Translate Tamil to any languages.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

பட்டிமன்றம்

தெருவோரத்து அரங்கொன்றில்
'கல்லெறியா சொல்லெறியா' என்று
பட்டிமன்ற நிகழ்வைப் பார்த்துக் கேட்டேன்.

காய்க்கிற மாவுக்குக் கல்லெறியாம்
தெருச்சுற்றும் மனிதருக்குச் சொல்லெறியாம்
இருதரப்புப் பட்டிமன்றப் பேச்சாளரும்
ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்லெறி வீசினர்!

காய்க்கின்ற மாவில காய், கனிகள்
நிறையத் தான் தூங்குமே!
'ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' என
காய்க்கிற மாவுக்குக் கல்லெறி தானதிகம்!

தெருவால போகிற ஆண்ணென்ன பெண்ணென்ன
உள்ளத்தில் நிறையச் சுமந்து செல்லலாம்!
ஆளுக்காள் அடுத்தவர் தகவல் அறிய
கேள்விக் கணைகளாகச் சொல்லெறி வீசுவரே!

நல்லவரோ நறுக்காகப் பதில் எறிந்தாலும்
கெட்டவரோ கதையளந்து பதில் எறிவாரே!
சொல்லெறிந்தார் ஒதுங்கினாலும் பார்த்தவர் விடமாட்டாரே
ஆளுக்காள் ஆயிரம் கதையளப்பினம் கண்டியளோ!

ஏட்டிக்குப் போட்டியாகப் பட்டிமன்றம் உச்சக்கட்டத்தில்
சொல்லெறியும் பதிலடியும் சுவையான விருந்தாச்சு!
கேட்பவரோ முடிவறியத் துடியாய்த் துடித்தனர்
மொட்டைத்தலை நடுவரோ குட்டை அவிட்டார்!

சுவைதரும் மாங்காய்க்குக் கல்லெறி என்றாலும்
அப்பாவி மாமரத்துக்குத் தான்வலி பாருங்கோ!
குற்றவாளியறியச் சொல்லெறி வீசியோர் இருந்தாலும்
சுற்றியுள்ளவரின் கேலியும் நையாண்டியும் சுவைதானே!

ஆக்கம்:
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)


செவ்வாய், 29 ஜூலை, 2025

நம்பிக்கையும் வாழ்வும்



அப்பா என்ன செய்தாலும

அம்மா என்ன செய்தாலும்
எந்தப் பிள்ளையும் - அதனை
எதிர்க்க முயன்றதில்லை - அது
பெற்றோர் மீது
பிள்ளைகள் வைத்திருக்கும் நம்பிக்கை!
நண்பர்கள் சிலர் - சிலரை
நம்பிச் செயல்படுவார்கள்!
நம்பியவர்களை நம்பித்தான்
நாணயமாகச் செயற்பட்டவர் தான்
சாகும் வரை நட்பைத் தொடருகின்றனர்!
உள்ளப் பொருத்தம் பேணும் காதலர்கள்
ஒருபோதும் முறிவதில்லை! - அவர்களுக்குள்
நம்பிக்கை ஊற்று எடுக்கும்!
கணவன், மனைவி உறவு
சோதிடப் பொருத்தத்தில் இல்லை - அது
உள்ளப் பொருத்தத்தில் தான் நிலைக்கும்!
உள்ளப் பொருத்தம் ஒற்றுமைக்கு
அன்பு தான் உடல் அணைப்புக்கு
நம்பிக்கை தான் விருப்பங்களை நிறைவேற்ற
கணவன், மனைவிக்கு வேறேது தேவை!
பெற்றவர்கள்
பிள்ளைகளைப் பெற்றால் போதாது;
அன்பு காட்ட வேணும்...
அறிவை ஊட்ட வேணும்...
நம்பிக்கையைப் பேண வேண்டும்!
பெற்றோரின் அன்புக்கும் பற்றுக்கும்
பிள்ளைகள் தாமாகவே கட்டுப்படலாம்...
பெற்றோரில் தான் தங்கியிருப்பதாய்
பிள்ளைகளை வளர்க்கவும் கூடாது
அச்சுறுத்தி, அடக்கிப் பேணவும் கூடாது
பின்நாளில்  - அவை
பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே
விரிசலை ஏற்படுத்தும் மருந்தாகலாம்!
நம்பிக்கை என்பது
பேச்சளவில் ஊற்றெடுப்பதில்லை;
செயல்களிலும் ஆற்றுகைகளிலும்
உள்ளம் விரும்புவதால் ஊற்றெடுக்குமே!

