Translate Tamil to any languages.

திங்கள், 5 ஜூன், 2017

தமிழ் இனி மெல்லச் சாகாது!


‘அ தொட்டு ‘ஔ வரையான உயிர் எழுத்துகளும் ‘க் தொட்டு ‘ன் வரையான மெய் எழுத்துகளும் இருநூற்றிப் பதினாறு உயிர்மெய் எழுத்துகளும் ‘ஃ’ எனும் ஆயுத எழுத்துமாக இருநூற்றி நாற்பத்தேழு எழுத்துகளைக் கொண்டது எங்கள் தாய்த் தமிழ் மொழியே!

தம் - உள் = தமிழ் என்றும் தம் - உள் - அமிழ்(து) = தமிழ் என்றும் 'தமிழ்' தோன்றியதாகக் கருதப்படுகிறது. த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம் என்றவாறு உயிர்-மெய் எழுத்து, மெய்யெழுத்து இணைந்த சொல்லே தமிழ் என்கிறோம். இயல், இசை, நாடகம் இணைந்த மொழியாகியதால் தமிழை "முத்தமிழ்' என்றும் அழைக்கின்றோம்.

யாம் அறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!” என்று பாவலர் பாரதியாரும்
தமிழுக்கு அமுதென்று பேர் – அந்த
தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர் என்று பாவலர் பாரதிதாசனும்
தங்கள் நூல்களில் எங்கள் தாய் மொழியாம் தமிழைப் புகழ்ந்து பாடியுமுள்ளனரே!

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
(தமிழன் பாட்டு: 1-2) எனவும்
தமிழன் என்று ஓர் இனமுண்டு
தனியே அவர்க்கு ஒரு குணமுண்டு
(தமிழன் இதயம் :1-2) எனவும்
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் தமிழ் இனத்தைப் பற்றிப் பெருமையாகப் பாடியுள்ளதாகத் தளமொன்றில்

என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”
எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால் என்று கம்ப இராமாயணமும்

இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன் என்று தமிழ் விடுதூதும்
தமிழின் இனிமையை வெளிப்படுத்துகிறது.

திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்

"பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாலம், துளு ஆகிய மொழிகள் வட மொழியின் துணையின்றி தனித்தியங்கும் வல்லமை கிடையாது. அம்மொழிகளில் வட மொழியினை நீக்கிவிட்டால் அம்மொழிகள் உயிர் அற்றதாகிவிடும். வட மொழியின் அடிப்படையிலே அவை கட்டப்பட்டுள்ளன. திராவிட மொழிகளில் தமிழ் மட்டும்தான் வட மொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது

தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல்

உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்." என்றவாறு தளமொன்றில் (http://nyanabarati.blogspot.com/2009/03/blog-post_03.html) விளக்கம் தரப்பட்டிருந்தது. 

இப்படி, எண்ணிப் பார்த்தால் தமிழைப் பற்றி எத்தனையோ கோடி வரிகளில் எழுத முடியுமே! “தமிழ் என்பது கரை தேட முடியாத நெடுங்கடல். அதனை நீந்திக் கடந்தவரே தமிழறிஞர்!” என்று எனக்குத் தமிழ் புகட்டிய ஆசிரியர் சொல்லித் தந்தார். ஆமாம், தமிழ் தொன்மையான மொழி, செம்மையான மொழி என்று முழங்குவதை விடத் ‘தமிழ் பற்றிச் சில வரிகள் அதாவது தமிழ் மொழியை ஒட்டிய எத்தனையோ உண்மைகளைப் பகிர முன்வாருங்களேன்.

இப்படிப்பட்ட தமிழின் நிலையும் தமிழரின் வாழ்வும் காலவோட்டத்தில் மாற்றமடைந்ததை ஏற்றுத் தான் ஆகவேண்டும். வணிக நோக்கிலும் தொழில் வாய்ப்பை நாடியும் உள்நாட்டுப் போர் என்றும் உலகெங்கும் தமிழர் பரவி வாழ, ஏனைய மொழிகள் தமிழுக்குள் வந்து குந்திவிட்டன. அதேவேளை தமிழர் பண்பாட்டிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. இன்றைய தமிழும் தமிழர் பண்பாடும் அன்றைய (பழங்கால) நிலையிலிருந்து எவ்வளவோ வேறுபடுகின்றது.

