Translate Tamil to any languages.

ஞாயிறு, 11 ஜூன், 2017

சுவை படப் பட்டெனப் பதில் போடுங்களேன்!

தமிழ் இனிய மொழி என்றால் - தமிழர்
உயர்ந்த பண்பாட்டைப் பேணும் இனமென்று
உலகத்தார் சொல்ல வேண்டும்!
ஒவ்வொரு தமிழரும்
தமிழ்ப் பண்பாட்டைப் பேணும்
நல்லவர்களாக வாழ வேண்டும்!
எமக்கிடையே
தீயவெண்ணங்களோ தீயவுறவுகளோ
வேண்டவே வேண்டாம்!

தங்களைப் பற்றிச் சொல்லிப் போட்டு, மாற்றாரிடம் கேட்கும் பண்பாட்டைப் பேணும் நல்லெண்ணங்களால் நல்லுறவுகளைக் கூட்டலாம். ஆறறிவுள்ள ஒவ்வோர் ஆளும் நல்லுறவுகளைப் பெருக்கி, தீயவுறவுகளைப் பிரித்து, உள்ளத்தில் தோன்றும் தீயவெண்ணங்களைக் கழித்து நல்லாள்களாக வாழவேண்டும் என்பதே எனது வழிகாட்டல்.

முதலில் என்னைப் பற்றிச் சொல்லிப் போட்டு, உங்களிடம் கேட்கும் பண்பாட்டைப் பேணும் என்ணெண்ணத்தை தொடக்கி வைக்கிறேன். நீங்கள் என்னுடன் நல்லுறவுகளை வைத்துக்கொள்வீர்களென நம்பி, உங்கள் நல்லெண்ணங்களைப் பகிருவீர்களென எனது கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றேன்.

எனது பள்ளிக்கூட வாழ்க்கையில்
கூட்டல் - ஒவ்வொரு பள்ளிக்கூடமாகப் ஏறி இறங்கினேன்.
பெருக்கல் - தலைக்குள் அறிவு பெருகி இருக்கலாம்.
கழித்தல் - சில கெட்டதைக் கழிக்க மறந்திட்டேன்.
பிரித்தல் - பல பள்ளி நட்புகள் கெட்டதைக் கழிக்க மறந்தமையால் பிரிந்தனர்.
அதுபோல
தங்கள் பள்ளிக்கூட வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா?

எனது இளமை வாழ்க்கையில்
கூட்டல் - படித்த, பட்ட அறிவை கூட்டினேன்.
பெருக்கல் - நல்ல நட்புகளைப் பெருக்கினேன்
கழித்தல் - கெட்ட நட்புகளைப் கழித்தேன்
பிரித்தல் - படித்தது போதாதெனப் பலர் பிரிந்தனர்
அதுபோல
தங்கள் இளமை வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா?

எனது தொழில் வாழ்க்கையில்
கூட்டல் - வருவாயைக் கூட்டினேன்.  
பெருக்கல் - நன்மதிப்பைப் பெருக்கினேன்.
கழித்தல் - களவுக்கு நெருங்கியோரைக் கழித்தேன்
பிரித்தல் - வருவாய் போதாதெனக் காதலிகள் பிரிந்தனர்.
அதுபோல
தங்கள் தொழில் வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா?

எனது குடும்ப வாழ்க்கையில்
கூட்டல் - இனிய இல்லாளைக் கூட்டினேன்
பெருக்கல் - இருவரும் அன்பைப் பெருக்கினோம்
கழித்தல் - வீண் செலவுகளைக் கழித்தோம்
பிரித்தல் - ஏழை என்பதால் சுரண்டுவோர் பிரிந்தனர்
அதுபோல
தங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா?

எனது இணைய (Internet) வாழ்க்கையில்
கூட்டல் - நல்லன வாசித்தலைக் கூட்டினேன் 
பெருக்கல் - அறிவாளி நண்பர்களைப் பெருக்கினேன்
கழித்தல் - கெட்ட பரப்புரைகளைக் கழித்தேன்
பிரித்தல் - ஏமாற்றுத் தொடர்பாளர்கள் பிரிந்தனர்
அதுபோல
தங்கள் இணைய (Internet) வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா?

நானொரு உளநல மதியுரைஞராக (Counsellor) இருக்கிறேன் என அறிந்து உளநோய், உடல்நோய் வராமலிருக்க வழிகூறு என்றால் நல்ல பண்பாட்டைப் பேணுதலே வழி என்பேன்.
நீங்கள்
பாட்டி மருத்துவம், வீட்டு மருத்துவம், கை மருத்துவம் என எதிலும் இறங்காமல் உடனடியாக மருத்துவரை நாடலாம்.
அளவாக மூன்று வேளை உடனுக்குடன் சமைத்து ஆறவிட்டு உண்ணலாம்.
நாற நாற வியர்வை வெளியேற உடற்பயிற்சி செய்யலாம்.
ஆகிய மூன்றையும் பின்பற்றினாலும் கூட நல்ல பண்பாட்டைப் பேணத் தவறினால் (அதாவது தீயவெண்ணங்களோ தீயவுறவுகளோ உள்ளத்தைச் (மனத்தைச்) சுத்தமாகப்/ தூய்மையாகப் பேண உதவாது.) உளநோய், உடல்நோய் வரலாம்.

எனவே தான், ஒளிவு மறைவின்றி எமது எண்ணங்களை வெளிப்படுத்திய பின் மாற்றாரிடம் எமது எதிர்பார்ப்பைக் கேட்கும் பண்பாட்டை உங்கள் முன் வைக்கின்றேன். (எடுத்துக்காட்டாக மேலே எனது பதிலை முன்வைத்த பின் ஐந்து சூழலில் நான்கு கேள்விகளை உங்களிடம் கேட்டிருக்கிறேன்.) இப்பண்பாட்டை வெளிப்படுத்தும் வேளை எம்மிடம் தீயவெண்ண அல்லது தீயவுறவு உள்நோக்கமில்லை என அறிந்து நல்லெண்ணங்களைப் பகிரவோ நல்லுறவுகளைப் பேணவோ எவரும் முன்வரலாம். இதனால் எமதும் ஏனையோரதும் உள்ளத்தைச் (மனத்தைச்) சுத்தமாகப்/ தூய்மையாகப் பேண முடியும். அப்படியாயின் உளநோய், உடல்நோய் வராமலிருக்கும்.

"மனம் ஒன்று சுத்தமானால் மந்திரம் ஓதத் தேவையில்லை" என்றால் என்ன தெரியமா? "உள்ளத்தைச் (மனத்தைச்) சுத்தமாகப்/ தூய்மையாகப் பேணினால் ஆண்டவனே உங்கள் உள்ளத்தில் (மனத்தில்) இருப்பார். பிறகேன் ஆண்டவனை வழிபட வேண்டும்." என்று பொருள் கொள்ளலாம். அதாவது, "உள்ளம் (மனம்) ஒன்று சுத்தமானால் நோய்கள் வந்து தொற்றுவதில்லை" என்று சொல்லி முடிக்கின்றேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!