ஆக்கம்:
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

உழைத்துப் பிழைக்க வேண்டும்.



அணிந்து கொள்ள விரும்பும்

ஆடைகளைத் தீர்மானிப்பது நீங்கள்!
நுளம்பு வலை, மீன்பிடி வலை போன்றும்
பொட்டு, பொட்டாக ஓட்டை போட்டதும்
கீறல், கிழிசலாக வெட்டுப் போட்டதும்
நீங்கள் அணிந்து செல்லும் போது
பார்க்கின்ற ஆள்களுக்கு
வயிற்றைப் பிரட்டிச் சத்தி வருதே!
திரைப்படங்களில் ஆட்டக்காரிகள்
போட்டுகாட்டி உழைப்பது வேறு!
ஊருக்குள்ள பண்பாட்டைப் பேணும்
உடுப்புகளைப் போடாமல் திரிந்தால்
ஊரே ஒதுக்கிவைத்துப் போடும்!
ஆள் பாதி ஆடை பாதி என்றால்
ஆளை மறைக்க உடுப்பது பாதி
ஆளை மதிக்க உடுப்பது பாதி
என்பதை உறுதிப்படுத்த
ஆடையின்றித் தெருவில் ஓடிய ஒருவருக்கு
ஊரார் சேர்ந்து அடித்து உடைத்துப் போட்டு
சாக்கால போர்த்து விட்டது சான்று!
வீட்டிற்கு உள்ளே விரும்பியவாறு
உண்டும் குடித்தும் உடுத்தும் வாழலாம்!
வீட்டிற்கு வெளியே வந்து இறங்கினால்
ஊரார் போற்றும் கலைப் பண்பாட்டை

ஏற்று - அதற்குக் கட்டுப்பட்டு
உண்டும் குடித்தும் உடுத்தும் உலாவலாம்!
எனது மகிழுந்து, எனது எரிபொருள், எனது தெருவெளி
நான் எப்படியும் ஓட்டுவேன் என்று
எவரும் ஆட்டம் போட முடியாது
தெரு வெளி அரச சொத்து என்றறி!
நான், என்னுடையது எல்லாம்
பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!
நான், என்னுடையது எல்லாவற்றையும்
பொதுவெளிக் கட்டுப்பாட்டிற்கு அடங்கி
வெளிப்படுத்தி வீர முழக்கம் இடலாம்!
பணிந்தவர் உயர்வார்
உயர உயரப் பணிவு வந்தாலும் உயர்வார்
என்னை விடப் பெரிசு யாரென்று
தலையைக் காட்டினால் பிழைக்க முடியாதே!

ஆக்கம்:-
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

திங்கள், 21 ஜூலை, 2025

கெட்ட பெயர் செத்த பின்னும் நிலைக்கும்

 


அப்பா, அம்மா வைச்ச பெயர்
உயிரழகன் - அதனை
சொல்ல எவருமில்லை! - ஆனால்,
நல்லது செய்தால் இன்னாருடைய பிள்ளை
நல்லது செய்தானென்று
நாலு நாள் கொண்டாட்டம் போடுவாங்க!
ஐந்தாம் நாள் பாரும்
எல்லாம் காற்றிலே போய்விடும்!
எவருமே உயிரழகனைக் கவனிக்க மாட்டாங்க!
கெட்டது செய்தானென்று வைத்துக் கொள்க...
இன்னாருடைய பிள்ளை
கெட்டது செய்தானென்று
உலகெங்கும் பரப்பிப் போடுவாங்க!
பிறந்த நாள் தொடக்கம்
உடலில் ஒட்டிய அடையாளம் போல
(உயிரழகனின் கண்ணுக்குத் தெரியாத
கன்னக்குழி அழகும் கறுப்பு மச்சமும போல)
கெட்டது செய்த செயலாளர் என்று
சுடலையில் பிணம் எரியும் போதும்
ஊர் வாய் பேசும் எவர் தடுப்பார்!
நல்லதைச் செய்தால்
காற்றிலே பறந்து போய்விடும்!
கெட்டதைச் செய்தால்
உடலிலே ஒட்டிக் கிடக்கும் - அதைச் சுட்டி
ஊருலகம் கேலி பண்ணிக் கொண்டிருக்கும்!
ஒரு கோடி ஆண்டு சிந்தித்து
ஒரு முடிவுக்கு வந்தாச்சு - அது
காற்றிலே பறந்து போனாலும்
நல்லதை மட்டும் செய்த செயலாளர் என்ற
பெயரோடு சாகலாம் என்று தான்!

