Translate Tamil to any languages.

செவ்வாய், 7 மார்ச், 2017

இடம் கண்டால் மடம் கட்டிப் போடுவாங்களே!

இனிய தமிழ் உறவுகளே! இணையம் (Internet) வந்த பின்னர் பல நன்மை. தீமைகள் நிகழ்ந்து வருகின்றன. இதில் மக்களாயப் (சமூகப்) பண்பாட்டைச் சீர் கெடுக்கும் பக்கங்களே அதிகம். அவ்வாறான பக்கங்களைப் பார்வையிடத் தடுக்கும் வடிகட்டி (Filter) மென்பொருள்கள் பல இருக்கின்றன. "கெட்டதைத் தவிருங்கள். எதிர்பாராமல் பார்க்க நேர்ந்துவிட்டால், உடனே நல்லதுக்கு மாறுங்கள். அக்கணமே அக்கெட்டதை மறந்து விடுங்கள்" என்று தான் அறிவாளிகளும் சொல்கிறார்கள்.

என்னமோ ஏதோ இணையம் வழியே நம்மாளுகள் நல்லன பல செய்வதனைப் பத்திரிகையில் படிக்க முடிகிறதே! இதில் என்ன இருக்கு? எல்லோருக்கும் தெரிந்த செய்தி தானே! என்று நீங்கள் கேட்கலாம். இதனால் ஒரு செய்தியை நானும் சொல்லித்தான் ஆக வேண்டும். அதாவது அள்ள, அள்ள வற்றாத அன்பளிப்புகள் (இலவசங்கள்) இணையத்தில் உலாவுகின்றன. அவற்றில் கெட்டவற்றைக் களைந்து நல்லவற்றை உறிஞ்சிப் பலர் நன்மை அடைகிறார்கள் என்றால் அது செய்தி தானே!

ஒரு காலத்தில நான் மட்டும் பத்துப் பதினைந்துக்கு மேற்பட்ட வலைப்பூக்கள், வலைத்தளங்கள் பேணி வந்துள்ளேன். (பின்னர் நண்பர்களின் மதியுரைப்படி ஒரு வலைப்பூவைச் சிறப்பாகப் பேண முயன்று வருகின்றேன்.) அதாவது, அவ்வளவுக்கு அவ்வளவு இணையத்தில் அன்பளிப்புகள் (இலவசங்கள்) மலிந்து இருப்பதனால் என்னால் பத்துப் பதினைந்துக்கு மேற்பட்ட தளங்கள் பேண முடிந்தது என்பேன். இப்படித் தான் உங்களாலும் பல வலைத்தளங்களைப் பேண முடியும் தானே! முயன்று பாருங்கள்; வென்று காட்டுங்கள். "இடம் கண்டால் மடம் கட்டிப் போடுவாங்களே!" என்ற முதியோர் கருத்தைக் கேட்டிருப்பியளே... இணைய அன்பளிப்புகளை (இலவசங்களை) வைத்து பலர் பெயரும் புகழும் அடைவது செய்தியே!

இந்நிலையில் இப்படியான அன்பளிப்பு (இலவச) வளங்களைப் பாவித்துத் தத்தம் திறமைகளை நல்ல தமிழில் உலகம் எங்கும் வெளிப்படுத்த முன்வர வேண்டுமே! அதாவது, நாம் கற்ற கல்வியை இவ்வுலகத்தார் கற்றிட உங்களால் உதவ முடியும்; முயன்று பாருங்கள்! உங்களிடம் வெளிப்படும் கலைத் திறமைகள், நீங்கள் பட்டறிந்து (அனுபவித்து) பெற்ற அறிவு என உங்களால் வெளிப்படுத்தக்கூடிய நல்லன எதனையும் இணையம் வழி பரவும் வகை செய்ய இயலுமே! உங்களுக்கு வேண்டிய உதவிக் குறிப்புகளைக் கூகிளில் தேடினால் பெற்றுக் கொள்ள முடியுமே! 

நானோ உங்களை விடப் படித்தறிவில், பட்டறிவில், அகவையில், ஆளுமையில் சிறியன். அப்படியிருந்தும் எனது முயற்சிகளை உங்களுடன் பகிரக் காரணம் என்னைவிடச் சிறப்பாக எனது முயற்சிகளை விட அதிகப்படியாக உலகம் எங்கும் நற்றமிழைப் பேண முன்வருவீர்கள் என நம்பியே! எமது செந்தமிழில் உலாவும் பிறமொழிகளை நீக்கி (தேவைப்படின் அடைப்புக்குள் பாவிக்கலாம்) நற்றமிழில் நல்லன எல்லாம் உலகம் எங்கும் பரப்பும் பணியைச் செய்வோம்.

தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா என்பது
அந்தக்காலம்!
தமிழனென்று சொல்லடா
இணைய வழி
தமிழன் நிலையை வெளிப்படுத்தடா என்பது
இந்தக்காலம்!
பிறமொழி ஆடை, அணிகலன்களை
களைந்து (உரிந்து) போட்டு
உள்ளிருக்கும் உறுப்புகளான
வேர்த்தமிழ் சொல் அடுக்கி
வெளியீடு செய்வதே - தமிழுக்கு
நல்லெதிர்காலம்!

இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் கூறித் தமிழைப் பரப்பாவிட்டாலும் பரவாயில்லை தத்தம் அறிவை ஆவது தமிழில் பரப்ப முன் வாருங்களேன். இது உங்கள் யாழ்பாவாணனின் அழைப்பு!

குறிப்பு: வேர்ட்பிரஸ் வலைப்பூவில் வெளியான பதிவைச் சிறு மாற்றங்களுடன் இங்கு பகிருகிறேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!