Translate Tamil to any languages.

வியாழன், 9 மார்ச், 2017

உறவுகள் உடைந்து (பிரிந்து) விடாமல் பேண...


நமது வாழ்வில் நாம் அடிக்கடி எதை எதையோ சொல்லுகிறோம்; செய்கிறோம். சொல்லி முடிய/ செய்து முடிய நாம் காண்பதென்ன? வெற்றி, தோல்வி வரலாம்; புதிய உறவுகள் மலரலாம் அதேவேளை உள்ள உறவுகளுக்கிடையே நெருக்கம் ஏற்படலாம்; புதிய உறவுகளும் உருவாகாது அதேவேளை இருந்த உறவுகளும் பிரிந்து போகலாம்.

ஏன் இந்த நிலை? எப்பன் எண்ணிப்பாருங்கள்!

சொல்லுற எல்லாம் சொல்லிப்போட்டு, செய்யிற எல்லாம் செய்துபோட்டு நன்மை அடைந்தால் நலமாக இருக்கலாம். ஆனால், தீமை அடைந்தால் எத்தனை உளநோய்களைச் சிலவேளை உடல்நோய்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.

மனித உள்ளம் ஒரு போதும் வன்முறையை விரும்புவதில்லை. மனித உள்ளம் எப்போதும் மென்முறையை அதாவது அன்பால் அணுகும் முறையை விரும்புகிறது. "அன்புக்கும் அடைக்கும் தாழ்" என்று சும்மாவா சொன்னார்கள். அதாவது அன்பால் அணுகினால் எவரது உள்ளத் தாழ்ப்பாளும் (கதவும்) அடைபடாது அதாவது திறபடும்.

உடல்நோய்கள் ஏன் வருகிறது? வன்முறையைக் கண்டு அஞ்சும் உள்ளம் மென்முறையைத் தேடிக்கொள்ள முனையும் வேளை சந்திக்கின்ற சிக்கல்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் துயருறும் வேளை உளநோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உளநோய்களில் இருந்து விடுபடவே "இந்தப் பழம் புளிக்கும்" என்று பிரிவைத் தூண்டுவதும் உள்ளமே! அதாவது, உள்ளத்தில் வெறுப்பு ஏற்படப் பிரிவுகள் தானகவே அமைந்து விடுகிறது.

உண்மையில் என்ன நிகழ்கிறது?
எமது சொல்லோ செயலோ அடுத்தவரைப் புண்படுத்துகிறது. எமது சொல்லோ செயலோ வன்முறையாக இருப்பின் அதாவது அடுத்தவர் விரும்பாது இருப்பின் அவர்களைப் புண்படுத்தலாம். அவ்வுள்ளப் புண்களை ஆற்றுப்படுத்தப் பிரிவு தேவைப்படுகிறது. அதனால், மென்முறையாக அதாவது அன்பாக அணுகாக விட்டால் பிரிவைத் தான் சந்திக்க வேண்டிவரும்.

இவ்வாறான பிரிவுகளை ஏற்படுத்தா வண்ணம் நல்லுறவைப் பேண இரண்டு வழி உண்டு.

முதல் வழி "உன்னைப் போல் உன் அயலாரையும் விரும்பு (நேசி)" என்ற முதுமொழியைக் கையாளவேண்டும். நாம் விரும்புவதெல்லாம் அடுத்தவர் விரும்பாது இருக்கலாம். நாம் விரும்பாததெல்லாம் அடுத்தவர் விரும்பலாம். அதாவது, எமது சுவையும் அடுத்தவர் சுவையும் வேறுபடலாம். இங்கு நமது விருப்பங்களை நாம் அடைய விரும்புவது போல அடுத்தவரும் முயலலாம். எனவே, அடுத்தவர் விருப்பு/ வெறுப்புகளைப் பொருட்படுத்தி அவர்களுக்கு ஏற்ப எம்மைச் சரிசெய்து நல்லுறவைப் பேணலாம்.

அடுத்த வழி பொருட்பால் - 1. அரசியல் - 1. அதிகாரம் 47. தெரிந்துசெயல்வகை குறள் 467 ஐப் படியுங்க.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

எதைச் செய்ய/சொல்ல விரும்புகிறோமோ, அதனை நன்றாகச் சிந்தித்துச் செய்ய/சொல்ல வேண்டும்; செய்த/சொன்ன பின் சிந்திக்கலாம் என்பது நன்றன்று.

ஒரு செயலைச் செய்வதாயின், அதனைச் செய்வதற்கான வழிகளையும் அதனைச் செய்வதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் சிந்தித்துச் செய்ய வேண்டும்; செய்த பின் சிந்திக்கலாம் என்பது நன்றன்று.

ஒரு சொல்லைச் சொல்வதாயின், அதனைச் சொல்வதற்கான நோக்கத்தையும் அதனைச் சொல்வதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் சிந்தித்துச் சொல்ல வேண்டும்; சொன்ன பின் சிந்திக்கலாம் என்பது நன்றன்று.

ஒரு செயலைச் செய்வதாயினும் சரி, ஒரு சொல்லைச் சொல்வதாயினும் சரி அது அடுத்தவர் உள்ளத்தையும் நோகடிக்கலாம் அல்லது எமது நற்பெயரையும் கெடுக்கலாம் அல்லது எமக்கோ அடுத்தவருக்கோ பாதிப்பையும் ஏற்படுத்தலாம். இவற்றை எல்லாம் சிந்திக்காமல் செய்த/சொன்ன பின், அதற்கான விளைவைத் தான் சந்திக்கலாம். எப்பவும் நம்மாளுகள் பாதிப்பைக் கண்ட பின்னே சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதால்; பாதிப்பு வருமுன்னே சிந்திக்குமாறு வள்ளுவர் வழிகாட்டுகின்றார். எனவே, பாதிப்பு வந்த பின் சிந்திக்கலாம் என்பது நன்றன்று என்பதே என் கருத்து.


முடிவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உள்ளம் என்பது உடைந்து நொருங்கக் கூடிய ஒன்று. அதனை உடைந்து நொருங்க இடமளியாது பேணவும். உள்ளம் உடைந்து நொருங்கினால் உளநோய்கள் தோன்ற இடமுண்டு. உளநோய்கள் தோன்றினால் உடல் நோய்கள் தோன்ற இடமுண்டு. ஈற்றில் உறவுகள் உடைந்து (பிரிந்து) போக இடமுண்டு. எனவே, மேலே உள்ள எண்ணங்களைக் கருத்திற்கொண்டு, மண்ணில் நல்லவண்ணம் வாழ உறவுகள் உடைந்து (பிரிந்து) விடாமல் பேணுங்கள். அதாவது எவரது உள்ளத்தையும் எவரும் நோகடிக்காமல் அல்லது உடைத்து நொருக்காமல் பேணுங்கள். அப்போது நமக்குள்ளே நல்லுறுவுகளைப் பேணுவதோடு நாமும் நெடுநாள் நோயின்றி வாழ முடியுமே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!