Translate Tamil to any languages.

செவ்வாய், 14 மார்ச், 2017

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 04

வலைப்பூக்களை விட முகநூல் (Facebook) பக்கம் நன்றென விரைந்த நம்மாளுங்க, முகநூல் பக்கத்திலே கருத்து மோதல்களில் ஈடுபடுகின்றனர். அதனால் தங்கள் அடையாளங்களைத் தாமே இழந்து வருகின்றனர். வலைப்பூக்களில் மோதல்கள் வெடித்து வலைப்பூ ஊடாகத் தங்கள் அடையாளங்களை இழந்து வருவது குறைவே. முகநூல் பக்கத்திலே மோதல்கள் வருவதேன், எனது கிறுக்கலையும் படித்தால் தெரியுமே!

குடும்பச் சண்டை, வேலிச் சண்டை
போய் - இப்ப
முகநூல் (Facebook) சண்டை
முன்னேறுகிறது - இதற்கு
இரண்டு, மூன்று கிறுக்கியதும்
தான் தான் கண்ணதாசன்,
மூ.மேத்தா, வைரமுத்து என
எண்ணம் கொண்டோரால்
மூண்ட சண்டையாம் - அதற்கு
பாவரசி, பாவேந்தன் என
முகநூல் (Facebook) குழுக்கள் சில
பிஞ்சுகளுக்குப் பட்டம் சூடி
பறக்க விடுவதால் தானாம் - எதற்கு
முகநூல் (Facebook) சண்டை என்றால்
எவரெழுதுவது கவிதையாம் - அதனால்
கவிதை எதுவென அறியாதார் மோதல் என
மக்கள் மத்தியில்
வாழும் கவிதை சொல்கிறதே!
ஓ! உண்மையான
முகநூல் (Facebook) பாவலர்களே
எதிர்காலத்தில்
மக்கள் மத்தியில் வாழும் கவிதை
எப்படிப்பட்டதாக இருக்கவேணுமென்பதை
புதுவரவுகள் எண்ணுமா?????

"எவரெழுதுவது கவிதையாம்?" என்றெழுதிய கிறுக்கல் அது. எல்லோருக்குள்ளும் கவிதை உணர்வு இருக்கிறது. அதனை வெளிக்கொணர முயன்றவர் பாவலர்/ கவிஞர் ஆகின்றார்.

பணம் உள்ள வரை உறவு
பணம் இல்லை எனில் துறவு
வாழ்வில் சந்தித்த உண்மை இது!
என்றோ
நம்பிக்கை தான்
நம் உறவு நிலைக்க உதவும்
நம்பிக்கை என்ற மூன்றாம் கையால்
முழு உலகையும் உருட்டிவிடலாமே!
என்றோ
பாவலர்/ கவிஞர் ஆக விரும்பினால்
கவிதை உணர்வை வெளிக்கொணர
முயன்று பாருங்கள் - கவிதைகள்
உங்கள் உள்ளத்தில்
துள்ளி விளையாடுவதைக் காண்பீரே!
எங்கிருந்தும் எவராச்சும்
எண்ணிப் பார்த்தீங்களா?
நல்ல கவிதை எதுவானாலும்
உலகெங்கும் வாழ்வோரின்
உள்ளத்தைத் தொடும் - அப்படி
வாசகர் உள்ளம் ஈர்த்திட
எழுதியவர் தான்
பாவலர்/ கவிஞர் ஆவாரென்று!

இப்படித்தான் தனது தாய் நோயுற்று இருப்பதை அறிந்து, கனடாவில் வசித்து வருபவருமான மகள் யாழ்ப்பாணம், இலங்கை வந்திருக்கிறார். ஊர்திகள் மோதிக்கொண்டதால் தாயைக் காக்க வந்தவள் உயிர் பறிபோயிற்று. இப்படியான துயரம் எவருக்கும் வந்துவிடக் கூடாது. இதனை எண்ணிப் பார்த்ததும், கீழுள்ளவாறு எழுதினேன். எழுதியது கவிதையா இல்லையா என்பதை உங்கள் உள்ளம் தான் சொல்லுமே!

தாய் நலம் பேண வந்தவள்
தன் உயிரைப் பிரிந்த விட
விபத்தொன்றில் சிக்கினாளோ? - அவள்
வீட்டில் உள்ளோர்
துயரம் அடக்க முடியவில்லை - அந்த
ஆண்டவனும் இரங்கவில்லை - இந்த
மனித வாழ்வும் இப்படியாப் போச்சுது!

இப்படி நீங்கள் எழுதிப் பழக கீழுள்ள எனது கிறுக்கல்களைப் பாருங்கள். மூன்றடியில முதற் சொல்லும் ஈற்றுச் சொல்லும் ஒன்றிய நிலையில ஒவ்வொரு செய்தியைச் சொல்லி இருக்கிறேன்.

அழகே! உன்னை விரும்பும் ஆள்கள்
அழகாலே தாம் உயர்ந்தவர் எனக்கூறி
தம்மைத் தாம் இழக்கின்றனர் அழகே!