இரண்டு தமிழ் தெரிந்த வெள்ளைக்காரரைப் பாருங்கள். அவர்கள் சந்தித்தால் அவர்களது தாய்மொழியான ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள். இரண்டு ஆங்கிலம் தெரிந்த தமிழரைப் பாருங்கள். அவர்கள் சந்தித்தால் அவர்களது பிறமொழியான ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள். அவ்வாறான தமிழரைக் கேட்டால் “இது நமது எடுப்பு (Style)” என்பர். இதன்படிக்குத் தமிழர் தாய்மொழிப் பற்றுக் குறைந்தவர்கள் எனக் கருத இடமுண்டு.

இப்படிப் பல்வேறு சாட்டுகளைச் சொல்லி தாயகத்துத் தமிழரும் புலம்பெயர் நாட்டுத் தமிழரும் தாய்மொழிப் பற்றுக் குறைந்தவர்களாகி பிறமொழிக் கலப்பு அல்லது பிறமொழி பேசுவோராக மாறிவிட்டனர். இந்நிலையே “மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது. ஆயினும் மெல்லத் தமிழ் இனிச் சாக இடமில்லை எனத் தமிழை வாழவைக்க முயற்சி எடுக்கும் தமிழ் உறவுகளைப் பாராட்டுவோம்.

முந்தைய உலகில் 7500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம் பின் மொழிகள் அழிந்து வரலாயிற்று. 1950 இற்கு முன் 4500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம் 2000 இற்கு முன் 2500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம் 2020ஆம் ஆண்டுக்கு பின் 1500 இற்கும் குறைந்த மொழிகள் இருக்குமாம் 2040ஆம் ஆண்டுக்கு பின் 150 இற்கும் குறைந்த மொழிகள் இருக்குமாம்…” என்றொரு தகவலை 2000ஆம் ஆண்டில் இலங்கை வானொலியில் கேட்ட நினைவுண்டு.

ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெவ் அமைப்பின் மொழிகளுக்கான பிரிவு வரும் முப்பது ஆண்டுகளில் அழியவிருக்கும் மொழிகளில் தமிழும் அடங்குவதாகத் தெரிவித்திருப்பதை 2013 காலத்தில் சில இணையத்தளங்களில் படித்தேன். மேலும் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் உலகத்து மொழிகள் பற்றிய ஆய்வு இடம்பெற்றதாம். அதில் அடுத்து வரும் நூறு ஆண்டுகளின் பின்னரும் நிலைத்து வாழப்போகின்ற மொழிகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்னர். அதிலும் தமிழ் மொழியைக் காணவில்லையாம்.

உலகெங்கும் புழங்கிய பல மொழிகள் செம்மையாகப் பேசுவோர் எவருமின்றி வலுவிழந்து, புழக்கமின்றி, அழிந்து போய் விட்டதாகச் செய்திகள் சொல்லுகின்றன. அதனோடு தொடர்புடைய தகவலாக மேலே சொல்லப்பட்டவை இருக்கலாம்.  “இவை எல்லாவற்றையும் ஏன் சொல்ல வேண்டும்?” என நீங்கள் கேட்கலாம். நான் சொல்வது என்னவென்றால், இவற்றின் அடிப்படையில் பார்த்தால் எங்கள் தாய்த் தமிழ் மொழியும் அழிய வாய்ப்பு உண்டென்பதையே!

இப்படி மொழிகள் அழியக் காரணமென்ன? ஒரு மொழி எப்ப தன் அடையாளத்தை இழந்து நிற்கிறதோ, அப்ப அம்மொழி அழிகிறது அல்லது சாகிறது எனலாம். அப்ப மொழியின் அடையாளம் என்றால் என்ன? மொழியின் வரலாற்றுப் பின்னணி (தொன்மை), மொழி கொண்டுள்ள பரப்பு (எல்லை), எழுத்து, சொல் (வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியவை), இலக்கண, இலக்கியமென ஒரு மொழிக்குப் பல அடையாளங்கள் இருக்கிறது.

மேற்படி பார்த்தால் தமிழ் மொழி தன் அடையாளத்தை இழக்கவுமில்லை; சாகவுமில்லை என நீங்கள் கூறலாம். ஆனால், நான் அப்படிக் கூறமாட்டேன். கணினி நுட்பத் தேவை கருதி எழுத்துச் சீர்திருத்தம் செய்த போது தமிழைச் சாகவைக்கத் தொடங்கியாச்சே! இப்ப என்னவென்றால் பிறமொழிப் பாவனை, மொழிபெயர்ப்புத் தேவை என மீண்டும் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுமென முனகுவது தமிழின் சாவுக்கு நாள் குறிக்கும் செயலே.