ஆக்கம்:-
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

வெள்ளி, 18 ஜூலை, 2025

மருத்துவமனையை, மருத்துவரை நாடாதிருக்க



அன்று உணவே மருந்தாகும்!

இன்று மருந்தே உணவாகிறது.
என்று தீரும் 
இந்தச் சிக்கல்?
அரிவரி, தொடக்கக்கல்விக்கு மேலே
பெரிதாக ஏதும் படிக்காத என்னிடம்
மருத்துவமனையை, மருத்துவரை நாடாதிருக்க
மருந்தொன்று தாவென்று கேட்கிறார்களே!
உண்டது உடலில் ஒட்ட
நாறும் வியர்வை வெளியேறும் வண்ணம்
உடற்பயிற்சி செய்ய வேணுமாம்!
(அது வயாக்கரா மருந்துக்கு ஈடானதாம்!)
இரண்டு (மலம், சலம்) அடக்கிப் பேணாமல்
ஒழுங்காக வேளியேற வைக்க வேணுமாம்!
உடலில் குருதி (கீமோகுளோபின்) வற்றாதிருக்க
கீரைவகைக் கறிகள் உடன் - உப்பில்லா
நன்நீரை நன்றாகக் குடிக்க வேணுமாம்!
தவிடு நீக்காத அரிசியில் சோறாக்கி
உப்பு, புளி, காரம், எண்ணெய் குறைத்து
விரும்பிய கறிகள் காய்ச்சி
(சுருங்கக் கூறின் அவியல் கறி, சோறு)
உண்டது செமிக்க 4 மணி நேரம் விட்டு
மூன்று வேளை கால் வயிறு உண்டு
கால் வயிறு நன்நீர் குடித்தும் தான்
எஞ்சிய வயிற்றில் காற்றுக் குடிகொள்ள
உண்டு வந்தாலும் 8 மணி நேரத் தூக்கத்துடன்
உண்டு களித்து வந்தால் பாரும்
மருத்துவரை நாடவேண்டி வராதாமே!
மருந்தே உணவாகாமல்
உணவே மருந்தாகும் என்ற
கதை, பாட்டு, கட்டுரைகள் எனப் பல
எங்கட மாதகலூர்
மயில்வாகனப் புலவர் வாசிகசாலையில்
வாசிக்கக் கிடைத்த பத்திரிகைகளில்
படித்துப் பொறுக்கித் தொகுத்த தகவலையே
சுருக்கிச் சொல்லி இருக்கிறேன்!
உண்ணானத் தான் சொல்கிறேன் - அதற்காக
தங்கட உழைப்பில தான்
மண் அள்ளிப் போட்டிட்டான் என்று
மருத்துவர்கள் என்னைத் திட்டக்கூடாது!

ஆக்கம்:-
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

வியாழன், 3 ஜூலை, 2025

சாகும் நாள் தெரியவில்லையே!

பிறந்தவர் எல்லோரும்
இறப்பது வழக்கம் தான்!
எப்போது சாவு வரும் என்று
எனக்கும் தெரியவில்லையே!
என்னுயிரைப் பறிக்கும் இயமனோடும்
தொடர்புகொள்ள முடியவில்லையே!
இயமனின் கணக்குப்பிள்ளையோடும்
(சித்திரபுத்திரனார் உடனும்)
தொடர்புகொள்ள முடியவில்லையே!
என் சாவு எப்பவென்று
யாரிடம் கேட்டறிவது?
யாராச்சும் சொன்னார்கள் என்றால்
எள்ளுப் போல
எப்பன் நிம்மதியாகக் கிடப்பேனே!
என் சாவு எப்ப வரும் என்று
எனக்கும் தெரியவில்லையே!
இப்படிக்கு
சாவு வருமெனக் காத்திருக்கும்
பிள்ளைகளால் கைவிடப்பட்ட
முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்!

