Translate Tamil to any languages.

செவ்வாய், 26 டிசம்பர், 2017

குடியே குடியைக் கெடுக்கும் மறக்காதீங்க!


குடிக்காதீங்க! பிஞ்சுகளே குடிக்காதீங்க!
                      (குடிக்காதீங்க!) 

குட்டிப் பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க!
குடிச்சவங்க சாகத் துடிப்பதைப் பாருங்க
நீங்க குடிச்சிட்டுச் சாகக் கிடக்காதீங்க 
உங்க வாழ்வை வீணாகக் கரைக்காதீங்க!           
                       (குடிக்காதீங்க!) 

படிச்ச பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க!
குடிச்ச பின்னே தெருவில கிடக்காதீங்க
உடுத்த துணியும் இல்லாமல் கிடக்காதீங்க
நடுவழியே ஊராக்கள் பார்த்துச் சிரிப்பாங்க!
                      (குடிக்காதீங்க!)

பச்சைப் பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க!
போதையிலே மூழ்கி மயங்கிக் கிடக்காதீங்க
காதலரோ உம்மைக் கண்டால் வெறுப்பாங்க
பெத்தவங்க குடும்பம் இருக்கு மறக்காதீங்க!
                      (குடிக்காதீங்க!)
 
குஞ்சுகளே பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க!
கைக்குள் உருளும் பணத்தை எரிக்காதீங்க
கொஞ்சும் உறவுகளை வெறுக்க வைக்காதீங்க
குடியே குடியைக் கெடுக்கும் மறக்காதீங்க!
                      (குடிக்காதீங்க!)

குறிப்பு:-  "மதுவை விரட்டினால் கோடி நன்மை!" என்ற மின்நூலுக்காக எழுதிய கவிதை இது. நீங்களும் இம்மின்நூலுக்குக் கவிதை எழுதியனுப்பக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக. முடிவுத் திகதி: 31/12/2017


குடியை‌க் கெடு‌க்கு‌ம்‌ குடிகாரர்
அம்மா, அப்பா வளர்ப்பிலே
தேனீரோ இளநீரோ
குடித்த எல்லோரும் தான்
தெருச் சுற்றிகளோடு சுற்றுகையில்
'அற்ககோல்' கலப்புத் தண்ணீர்
குடிச்சுப் பழகிட்டாங்களாமே!

பழகிய பழக்கமோ என்னோ
குடிச்சுப் போட்டு வந்து
அம்மைக்கும் அப்பனுக்கும் அடியாம்
போதாக்குறைக்கு - நம்பிக்
கழுத்தை நீட்டத் தாலி கட்டிய
பெண்டிலுக்கும் உதையாம் - அதை
பார்த்த பிள்ளைகள் "அம்மோய்" என்றழ
பழாய் போன குடிகாரன்
பச்சைப் பிள்ளைகளுக்கும் நெருப்படியாம்!

அடி, உதை, குளறல் கேட்டு
வீட்டு நாயும் ஊளையிடத் தான்
அக்கம், பக்கம், ஊரே திரண்டு வர
குடியைக் கெடுக்கும் குடிகாரர்
வீட்டுச் சூழலைக் கண்ட வேளை
வந்தவர்கள் குதிக்கால் தலையிலடிக்க
ஓட்டம் பிடிக்கையிலே தெரிந்ததாம்
மதுவை விரட்டினால் கோடி நன்மையென்று!

குறிப்பு:- இக்கவிதை கீழ்வரும் விளம்பரத்துக்காக எழுதியது.
உங்களால் முடியாது என்றால்
எந்தக் கடவுளால் முடியும்
இந்தப் படத்துக்குக் கவிதை எழுத?



மேலுள்ள இணைப்பைச் சொடுக்கி விரிப்பைப் படித்து விரையுங்கள்!
மின்நூலாக்குவோம், பரிசில் வழங்குவோம்! முடிவுத் திகதி: 31/12/2017

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!