Translate Tamil to any languages.

வெள்ளி, 2 ஜூன், 2017

பாரதி பாட்டுக்கு நான் பொருள் கூறினால் சரியாகுமோ?


"தமிழ்த் தாய்" என்ற தலைப்பிலான மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆக்கிய கவிதையிலே "மெல்லத் தமிழினிச் சாகும்" என்றொரு அடி வருகிறது. அதனை நாம்மாளுங்க "தமிழ் இனி மெல்லச் சாகும்" என்று "தமிழ்த் தாய்" என்ற கவிதையிலே பாரதி சொல்லியிருந்தார். "கவிஞன் வாக்குப் பொய்ப்பதில்லை" என்றும் பாரதி சொன்னபடித் தமிழ் அழிகிறது என்றும் நாம்மாளுங்க பரப்புவது முட்டாள் செய்தியே!

இச்செய்தியைத் தானும்
தமிழ்த் தாயும் அறிவாளா?
பாரதியும் அறிவானா?
இப்படியான பொய்ச் செய்தியை
பரப்புவோர் தமிழை அறிந்தனரோ!

பாரதியார் ஆக்கிய "தமிழ்த் தாய்" என்ற தலைப்பிலான கவிதையை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

அக்கவிதையை மீள மீளப் படித்துப் பாருங்கள். உண்மையை ஒரு கணம் எண்ணிப் பார்க்கலாம். உண்மையை அறிந்தோருக்கு "தமிழ் வாழ வேண்டுமாயின்... நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?" என்று புரிந்திருக்கும்.

சரி, பாரதியார் ஆக்கிய "தமிழ்த் தாய்" என்ற கவிதையை வாசிக்க முன் எண்ணிப் பார்த்தீர்களா? சரி, விளங்காது இருப்பின் இரண்டாவது முறையாவது வாசித்துப் பார்த்தீர்களா? ஆங்கே, தமிழ்த் தாய் தன் நிலையைத் தானே உரைப்பதாகக் கவிதையைப் பாரதி தன் கைவண்ணத்தில் காட்டியுள்ளார்.

"கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!" என்ற ஈற்றடியின் கீழே "ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்." என்ற ஈற்றடி வரையான பாடல்களை மீள மீளப் படித்துப் பார்த்தீர்களா?

"புதுப் புதுக் கலைகள், நுட்பங்கள் மேலை நாடுகளில் வளரும் வேளை; அவ்வாறான மேன்மைக் கலைகள் தமிழில் வளரவில்லை என்றும் அவை சொல்லுந் திறமை தமிழில் இல்லையென்றும் மெல்லத் தமிழினிச் சாக, அந்த மேற்கு மொழிகள் உலகெங்கும் ஓங்குமென்றும்" என்றந்தக் கூறத் தகாதவன் (பேதை) கூறிய வேட்டு (வசை) மொழி தன்னைத் தாக்கலாமோ? எனவும்

"எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வங்கள் எல்லாம் தமிழிற்குள் கொண்டுவந்து சேர்க்க வேண்டும், கடவுள் அருளோடு, இந்நிலையுணரந்த புலவர் முயற்சியாலும் (அவர் தம் பாட்டுத் திறத்தால்) இந்தப் பெரும் பழி தீரும். தமிழன்னை உலகத்தில் என்றும் புகழ் உச்சியில் இருப்பாள்!" என்றும் தமிழ் மொழி உலகில் சிறந்து விளங்கும் என்றும் தமிழர் நாம் கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தாய் கூறிமுடிப்பதாகப் பாரதி தன் கைவண்ணத்தில் காட்டியுள்ளார்.

முடிவாகப் பாரதி தன் கைவண்ணத்தில் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்றோ "தமிழ் இனி மெல்லச் சாகும்" என்றோ பொருள் படப் பாப்புனையவில்லையே! "தமிழ் வாழ வேண்டுமாயின்... நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?" என்றே பாரதி தன் கைவண்ணத்தில் காட்டியுள்ளார்.

பாரதிக்கு முப்பத்திரண்டு மொழிகள் தெரிந்திருந்தாலும் தமிழ் மீது தான் அவருக்கு அதிக பற்று இருந்தது. அவரது படைப்புகள் யாவிலும் தமிழ் பற்றும் தமிழர் பற்றும் தமிழ்நாட்டுப் பற்றும் அதிகமாகத் தலையைக் காட்டும். பாரதியின் உண்மையான எண்ணங்களை உணர்ந்து நாம் பகிருமோம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!