ஆக்கம்:-
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

செவ்வாய், 1 ஜூலை, 2025

மனைவியைத் தேடுகிறார்


மச்சாளைப் பார்த்தீங்களா

மாமரத் தோப்புக்குள்ளே
                            (மச்சாளைப்)

சாப்பிட்டதும் போன மச்சாள்
கூப்பிட்டதும் வரவில்லையே
                            (சாப்பிட்டதும்)

மூக்கு முட்டச் சாப்பிட்டாங்க
சமிபாடடைய நடந்து போனாங்க
மாம்பழமாம் பிடுங்கப் போனாங்க
வீட்டுக்குத் திரும்பி வரவில்லையே!
                    (மச்சாளைப்) (சாப்பிட்டதும்)

தோழி வீட்டுக்குப் போனாங்களா
மாமன் வீட்டுக்குப் போனாங்களா
சின்ன மச்சானோட ஓடிப் போனாங்களா
யாராச்சும் கண்டால் கூட்டி வாங்கோ
                  (மச்சாளைப்) (சாப்பிட்டதும்)
அறிவுக் களஞ்சியம் எனக் கட்டினேனங்க
அழகுப் பதுமை  எனக் கட்டினேனங்க
வருவாயைப் சேமிப்பாள் எனக் கட்டினேனங்க
எங்கேனும் கண்டால் கூட்டி வாங்கோ
                  (மச்சாளைப்) (சாப்பிட்டதும்)

சாப்பாடு செமிக்க நடை போட்டவங்க
கூப்பாடு போட்டும் வீட்டுக்கு வரேலைங்க
தாலிகட்டிய மச்சான்  எனக்கோ துன்பமங்கோ
கேலி பண்ணாமக் கண்டால் வரச் சொல்லுங்கோ
      (மச்சாளைப்) (சாப்பிட்டதும்)

ஆக்கம்:-
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

திங்கள், 14 ஏப்ரல், 2025

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

 


விசுவாவசு 2025 சித்திரை வருடப் பிறப்புப் பலன் 

மேஷம் - 2 வரவு 14 செலவு

இடபம் - 11 வரவு 5 செலவு

மிதுனம் - 14 வரவு 2 செலவு

கடகம் - 14 வரவு 8 செலவு

சிம்மம் - 11 வரவு 11 செலவு

கன்னி - 14 வரவு 2 செலவு

துலாம் - 11 வரவு 5 செலவு

விருச்சிகம் - 2 வரவு 14 செலவு

தனுசு - 5 வரவு 5 செலவு

மகரம் - 8 வரவு 14 செலவு

கும்பம் - 8 வரவு 14 செலவு

மீனம் - 5 வரவு 5 செலவு

செலவைக் குறைத்து வரவைப் பெருக்கப் பார்க்கவும்.





சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

மோதலும் காதலும்

ஒரு பெண்ணுக்கும்
ஒரு ஆணுக்கும்
ஒரு பெரிய மோதல்! - அது
காதலைச் சொல்லப் புறப்பட்ட போது 
ஏற்பட்ட மோதல்!

என் அழகில் மயங்கி விழுந்தாயா?
எந்தன் அப்பனாத்தை
சேர்த்து வைத்திருக்கும்
சொத்தில் மயங்கி விழுந்தாயா 
என்கிறாள் பெண்!

என் உழைப்பில் மயங்கி விழுந்தாயா?
என்னை அடைந்தால்
எல்லாம் கிடைக்கும் என்று
நம்பி வந்தாயா என்கிறான் ஆண்!

மோதலின் பின் கொஞ்சம் புரிதலும்
ஏற்படத்தானே செய்யும்!