எழுத்து, பேச்சு இரண்டும் கெட்டால் இலக்கண, இலக்கியங்களைச் சொல்லவும் வேண்டுமா? வேர்ச் சொல் மறந்து பிற சொல் பேசுவதோடு, இலக்கணமற்ற இலக்கியம் படைக்கத் தொடங்கியதும் தமிழின் சாவுக்கான நாள் நெருங்கிவிட்டதே. அதாவது, இலக்கணம் ஓரளவு கையாளப்பட்டால் போதுமென்ற நிலையிலும் பிறமொழிக் கலப்பும் இழையோடி இருக்கையில் படைப்பு ஒன்றில் சொல்ல வந்த செய்தி தான் முக்கியம் என்றால் இனிய தமிழ் எப்படி வாழும்?

இன்றைய ஊடகங்கள் எல்லாமே தமிழென்ற போர்வையில் தமிங்கிலிஸ் தான் வெளிப்படுத்துகிறது. தமிழ் + இங்கிலிஷ் = தமிங்கிலிஸ் எனக் கணிதச் சமன்பாட்டை இன்றைய ஊடகங்கள் அறிமுகம் செய்கின்றன. இன்றைய ஊடகங்கள் வணிக நோக்கில் விளம்பர வெளியீடுகளில் நாட்டம் கொள்வதால் தான், தமிங்கிலிஷ் பயன்படுத்தித் தமிழைக் கொல்கின்றனர். மக்களாய (சமூக) வலைத் தளங்களிலும் நம்மாளுங்க கையாளுவது தமிங்கிலிஸ் தான்!  



இந்தப் படம் எப்படியிருக்கு? பார்த்தால் சிரிப்பு வருகிறதா? தமிழ் பேச வேண்டிய நாம், கலப்பு மொழி பேசி நாள் தோறும் தமிழைக் கொல்லும் நம்மவர் செயலைச் சுட்டி காட்டுகிறதே! இப்படத்தில் “எளிய தமிழ் இருக்க பண்ணு தமிழ் எதற்கு?” என்றொரு குண்டைப் போட்டுடைத்திருக்கிறார்கள். பார்த்தால் புரியும் பேச்சிலும் ஊடகங்களிலும் இப்படித் தான் பண்ணுகிறார்கள்

காலை வேளை பணிக்குச் செல்வதற்கு பேரூந்து நிலையத்திற்குச் சென்றேன். “மோர்னிங் பிறேக் பாஸ்ட் எடுக்காததால றிங்ஸ் குடிக்கணும் போல இருக்கு. அந்தக் கொட்டலில போய் றிங்க் பண்ணிட்டு வாறேன்.” என்று பிரண்டு ஒருவர் பஸ் ஸ்ரொப்பில என்னை விட்டிட்டு எஸ்கேப் ஆயிட்டான். இது பேரூந்து நிலையத்தில் நின்ற நண்பர் ஒருவரின் கூற்று.

நண்பரின் கூற்றில் பத்து ஆங்கிலமும் பதின்மூன்று தமிழும் கலந்து இருக்கிறது. இன்று இருபத்திமூன்றில பத்து ஆங்கிலமாயின் நாளைக்குப் பதினைந்து ஆங்கிலமாகலாம். இப்படிப் போனால் தமிழ் மொழி என்ன மொழியாகும்? இருப்பினும் எல்லாச் சொல்களும் பிறமொழிச் சொல்களாயின் தமிழ் சாவடைந்ததாகத் தான் கருத முடியும்.

ஹலோ!
உங்களைத் தான்
பிளீஸ்!
கொஞ்சம் நில்லுங்களேன்
ஐ லவ் யூ!
மெடம்
நீங்க தான்
என் லைஃப் பாட்னர்!
பிளீஸ்!
எனக்கு நோ சொல்லாதீங்க
நான் சுசயிட் பண்ணிடுவேன்!

இக்கவிதையினை ஆங்கிலத்தில் பதிவு செய்திருந்தால் எழுதியவரை வெள்ளைக்காரி விரும்பியிருக்கலாம். அதேவேளை ஆங்கிலத்திற்கும் பெருமை சேர்ந்திருக்கும்.

