Translate Tamil to any languages.

வியாழன், 9 ஜனவரி, 2025

அடிக்கடி நினைவுக்கு வரும் வன்னி




நான்

செத்து செத்து உயிர்த்து வந்த கதையை சொல்ல வந்தேன்! புதுக்குடியிருரப்பில் இருந்து வந்தேன்
ஒட்டுசுட்டான் பக்கமாக வந்த வெடித்த
எறிகணைத் துண்டுகள் பல
என் வீட்டிற்குள்ளும் பாய்ந்தன...
ஒன்று முற்றத்துப் பலா மரத்தில் இருந்த
பலா  பழத்தைக் கீறிக் கிழித்தது!
இன்னொன்று முற்றததில் நின்ற
உந்துருளியின் எரிபொருள் தாங்கியை
உரசிக் கொண்டு போனது!
வேறு சில வீட்டுக் கூரையை
கிழித்துக் கொணடு போனது!
வீட்டிற்குள் உறங்கிய என்னையும் இல்லாளையும்
குத்திக் கிழித்து உயிர் குடிக்காமல் போக
புதுக்குடியிருப்பு, கோம்பாவிலில் குடியிருக்கும்
காட்டு ஆமணக்கு விநாயகர் தான்
காப்பாற்றியது என்று இன்றும் அழுகின்றோம்!
தமிழன் உயிர்களைக் குடிக்கும்
கொத்துக் (கிளஸ்டர்) குண்டுகளுக்கும்
தமிழன் உடைமைகளை எரிக்கும் நெருப்புக்  (பொஸ்பரஸ்) குண்டுகளுக்கும்
முகம் கொடுக்க முடியாமல்
ஊர் ஊராகப் பாதுகாப்புத் தேடி அலைந்தோம்!
போகும் வழிகளில் பிணங்களைக் கடந்து
போய்க் கொண்டு இருக்கும் போது
சூட்டுச் சத்தம், குண்டுச் சத்தம் கேட்க
பத்தாப்பளைக் கண்ணகி அம்மாவே
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரரே
எங்களைக் காப்பாற்று என்றழுதுகொண்டு
போய்க் கொண்டிருக்கையிலும்
நாம் கடந்த பின் எமக்குப் பின்னே
நாம் வந்த வழியில் குணடுகள் வெடித்தன...
அம்மோய் அப்போய் என்றழும
உறவுகளின் குரல்களும். காதைக் கிழித்தேன்...
நிப்பாட்பாத நிப்பாட்டாத - அடுத்த
குண்டு விழுந்தால் நாங்கள் செத்துப் போவோம்
என்றழும் இல்லாள் பேச்சுக் கேட்டு
என் உந்துருளியை முறுக்கிச் சென்றேன்!
இரணைப்பாலை, அம்பலவன் பொக்கணை,
சாளம்பன், இரட்டை வாய்க்கால்,
முள்ளிவாய்ககால், வாட்டுவாகல் என
பஞ்சம் பிழைக்கத் தஞ்சம் தேடி அலைந்தோம்!
முள்ளிவாய்க்கால் தள்ளி வந்து
வட்டுவாகல் நெருங்கு முன்
ஆங்கோர் இடத்தில் கிடந்த வேளை
அரூகே வந்தாங்கே வெடித்த குண்டால்
உடல் சிதறிப் பல உயிர்கள் பிரிய
பிள்ளையாரோ சிவபெருமானாரோ
இயேசுநாதரோ/கர்த்தரோ அல்லாஹ்வோ
எல்லா மதங்களும் சுட்டும் கடவுள்
என்னையும் இல்லாளையும் காப்பாற்றினார்!
வன்னி மண்ணில் போர்ச் சூழலில்
நாம் வாழ்ந்த வாழ்க்கை நிலை எழுத
உலகளவுத் தாளும் வானுயர்ந்த எழுதுகோலும்
போதாது போதாது - எமது
வாழ் நாளில் எழுதி முடிக்கவும்
இயலாது இயலாது - அந்த
கடவுள் தான் நீண்ட ஆயுளும்
தரவேண்டும்!








கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!