Translate Tamil to any languages.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

பட்டிமன்றம்

தெருவோரத்து அரங்கொன்றில்
'கல்லெறியா சொல்லெறியா' என்று
பட்டிமன்ற நிகழ்வைப் பார்த்துக் கேட்டேன்.

காய்க்கிற மாவுக்குக் கல்லெறியாம்
தெருச்சுற்றும் மனிதருக்குச் சொல்லெறியாம்
இருதரப்புப் பட்டிமன்றப் பேச்சாளரும்
ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்லெறி வீசினர்!

காய்க்கின்ற மாவில காய், கனிகள்
நிறையத் தான் தூங்குமே!
'ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' என
காய்க்கிற மாவுக்குக் கல்லெறி தானதிகம்!

தெருவால போகிற ஆண்ணென்ன பெண்ணென்ன
உள்ளத்தில் நிறையச் சுமந்து செல்லலாம்!
ஆளுக்காள் அடுத்தவர் தகவல் அறிய
கேள்விக் கணைகளாகச் சொல்லெறி வீசுவரே!

நல்லவரோ நறுக்காகப் பதில் எறிந்தாலும்
கெட்டவரோ கதையளந்து பதில் எறிவாரே!
சொல்லெறிந்தார் ஒதுங்கினாலும் பார்த்தவர் விடமாட்டாரே
ஆளுக்காள் ஆயிரம் கதையளப்பினம் கண்டியளோ!

ஏட்டிக்குப் போட்டியாகப் பட்டிமன்றம் உச்சக்கட்டத்தில்
சொல்லெறியும் பதிலடியும் சுவையான விருந்தாச்சு!
கேட்பவரோ முடிவறியத் துடியாய்த் துடித்தனர்
மொட்டைத்தலை நடுவரோ குட்டை அவிட்டார்!

சுவைதரும் மாங்காய்க்குக் கல்லெறி என்றாலும்
அப்பாவி மாமரத்துக்குத் தான்வலி பாருங்கோ!
குற்றவாளியறியச் சொல்லெறி வீசியோர் இருந்தாலும்
சுற்றியுள்ளவரின் கேலியும் நையாண்டியும் சுவைதானே!

ஆக்கம்:
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!