நீண்ட காலம் பழகியதன் விளைவு
இப்படித்தான் இருக்கும் என்று
நான் அறிந்திருக்கவில்லை!
என் மீது தப்புக் கணக்கா
உன் மீது தப்புக் கணக்கா
ஒருவரை ஒருவர்
மீளவும் கேட்டுப் பார்த்தனர்!

என் எதிர்பார்ப்பு இவ்வளவுதான்
அதுபோல
உன் எதிர்பார்ப்பும் இருக்குமாயின் 
இணைந்து பயணிக்கலாம் என்று
ஒருவரை ஒருவர்
மீளவும் கேட்டுப் பார்த்தனர்!

ஒரு கணப்பொழுது மௌனத்தின் பின்
ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டதற்குச் சான்றாக
ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர்!
அடுத்தது என்ன?
அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது!

ஞாயிறு, 9 மார்ச், 2025

ஊடகங்களில் தவறு செய்தால் சிக்கல் வரும்

 ஊடகங்களில் பணியாற்றுவது என்பது கத்தியின் கூர் விளிம்பில் கால் வைத்து நடப்பது போன்று இருக்கும்.  இது அச்சு ஊடகத்திலும் சரி மின் ஊடகத்திலும் சரி இன்றைய சமூக ஊடகத்திலும் சரி கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 


எனவே யூடியூப், டிக்டாக் ஊடாக எந்த காட்சி அமைப்பையும் வெளியிடும் போது மாற்றாரைப் புண்படுத்தும் படி வெளியிடுவதாய் இருக்கக்கூடாது. உலகம் உங்களை ஒரு நாள் ஒதுக்கி வைக்கும். சட்டம் ஒரு நாள் உங்களை சிறையில் அடைக்கும். ஆகவே,  நீதி, தர்மத்தைக் கடைப்பிடித்து ஊடகங்களில் பணியாற்றுவது தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

 

youtuber ஒருவர் கைது செய்யப்பட்டதன் விளைவாக இப்பதிவைப் பகிருகின்றேன்.

திங்கள், 3 பிப்ரவரி, 2025

யார்க்கெடுத்து நாமுரைப்போம்!

 யார்க்கெடுத்து நாமுரைப்போம்!

    (பல விகற்ப இன்னிசை வெண்பா)



தொற்றுநோய்தான் காற்றிலிடக் குப்பைதான் போடுவார்தான் 

கற்றவரும் மற்றவரும் தான்தெருவில் போடுவார்தான் 

யார்தான் அயலாரும் தான்தமிழர் என்றுணர்வார்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.


பேச்சிலதான் தேன்போலத் தித்திக்கச் சொல்லலாமே

பேச்சிலதான் நல்லுறவும்  தான்பிரியத் திட்டலாமே 

யார்தான் உணர்ந்தும்தான் நற்றமிழில் பேசுகின்றார்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.


வெளியீடு சொல்லவேணும் ஈழவரின் ஆக்கமென்று

நம்எழுத்துச் சொல்லவேணும் நம்மவரின் நற்பெயரை

யார்தான் பிறமொழி சேர்த்தெழு தாதவராம்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.


அடையாளம் சொல்லவேணும் நாம்ஈழத் தாரென்றாம்

நம்பேச்சுச் சொல்லவேணும் நம்தமிழ்வ ளம்இதுவாம்

யார்தான் செயலளவில் தாம்கடைப்பி டிக்கிறாராம்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.


தமிழர் அடையாளம் தான்அழியப் போகிறதே

நம்தமிழ் தன்வளம் குன்றத்தான் போகிறதே

யார்தான் கணக்கில் எடுத்துணர்ந்து ஒன்றிணைவார்

யார்க்கெடுத்து நாமுரைப்போம் இன்று.

சனி, 18 ஜனவரி, 2025

2025 தைப்பொங்கல் ஒரு பார்வை

 


தைத்திருநாள் சொல்லும் செய்தி என்ன
இத்தரைக்கு ஒளிதரும் பகலவனுக்குத் தான்
நெல்லறுவடை நாள்கண்டு  புத்தரிசி குத்தியெடுத்து
இல்லங்களில் பொங்கிப் படைத்து நன்றிகூறவே!

