைப்பதிவர்கள் ஒளிந்திருக்கப் பல காரணங்கள் இருக்கலாம். அதில், தங்கள் வலைப்பூ முன்னிலைக்கு வராமல் பலராலும் பேசப்படாமல் இருப்பதால் உள்ளத்தில் தளர்வுநிலை ஏற்பட்டிருக்கலாம். அதனால், புதிய பதிவுகளைப் பதியாமல் ஒளிவது அழகல்ல.

எனக்கும் வலைப்பூ தொடங்கிய வேளை மட்டற்ற மகிழ்ச்சி தான். அடுத்தடுத்து ஆறு வலைப்பூக்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கில் நடாத்தி வந்தேன். வலைப்பூ முன்னிலைக்கு வராமல் பலராலும் பேசப்படாமல் இருப்பதை நானுணர, அறிஞர்கள் வழிகாட்டலின் படி தனி வலைப்பூவாக ஒன்றையே நடாத்த முனைந்தேன். மாதமொன்றில் ஒரிரு பதிவுகளைப் பதிந்தேனும் என் தனி வலைப்பூவைப் பேண முனைகின்றேன். ஆயினும், அறிஞர்களின் வலைப்பூக்களைத் தேடிச் சென்று கற்பதோடு அவர்களது பதிவுகளுக்கு என் கருத்துகளையும் பகிருகிறேன். என் உள்ளத்தை ஈர்த்த பதிவுகளை எனது வலைப்பூவில் பகிர்ந்தும் வருகிறேன். எப்படியோ என் தனி வலைப்பூவைப் பேணுவதில் எனக்கு ஒரளவு நிறைவு கிட்டுகிறது. மேலும் என் தனி வலைப்பூவிற்கான வாசகர் பெருகுவதைப் பார்த்தால், விரைவில் முன்னிலைக்கு வரலாம் பலராலும் பேசப்படலாம் என நம்புகின்றேன்.

தங்கள் வலைப்பூ முன்னிலைக்கு வராமல் பலராலும் பேசப்படாமல் இருப்பதால் உள்ளத்தில் தளர்வுநிலை ஏற்பட்டால் என்னைப் போன்று அறிஞர்கள் வழிகாட்டலின் படி முன்னேற முயல்வீர்கள் என நம்பி என் பட்டறிவைப் பகிர்ந்தேன். ஆயினும்,  பல முன்னோடி வலைப்பதிவர்களின் செயற்பாட்டை நாம் கற்றறிந்து முன்னேற முயற்சி செய்யலாமே! அப்படிச் சிலர் எப்படி முன்னேறுகிறார்கள் என்று தங்களுடன் பகிர விரும்புகிறேன்.

1. சிலர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
2. சிலர் ஒன்றிணைந்து ஒரு நாளைக்கு ஒருவராக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
3. சிலர் ஏழலில் (வாரத்தில்) ஒரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
4. சிலர் 2 ஏழலில் (2 வாரத்தில்) ஒரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
5. சிலர் மாதத்திற்கு ஒரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
6. சிலர் மூன்று மாதத்திற்கு ஒரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.

எல்லோருமே (நான் உட்பட) Linkedin, Twitter. FaceBook, Google+ தளங்களில் பகிருவதோடு வலைப்பதிவுத் திரட்டிகளிலும் புதிய பதிவினை இணைக்கிறர்கள். அவர்களது வெற்றியின் கமுக்கம் (இரகசியம்) மற்றைய அறிஞர்களின் வலைப்பூக்களுக்குச் சென்று தமது அடையாளத்தை அரங்கேற்றுவதேயாகும். அதாவது கருத்துரை, தாக்குரை, திறனாய்வு எனப் வழிகளில் மற்றைய அறிஞர்களின் வலைப்பூக்களில் தமது அடையாளத்தை அரங்கேற்ற முடியுமே. இவ்வாறு மற்றைய அறிஞர்களின் உள்ளத்தை ஈர்க்க முயன்று இருந்தால் தங்கள் வலைப்பூவிலும் மற்றைய அறிஞர்களின் வருகையைப் பெருக்கலாமென இறங்கி வென்றவர்களே அவர்கள்! அவர்களைப் போல நாமும் முன்னேற முயல்வோம்.

மின்னூடகங்களில் வலைப்பூவும் (Blog) முன்னிலையில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண முடியுமே! இதுவரை பன்னிரண்டாயிரம் தமிழ் வலைப்பூக்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். வலைப்பூ நடாத்துவது என்பது நுட்பங்கள் தெரிந்தவருக்கு இலகு தான். ஆனால், மற்றைய வலைப்பூக்களில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாத வரை வெற்றி காண்பதென்பது இயலாத ஒன்றே! பதிவுலகில் வெற்றி பெறக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழிகாட்டலைப் படித்துத் திறம்பட வலைப்பூ (Blog) நடாத்தி உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண முன்வாருங்கள்.

ஒவ்வொரு வலைப்பதிவர்களும் படிக்கலாமே!