இக்கவிதையினைத் தமிழில் பதிவு செய்திருந்தால் எழுதியவரைத் தமிழச்சி விரும்பியிருக்கலாம். அதேவேளை தமிழிற்கும் பெருமை சேர்ந்திருக்கும்.
இந்தத் தமிங்கிலக் கவிதையைப் பத்திரிகையிலோ இணையப் பக்கத்திலோ படித்தோ தொலைக்காட்சியில் பார்த்தோ வானொலியில் வாசிக்கக் கேட்டோ எவளாச்சும் எழுதியவரை விரும்புவாளா? ஆங்கிலத்திற்கோ தமிழிற்கோ பெருமை சேர்ந்திருக்குமா?

ஹலோ ஃப்ரண்ட்! - நீ
வையிட்டில போட்ட சேட்டில
டெய்லி என் கனவில வந்து
பிளாஷ் பண்ணுறியே!” என்று பெண்ணொருத்தி எழுத

ஹாய் பியூட்டி கேர்ள்
றோஸ் லெக்கின்ஸ் இலும்
பறக்கும் வையிட் ரொப் இலும்
உன்னைக் கண்ட பின்னே
எனக்குத் தூக்கமே வரேல்ல!" என்று ஆணொருவன் எழுத

தமிழை மறந்த நிலையில முகநூல் பக்கத்தில காதல் பற்றிக்கொள்கிறதே! முகநூலில தான் என்றால் வலைப்பக்கங்கள் எல்லாவற்றிலும் இப்படித் தான் தமிங்கிலிஸ் தொற்றிக்கொள்கிறது.

ஊதாக் கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன் என்றும்

எக்ஸ்கியூஸ் மீ மிஸ்ரர் கந்தசாமி என்றும்

இன்றைய திரைப்பாடல் எல்லாமே தமிங்கிலிஸ் பாடல்களாகவே ஊளையிடப்படுகிறது. பணத்திற்காகப் பாடல் வரிகளில் பிறமொழி இடைச் செருகலைச் செய்ய வேண்டி இருப்பதாகப் பாடலாசிரியர் ஒருவர் தெரிவித்த நினைவு இப்படித்தான் இன்றைய தமிழ்த் திரை இசைப் பாடல்களிலும் பல மொழிக் கலப்புத் தான்

இப்படி எல்லாம் சுட்டிக் காட்டினால் எனக்கு ஒரு கோடி பக்கம் தேவை. இன்றைக்கோ நாளைக்கோ எனச் சாகக் கிடக்கிற நான், இவற்றை எல்லாம் எப்படித் தொடர்ந்து எழுதுவது. ஆயினும் இலங்கை-மட்டக்களப்பைச் சேர்ந்த உணர்ச்சிப் பாவலர் காசிஆனந்தன் அவர்கள் எழுத, இந்திய-தமிழ்நாட்டைச் சேர்ந்த தேனிசை செல்லப்பா அவர்கள் இசையமைத்துப் பாடிய "தமிழா! நீ பேசுவது தமிழா?" என்ற பாடல் ஒன்றே போதும், அத்தனையும் ஆங்கே சுட்டிக்காட்டப்படுகிறது.

பாடலுக்கான இணைப்பு:

தமிழா! நீ பேசுவது தமிழா?
தமிழா! நீ பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால் ‘மம்மி என்றழைத்தாய்
அழகுக் குழந்தையை ‘பேபி என்றழைத்தாய்
என்னடா, தந்தையை ‘டாடி என்றழைத்தாய்
இன்னுயிர்த் தமிழைக் கொன்று தொலைத்தாய்

தமிழா! நீ பேசுவது தமிழா?

உறவை ‘லவ் என்றாய் உதவாத சேர்க்கை
ஒய்ப் என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை
இரவை ‘நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை ‘ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை

தமிழா! நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான் ‘லெப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி ‘பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் ‘லேட்டா?’
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை ‘பிரண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் ‘சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில ‘வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டியின் உதட்டிலே ‘லிப்ஸ்டிக்கா?’
வீட்டில பெண்ணின் தலையில் ‘ரிப்பனா?’
வெள்ளைக்காரன்தான் நமக்கு அப்பனா?

தமிழா! நீ பேசுவது தமிழா!