---------
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்பதை நம்பித்தான்
பழசைக் கழித்து விடும் நானை
போகிப் பண்டிகை என்கிறோம்!
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்று நம்பித் தான்
வெயில், மழை தருவோனுக்கு
நன்றி கூறும் கோட்பாட்டைச் சொல்லி
பொங்கிப் படைத்து உண்டு களித்து
தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம்!
உண்டு, களித்துக் கொண்டாட உதவிய
எம்வீட்டுச் செல்வங்களான பசு, எருது
எல்லாவற்றுக்கும் அடுத்த நாள் கூட
நன்றி கூறும் பொங்கல் படையலை
பட்டிப்பொங்கல் என்கிறோம்!
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்பதற்கு வலுச் சேர்க்கத் தான்
உறவுகள் வீட்டுக்குப் போய் வந்து
உண்டு களித்து உறவைப் பலப்படுத்தும்
நன்நாளைத் தான் மீண்டுப் பாரும்
காணும் பொங்கல் என்கிறோம்!
உழவர் திருநாள் உறவுகள் பெருநாள்
நன்றி கூறும் பண்பாட்டு நாள்
தமிழுக்கு முதல் நாள் தைத்திருநாளே!
----------
பொங்கல் பொங்கல் என்று
பொங்கலும் வந்து போயிட்டு!
எங்கள் நன்றியைத் தெரிவித்தோம்
எங்களுக்கு ஒளிதரும் பகலவனுக்கு!
இந்தத் தையில் இருந்தாவது
எந்தன் உறவுகளைப் பலப்படுத்துவதே
இனியெங்கள் வேலையாகட்டும்!


செவ்வாய், 14 ஜனவரி, 2025

2025 தமிழர் புத்தாண்டு வாழ்த்துகள்



தை பிறந்தால் வழி பிறக்கும்
என்பதை நம்பித்தான்
பழசைக் கழித்து விடும் நானை
போகிப் பண்டிகை என்கிறோம்!
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்று நம்பித் தான்
வெயில், மழை தருவோனுக்கு
நன்றி கூறும் கோட்பாட்டைச் சொல்லி
பொங்கிப் படைத்து உண்டு களித்து
தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம்!
உண்டு, களித்துக் கொண்டாட உதவிய
எம்வீட்டுச் செல்வங்களான பசு, எருது
எல்லாவற்றுக்கும் அடுத்த நாள் கூட
நன்றி கூறும் பொங்கல் படையலை
பட்டிப்பொங்கல் என்கிறோம்!
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்பதற்கு வலுச் சேர்க்கத் தான்
உறவுகள் வீட்டுக்குப் போய் வந்து
உண்டு களித்து உறவைப் பலப்படுத்தும்
நன்நாளைத் தான் மீண்டுப் பாரும்
காணும் பொங்கல் என்கிறோம்!
உழவர் திருநாள் உறவுகள் பெருநாள்
நன்றி கூறும் பண்பாட்டு நாள்
தமிழுக்கு முதல் நாள் தைத்திருநாளே!
 

