இன்று (03/03/2017) முகநூலில (Facebook) எனது ஊர் பக்கம் (மாதகல்.நெற்)
மேய்ந்தேன். எனது ஊர் பக்கத்தில் (மாதகல்.நெற் இல்) "மாதகலில் மீண்டும் முரல் மீன் வரத்தொடங்கியுள்ளது
என்பதை நுகர்வோருக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்." எனத் தகவல் தந்து படங்கள்
பலவும் பகிர்ந்து இருந்தனர். இணைப்பு:
எனது ஊர்க் கடலில் இரவு வேளை புரட்டாதி மாதத்தில தேறை மீனும்
மாசி மாதத்தில முரல் மீனும் பிடிப்பார்கள். அதனை வேண்டி வந்து
பால் சொதி வைத்து பிட்டோ இடியப்பமோ சோறோ ஏதாவது ஒன்றோட சாப்பிடுவோம். அந்த நினைவோடு
தகவலும் படங்களும் என் உள்ளத்தில் எழுதத் தூண்டியது. அதன் விளைவு "மாதகலூர் முரல்
மீன் சுவையில..." என்ற தலைப்பில என்னை எழுதவைத்தது. அதனை முகநூலில (Facebook)
ஏற்கனவே பகிர்ந்துவிட்டேன். எனது வலைப்பூ வாசகர்களுக்காக அதனைக் கீழே தருகின்றேன்.
வாங்க... வாங்க...
மாதகலூரிற்கு வாங்க...
மாசி பனி மூசிப் பெய்ய
ஆணும் பெண்ணும்
ஆளை ஆள் அணைத்த படி
ஏட்டிக்குப் போட்டியாக ஓடிப் போறாங்க...
மாதகல்துறை, சம்பில்துறை, குசுமந்துறை
எங்கு பார்த்தாலும் எட்டிப் பார்த்தாலும்
முரல் மீனுக்கு முண்டியடிக்கிறாங்க...
என்னவோ எப்படியோ
வீட்டுக்கு முரல் வந்தாச்சு என்றால்
பால் சொதி, பொரியல் என
துண்டாடிய முரல் துண்டுகள்
அடுப்பால இறங்கு முன்னரே
ஊரரிசி ஊறவிட்டு
இடிச்சு வறுத்த மாவில
பிட்டு அவிச்சு இறங்கி இருக்கும்...
தட்டில பிட்டைப் போட்டு
பால் சொதி, பொரியலென
மாதகலூர் முரல் மீன் தின்ன
கிடைச்சு இருக்கே எம் வாழ்வு!
மாதகலில இரவில பிடிக்கிற மீனென்றால்
புரட்டாதியில தேறை மீன்
மாசியில முரல் மீன்
மாதகல் கடல்வளம் தந்த கொடையே!
கெவி லூர்த்து மாதா திருவிழாவோட
மாதகலார் மட்டுமல்ல பிறவூராரும்
மாதகலூர் முரல் மீன் சுவையில
கட்டுண்டு வந்திடுவாங்க...
வாங்க... வாங்க...
மாதகலூரிற்கு வாங்க...
முரல் மீன் பால் சொதியோட
ஊரரிசி மா பிட்டு இல்லாட்டிலும்
அமெரிக்கன் மா பிட்டோடயும்
இரவுச் சாப்பாட்டை இறுக்கலாம் வாங்க...
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!