நம்ம தமிழில் இருபத்தைந்து பிற மொழிகள் கலந்திருக்க தமிழகத் தமிழ் ஊடகங்களில் பதினெட்டு மொழிகள் கலந்திருக்க ஈழத்துத் தமிழ் ஊடகங்களில் எட்டிற்கு மேற்பட்ட மொழிகள் கலந்திருக்க நம்மாளுகளின் கைவண்ணத்தில் தமிழ் + இங்கிலிஷ் = தமிங்கிலிஸ் மட்டும் தானா?

 “பழங்காலம் முதல் ஓலி, எழுத்து வடிவமுடையது நம் தமிழ் மொழி! இத்தமிழ் மொழி, ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், சிங்களம், டச்சு, போர்ச்சுக்கீசியன், உருது, துருக்கி, பாரசீகம், அரபு, மலாய் எபிரேயம் பிரெஞ்சு, கிரேக்கம், சீனம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக்கொண்டுள்ளது.” என அறிஞர் ஒருவர் தன் துயரத்தைத் தெரிவித்தார்.

அந்த ஆசாமிக்கு, ஆயாவைப் பற்றித் தெரியாது. ஏதோ அட்வைஸ் பண்ணியிருக்கிறார். ‘மக்கரான உங்க வண்டியைத் திருத்துங்க என்று ஒதுங்கிவிட்டாள்.” இதில பாருங்கோ:
மக்கர் (அரபி மொழி) = இடக்கு/பழுது(தமிழ்)
அட்வைஸ்(ஆங்கிலம்) = அறிவுரை(தமிழ்)
ஆயா(போர்த்துக்கீசம்) = செவிலி/பணிப்பெண்
ஆசாமி(உருது மொழி) = ஆள்(தமிழ்)
ஆகிய பிறமொழிச் சொல்கள் இருக்கே. இனியாவது இவற்றை நீக்கிய பின் பேசுகிற தமிழே தூய தமிழ் என்போம்.

தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும் இப்படித் தான் என் எண்ணத்தில் தோன்றியது. தமிழை வாழ வைக்க முன்வராவிட்டாலும் தமிழைச் சாகவாவது இடமளிக்காமல் பேண முன்வாருங்கள். இன்றைய நம்மாளுகளே! தமிழிலுள்ள பிறமொழிச் சொல்களை அகற்றி, நற்றமிழைப் பேணத் தவறினால், நாளைய வழித்தோன்றல்கள் எப்படிச் செம்மொழியாம் நம்ம நற்றமிழை நுகர முடியும்?

அப்படியென்றால், பிறமொழிச் சொல்களை நமது தமிழில் இருந்து அகற்றி (கழட்டி) விட்டால் தூய தமிழே! அப்படி ஒன்றும் எளிதாகச் (சுகமாகச்) சொல்லிவிட முடியாது. ஏனெனில், எங்கள் இன்றைய கலப்புத் (கெட்ட) தமிழில் இருபத்தைந்திற்கு மேற்பட்ட பிறமொழிகள் நுழைந்திருப்பதோடு அவற்றை இன்றைய நம்மாளுகளால் அடையாளப்படுத்த (இனங்காண) முடியாதும் உள்ளதே!

இன்று நம்மாளுகள் தமிழென்று பேசும் கூழ்த் தமிழில் உள்ள பிறமொழிச் சொல்களை அகற்ற அகரமுதலிகள் (அகராதிகள்) தேவைப்படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் தமிழ் அகரமுதலிகள்(அகராதிகள்) கீழ்வரும் இணைப்பில் உள்ளது.
அல்லது  https://ta.wikipedia.org/s/4ily

மேற்படி அகரமுதலிகளைப் பாவித்துத் எந்த மொழியையும் தமிழ்ப்படுத்தினாலும் அவை தூய தமிழாக அமையாது. அவற்றிலும் வடமொழி இருக்கலாம். தமிழில் கலந்த வடமொழிச் சொல்களை வடசொல் என்று தமிழில் பயன்படுத்தியதால், காலப் போக்கில் அவற்றைத் தமிழ் என்றே நம்மாளுகள் பாவிக்கின்றனர். எப்படியிருப்பினும் வடமொழிச் சொல்களை அதிகம் தமிழில் சேர்த்தது யாரென்று கூறமுடியாது.