வியாழன், 9 ஜனவரி, 2025

அடிக்கடி நினைவுக்கு வரும் வன்னி




நான்

செத்து செத்து உயிர்த்து வந்த கதையை சொல்ல வந்தேன்! புதுக்குடியிருரப்பில் இருந்து வந்தேன்
ஒட்டுசுட்டான் பக்கமாக வந்த வெடித்த
எறிகணைத் துண்டுகள் பல
என் வீட்டிற்குள்ளும் பாய்ந்தன...
ஒன்று முற்றத்துப் பலா மரத்தில் இருந்த
பலா  பழத்தைக் கீறிக் கிழித்தது!
இன்னொன்று முற்றததில் நின்ற
உந்துருளியின் எரிபொருள் தாங்கியை
உரசிக் கொண்டு போனது!
வேறு சில வீட்டுக் கூரையை
கிழித்துக் கொணடு போனது!
வீட்டிற்குள் உறங்கிய என்னையும் இல்லாளையும்
குத்திக் கிழித்து உயிர் குடிக்காமல் போக
புதுக்குடியிருப்பு, கோம்பாவிலில் குடியிருக்கும்
காட்டு ஆமணக்கு விநாயகர் தான்
காப்பாற்றியது என்று இன்றும் அழுகின்றோம்!
தமிழன் உயிர்களைக் குடிக்கும்
கொத்துக் (கிளஸ்டர்) குண்டுகளுக்கும்
தமிழன் உடைமைகளை எரிக்கும் நெருப்புக்  (பொஸ்பரஸ்) குண்டுகளுக்கும்
முகம் கொடுக்க முடியாமல்
ஊர் ஊராகப் பாதுகாப்புத் தேடி அலைந்தோம்!
போகும் வழிகளில் பிணங்களைக் கடந்து
போய்க் கொண்டு இருக்கும் போது
சூட்டுச் சத்தம், குண்டுச் சத்தம் கேட்க
பத்தாப்பளைக் கண்ணகி அம்மாவே
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரரே
எங்களைக் காப்பாற்று என்றழுதுகொண்டு
போய்க் கொண்டிருக்கையிலும்
நாம் கடந்த பின் எமக்குப் பின்னே
நாம் வந்த வழியில் குணடுகள் வெடித்தன...
அம்மோய் அப்போய் என்றழும
உறவுகளின் குரல்களும். காதைக் கிழித்தேன்...
நிப்பாட்பாத நிப்பாட்டாத - அடுத்த
குண்டு விழுந்தால் நாங்கள் செத்துப் போவோம்
என்றழும் இல்லாள் பேச்சுக் கேட்டு
என் உந்துருளியை முறுக்கிச் சென்றேன்!
இரணைப்பாலை, அம்பலவன் பொக்கணை,
சாளம்பன், இரட்டை வாய்க்கால்,
முள்ளிவாய்ககால், வாட்டுவாகல் என
பஞ்சம் பிழைக்கத் தஞ்சம் தேடி அலைந்தோம்!
முள்ளிவாய்க்கால் தள்ளி வந்து
வட்டுவாகல் நெருங்கு முன்
ஆங்கோர் இடத்தில் கிடந்த வேளை
அரூகே வந்தாங்கே வெடித்த குண்டால்
உடல் சிதறிப் பல உயிர்கள் பிரிய
பிள்ளையாரோ சிவபெருமானாரோ
இயேசுநாதரோ/கர்த்தரோ அல்லாஹ்வோ
எல்லா மதங்களும் சுட்டும் கடவுள்
என்னையும் இல்லாளையும் காப்பாற்றினார்!
வன்னி மண்ணில் போர்ச் சூழலில்
நாம் வாழ்ந்த வாழ்க்கை நிலை எழுத
உலகளவுத் தாளும் வானுயர்ந்த எழுதுகோலும்
போதாது போதாது - எமது
வாழ் நாளில் எழுதி முடிக்கவும்
இயலாது இயலாது - அந்த
கடவுள் தான் நீண்ட ஆயுளும்
தரவேண்டும்!








புதன், 8 ஜனவரி, 2025

வட்டிக்கு வட்டி கட்ட இயலாத போது

 


"நிலம் குட்டி போடாது 

பணம் குட்டி போடும்" என்று தான்

அன்று ஒரு நாள் 

எனது அப்பா சொன்னார்.

தொடக்கத்தில் - உழைப்பில்

மிச்சம் பிடித்துக் கொடுக்கலாமென

வட்டிக்குப் பணம் எடுப்பாங்க...

அடுத்த கட்டத்தில் - முதலில்

வட்டிக்கு எடுத்த பணத்திற்கு 

வட்டி கொடுக்கத் தான் 

வட்டிக்குப் பணம் எடுப்பாங்க...

பிறகென்ன - உழைக்கிறதே

வட்டிக்கு வட்டி கட்டப் போய்விடும்!

அதற்குப் பிறகென்ன

தின்னக் குடிக்க வழியிருகாது பாரும் தூக்கில் தொங்கிச் சாகப் போவாங்க!

அடடே! பணம் குட்டி போடாது

வட்டிக்கு வட்டி போட்டுப் பெருக்க

பிள்ளை, குட்டிகளைத் தூக்கில் தொங்கி

சாக வைக்கத் தூண்டுகிறதே!