31 கருத்துகள் :

  1. பதிவுகள் எழுதாமலிருப்பதற்கு பல காரணங்கள், சகோதரரே!
    ஒவ்வொருவருக்கும் இந்தக் காரணங்கள் மாறலாம்.
    நீங்கள் சொல்வதுபோல பலரது வலைப்பதிவுகளுக்கும் சென்று படித்து கருத்துரை இட்டால்தான் நாம் கவனிக்கப்படுவோம். அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
    உங்களின் ஆதங்கம் உண்மையானது. எனக்குத் தெரிந்து பலர் எழுதுவதை நிறுத்திவிட்டனர். என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் கூறுவது உண்மையே. பலரது வலைப்பூக்களைப் படித்து கருத்து இடலாம் என்ற விருப்பம் இருந்தால்கூட நேரமின்மை காரணமாக முழுமையாக அவ்வாறான முயற்சியில் ஈடுபட முடியவில்லை. முடிந்தவரை எழுதவும், படிக்கவும், கருத்துக்களைப் பகிரவும் முயற்சிக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. எவரையும் புண்படுத்தும் எண்ணம்
    எனக்கில்லை - எப்படியிருப்பினும்
    புதிய பதிவர்களுக்கு வழிகாட்டி
    தமிழ் வலைப்பதிவர்களை பெருக்கும் நோக்கில்
    எனது எண்ணத்தைப் பகிர்ந்தேன்!

    பதிலளிநீக்கு
  4. நான் முடிந்தவரை தொடர்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    அண்ணா.

    உண்மைதான் ..பலருக்கு நேரம் இன்மை ஒரு பிரச்சினைதான் முடிந்த வரை பலரது வலைப்பூக்களை படிக்கிறேன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. நான் வாரம் ஒரு பதிவு என்னும் முறையில்தான் பதிவுகளை எழுதி வருகின்றேன். என்னால் முடிந்த வரை மற்றவர்களின் பதிவுகளைக் கண்டு, கருத்துரை வழங்கித்தான் வருகின்றேன்.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  7. எழுதாமல் இருப்போருக்கும் மற்றவருக்கும் பயன்படும் வகையில் அக்கறையோடு இட்டப் பதிவிற்கு நன்றி ஐயா. பல நண்பர்கள் சேர்ந்துவிட்டார்கள், அவர்களின் பதிவுகளைப் படித்துக் கருத்திட விருப்பம் இருந்தாலும் நேரமின்மையால் தள்ளிப் போய்விடுகின்றது. என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. தங்களது எண்ணம் சரியே! நாங்களும் வாரத்தில் 3 அல்லது 2 பதிவுகள் நாங்கள் இருவரும் சேர்ந்து இடுகின்றோம். பிற வலைப்பூக்களுக்குச் சென்றுக் கருத்திட்டு வருகின்றோம். ஆனாலும் நேரமின்மை காரணமாக பல வலைப்பூக்களுக்குச் செல்ல முடிவதில்லை. வாசித்தாலும் கருத்திட முடியவில்லைதான். முயற்சி செய்கின்றோம் நண்பரே!

    பதிலளிநீக்கு
  9. எமக்கு வேலை கிடைக்கும் நாளெல்லாம் வேலை நாள்... வேலை இல்லாத நாளெல்லாம் விடுமுறை நாள் ...அப்போது விடுபட்ட நண்பர்களின் பதிவுகளை படிப்பதே எமது வேலை நண்பரே.........

    பதிலளிநீக்கு
  10. வலைப்பூவினில் புதிய பதிவுகள் இடாமைக்கு பலருக்கு பல காரணங்களிருக்கலாம். எனக்கு, நேரமின்மையே காரணம்.
    முடிந்தவரையில் பதிவுகள் படித்து, கருத்துரைகள் கொடுத்து
    வந்துகொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. வலிகளினால் ஒளிந்து கொண்டேன்
    வேறொன்றும் இல்லை ஐயா
    விடிவதற்காய் காத்துள்ளேன்
    விடிவதெப்போ என அறியாமலே

    எழுதுகோல் காய்ந்து போச்சு
    விழிகளோ ஈரமாச்சு
    பழுதுபட்ட நெஞ்சத்தால்
    பயணித்தல் நின்று போச்சு

    முடியுமா விடியுமா நான்றியேன்
    முடிவற்ற துயரத்தில் மூழ்கி விட்டேன்
    தேடி வந்து வாழ்த்தினீர்கள் நான்றிவேன்
    வாடியதால் வாழ்த்தவில்லை மன்னியுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      துயரங்களை நம்பிக்கைகளுடன் பகிருங்கள்
      இல்லையேல்,
      தும்பிக்கையானுடன் (கடவுளுடன்) பகிருங்கள்.
      தீர்வு கிட்டும், துயரம் நீங்கும்!
      மிக்க நன்றி.

      நீக்கு
  12. என்னை பொருத்தவரை :

    நேரமில்லை என்பதெல்லாம் ஒரு சாக்கு... மனமில்லை...

    பதிலளிநீக்கு
  13. உண்மைதான்! நான் வலையில் எழுத ஆரம்பித்த சமயம் பிஸியாக எழுதிக்கொண்டிருந்த பலர் இப்போது எழுதுவது இல்லை! இவர்கள் குறைந்த பட்சம் மாதம் ஒரு பதிவாவது எழுதினால் நன்றாக இருக்கும். என்னால் இயன்ற வரை பிறருடைய பதிவுகளை வாசித்து கருத்திட்டு வருகிறேன்! உங்கள் ஆலோசனைகள் ஏற்புடையன. நன்றி!

    பதிலளிநீக்கு
  14. நான் எழுதுவதை விடவும், மற்றவர்களின் எழுத்துக்களைப் படித்துப் பின்னூட்டம் இடுவதில்தான் எனக்குப் பெருத்த மகிழ்ச்சி. அப்படிச் செய்யாவிடில் நம்மை யாரும் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். 'நம்மை மறந்தாரை நாம் மறக்கமாட்டேமால்' என்பதெல்லாம் சிலப்பதிகாரக் காலத்தோடு சரி. - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப நல்லா உள்ளபடியே எழுதியிருக்கீங்க...

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!