ஆறுமுகநாவலர் தனது தமிழ் இலக்கண நூலில் வடமொழிச் சொல்களை நீக்காமல் அவற்றின் உச்சரிப்புகளை தமிழ்ப்படுத்த முயற்சித்துள்ளார் எனக் கருதமுடிகிறது. அதாவது ஜ, ஷ, ஸ, ஹ, ஸ்ரீ, ஆறாம் எழுத்து ‘க உம் ‘ஷ உம் இணைந்த தனியெழுத்து போன்ற தமிழில் பயன்படுத்தப்படும் ஆறு வடமொழி எழுத்துக்களை நீக்கி அதற்கு ஈடான தமிழ் எழுத்துக்களைப் பாவித்து தனது முயற்சியைச் செய்துள்ளார்.

எடுத்துக்காட்டாக சந்தோஸம் என்பதை சந்தோசம் எனப் பாவித்திருக்கிறார். ஆனால் சந்தோசம் என்பதைத் தமிழ்ப்படுத்தினால் மகிழ்ச்சி என்றே வருகிறது. எனவே, வடமொழியைக் கழட்டினால் போதாது; பிற மொழி (எ.கா.- வடமொழி) எழுத்துக்களுக்குப் பதிலாகத் தமிழ் எழுத்துக்களைப் பாவித்துப் பேசப்படும் சொல்களையும் அகற்றவும் வேண்டும்.
எ.கா.-
விஷயம் – வடமொழி.
விடயம் – போலித் தமிழ்.
பற்றியது – தூய தமிழ்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று தமிழில் இல்லாத எழுத்துக்களையோ சொல்களையோ பாவிப்போமானால் உலகமெங்கும் தூய தமிழைப் பேண இயலாது போய்விடும். உண்மையில் இல், எள், கல் என்று ஏதாவது ஒரு முதற்(வேர்ச்) சொல்லிலிருந்து தான் தமிழ் சொல் அமைந்திருக்கும். தமிழ் சொல் உச்சரிப்பில் எந்தவொரு வடமொழி எழுத்தோ(வடமொழி எழுத்துப் பாவிக்கும் சொல் வடசொல் ஆகும்) பிறமொழி எழுத்தோ உள்வாங்கப்பட்டிருப்பின் அவை தமிழ் சொல் அல்ல. அவற்றைப் பயன்படுத்தினால் தூய தமிழாக அமையாது.

எழுதும் போது கூட ஒரு பதிவில் பிறமொழி வரவேண்டிய தேவை இருப்பின் அவற்றை அடைப்புக்குள் அடைத்துப் பாவிக்கலாம். அதாவது, வணக்கம் (Welcome) அல்லது நன்றி (Thanks) என்றவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், குடிநீர் (Water), கடுமை(சீரியஸ்), நகைச்சுவை (தமாஸ்) என்றவாறு பயன்படுத்தி வெளியிட முன்வாருங்கள். தூயதமிழை இயல்புக்குக் கொண்டு வரும் வரை தூயதமிழ்ச் சொல்லை அடுத்து அடைப்பிட்டு அதற்குள்ளே பிறமொழிச் சொல்லையும் பேணவேண்டியுள்ளது.

தமிழின் சிறப்பைக் கெடுக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்ட தமிழ்ப் பகைவர்கள் சிலர், ”தனித் தமிழ்ச் சொற்கள் சிலருக்குப் புரியவில்லை. ஆதலால் புரியும் தமிழில் எழுதுகிறேன் எனக் கூறிப் பிறமொழிச் சொல்களை வேண்டுமென்றே புகுத்தித் தமிழை அழித்து வருகின்றனர்.” என அறிஞர் ஒருவர் தனது இணையப் பக்கத்தில் தெரிவிக்கின்றார்.

இச்செய்தி உண்மையாகவும் இருக்கலாம். தனித் தமிழ்ச் சொல்கள் சிலருக்குப் புரியவில்லை என்பதை விட, தெரியவில்லை என்றே கூறலாம். ஆயினும், நாம் முயற்சி செய்தால் தனித் தமிழ்ச் சொல்களை அறிய முடியும். எனவே, தமிழ் – பிறமொழிச் சொல் அகரமுதலியைப் படித்தால் தான் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும். அதற்கு இலகுவாக ஓர் தமிழ் – பிறமொழிச் சொல் அகரமுதலியின் விரிப்பைத் தருகின்றேன்.

நூல் : பிறமொழிச் சொல் அகராதி
ஆசிரியர் : எஸ்.சுந்தர சீனிவாசன்
பதிப்பாசிரியர் : விகரு.இராமநாதன்
முதற்பதிப்பு : அக்டோபர், 2005
வெளியீடு : சிறி இந்து பப்ளிகேஷன்ஸ்
வெளியீட்டாளர் முகவரி :-
இல:40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,
(உஸ்மான் ரோடு), த.பெ.எண் : 1040,
தியாகராய நகர் – சென்னை 600 017.

தமிழ்மொழி வாழ வேண்டும் என்றால் தமிழர்களது மக்களாய (சமூக), பண்பாட்டுத் தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக பிள்ளைகளுக்கு இடும் பெயர்களில், வணிக நிலையப் பெயர்களில், தெருக்களின் பெயர்களில், கோயில் வழிபாட்டில், திருமண விழாக்களில், பொது நிகழ்வுகளில் தமிழ் இல்லை. இந்த நிலைமை நீடித்தால் தமிழ் எப்படி வாழும்? தமிழைப் பேணி வளர்க்க எவ்வளவு காலம் பிடிக்கும்?  

நாம் தமிழை ஒழுங்காக உச்சரிக்கிறோமா? எங்கள் பிள்ளை, குட்டிகள் ஆவது தமிழை ஒழுங்காக உச்சரிக்கின்றனரா? இதனைச் சரி செய்யாத வரை நற்றமிழ் எப்படி நம்முன்னே நலமாக வாழும்? மேலும் நமது பிள்ளை, குட்டிகள் தமிழ் மொழி மூலம் கல்வியைத் தொடராத வேளை; எந்தக் கடவுள் வந்து உலகெங்கும் தமிழைப் பேணுவார்?

இந்தியாவில் பாரதிக்கு முப்பத்திரண்டு மொழிகளும் ஈழத்தில் தனிநாயகம் அடிகளாருக்கு பதினெட்டு மொழிகளும் தெரியுமாம். அவர்கள் தமிழைத் தாய் மொழியாகவும் முதன்மை மொழியாகவும் கற்றுக்கொண்ட வேளையிலே மற்றைய மொழிகளைப் படிக்க வில்லையா? இவ்வாறு நமது பிள்ளை, குட்டிகளைத் தமிழ் மொழி மூலம் கல்வியைத் தொடர வழிவிடலாமே!

எனது உறவுகளே, தமிழ்ப் பெயரை உங்கள் புனைபெயராக்குவதோடு உங்கள் பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பெயரையே வையுங்கள். நல்ல தமிழ்ப் பெயர் நூல்கள் வெளிவந்துள்ளன. அதனைப் பெற்று எல்லோரும் தமிழ்ப் பெயர் சூட்ட முன்வாருங்கள். எவரும் பெயரைக் கேட்டால், எங்கள் பெயர் ‘தமிழ்ப் பெயர் என்று அதிரவேண்டுமே!

தமிழர் ஒவ்வொருவரினதும் செயலாக எழுத்திலோ பேச்சிலோ பிறமொழிச் சொல்களை நீக்கிய பின் தூய தமிழைப் பேண முன்வரவேண்டும். தொழில் நோக்கில், தொழில் நேரமான எட்டு மணி நேரம் செயலக (Office) மொழிகளைப் பேசினாலும் எஞ்சிய நேரமாவது தமிழைப் பேணலாமே! கோயில் வழிபாட்டில், திருமண விழாக்களில், பொது நிகழ்வுகளில் தமிழர் பண்பாட்டைப் பேணுவதோடு தமிழ் மொழியில் செயற்படுத்தலாமே! அதாவது தொடர்பாடல் மொழியாகத் தமிழ் மொழி முழங்க முடியுமே!


ஒரு இலட்சம் ஆள்கள் இருந்தால் கூட அவர்கள் பேசும் மொழி அழியாதாம். அப்படியாயின் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் பிறமொழிப் புழக்கத்தை நிறுத்தி விட்டு அல்லது குறைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் நம் தமிழைப் பழக்கப்படுத்தினால் தமிழ் இனி மெல்லச் சாகுமா? தமிழராகிய நாம், தமிழை வாழ்வில் தொன்னூற்று ஒன்பது விளுக்காடு புழக்கத்தில் பேணுவோமாயின் தமிழ் இனி மெல்லச் சாகாது! கடனுக்காகவோ கடமைக்காகவோ அன்றி, ஒவ்வொரு தமிழரும் தாமாகவே உணர்ந்து தமிழ் இனி மெல்லச் சாகாது பேண முன்வர வேண்டும்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!