மார்கழி விடியலில் பிள்ளையார் கோவிலில்
குளிருடன் போய் திருவெம்பாவை வழிபாட்டில்
பிட்டுத்தின்ற சுவைக்கு நன்றி மார்கழி!

ஏழ்மை கண்டு உருகாதோர் உள்ளம்
வாழ்வில் உண்டோ வாழும் உறவுகளே!
வாழ்வில் முன்னேறத் தடையல்ல ஏழ்மை!

ஏழ்மை வரலாம் எதிர்த்து முகம்கொடு
ஏழ்மையைக் கண்டு உருகுவோரும் உதவார்
வாழ நினைத்தால் வேண்டாம் ஏழ்மை!

பெண்மை கடவுளின் துணைக்கருவி என்பேன்
கடவுளின் படைத்தலுக்குத் துணையாக இருப்பினும்
பிள்ளையை ஈன்றுதள்ளும் கருவியல்ல பெண்மை!

பெண்மையைக் கண்டு பெருமை கொள்
உன்னைப் பெற்றவளும் பெண்மை ஒருவளே!
உலக இயக்கத்துக்கு வேண்டும் பெண்மை!

உள்ளமே உள்ளத்துக்கு மருந்து என்பேன்
உள்ளம் சுத்தமானால் ஆண்டவன் எதற்கு?
நெடுநாள் வாழ நல்ல உள்ளமே!

ஆடுதே! அந்தப் பனைமரம் தான்
கள்ளைத் தருவதும் அந்தப் பனையே
போட்டிக்குத் தென்னையும் தளராமல் ஆடுதே!

எழுதிடு! என்றும் எண்ணிய எல்லாவற்றையும்
எழுதியதால் வாசகர் அறிவு பெருகட்டும்
நாட்டவர் அறிவுயர என்றும் எழுதிடு!

முகநூல் (Facebook) பக்கத்திலே இந்துக்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்குத் தமிழ் தெரியாது என்று ஒருவர் எழுதியிருந்தார். அதனைக் கண்டதும் எனக்குக் கோபம் வந்துவிட்டது. அதன் விளைவாகக் கீழுள்ளவாறு கிறுக்கிவிட்டேன்; படித்துப் பாருங்களேன்.

சிவனுக்குத் தமிழ் தெரியாதா?
சொன்னவருக்கு
உலகைப் படைத்தவரைத் தெரியுமா?
சிவன் என்று சொல்லி வையுங்க!
உயிரிகளைப் படைத்தவரைத் தெரியுமா?
சிவன் என்று சொல்லி வையுங்க!
உயிரிகளான நம்மாளுங்க பேசும்
தமிழ் மொழியைப் படிப்பித்தவர்
எவரென்று தெரியுமா?
அந்தச் சிவன் அல்ல - அந்த
சிவனின் மாணவரான அகத்தியரே! - அந்த
அகத்தியருக்கே தமிழ் கற்பித்த - அந்த
சிவனுக்குத் தமிழ் தெரியாதா?
சொன்னவருக்கு
தமிழ்க் கடவுள் முருகன் என்றாலும்
முருகனின் அப்பா சிவன் அல்லவா! - அப்ப
சிவனுக்குத் தமிழ் தெரியாதா?
உலகைப் படைத்தும்
உலகத் தமிழரைப் படைத்தும்
உலகத் தமிழருக்கு
அகத்தியரூடாகத் தமிழைப் படிப்பித்ததும்
முழுமுதற் கடவுள் சிவன் தானே!
சங்கம் வளர்த்துப் தமிழைப் பேண
முன்நின்றவர் தான் முருகக் கடவுளே!

ஒவ்வோர் ஆண்டும் மாசி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த (2017) ஆண்டும் அந்நாளில் நான் கிறுக்கியதைப் பாரும்.

மொழியே எங்கள் உயிர்!
மொழியே எங்கள் அடையாளம்!
மொழி மறந்தார் விழி இழந்தார்!
மொழியைப் பேணு உலகைப் பார்!
தொன்மைத் தமிழே தேன்மொழியே
எங்கள் தாய்மொழி நீடூழி வாழ
பிறமொழி நீக்கிப் தமிழைப் பேணு!
தமிழனென்று தலை நிமிர்ந்து
நாளும் நாம் நடை போட
நம்ம தமிழைப் பேணி வாழ்வோமே!

ஏதேதோ என்னமோ எனது கைவண்ணத்தில் கிறுக்கியதைப் பகிர்ந்தேன். உலகெங்கும் வலைவழியே நல்ல தமிழில் உங்கள் எண்ணங்களை உங்கள் கைவண்ணத்தாலே நல்ல பாவண்ணமாகப் பகிருங்கள். அப்பதான் உலகத்தார் தமிழின் சுவையறிந்து தமிழைப் பேண முன்வருவார்கள். ஆளுக்கொரு வலைப்பூவில் தங்கள் பதிவுகளைப் பேணுவதோடு, தங்களுக்கென்ற தனி அடையாளத்தை வெளிப்படுத்த வழியிருக்கிறதே! அதற்காக முகநூல் (Facebook) பக்கம் போகவேண்டாமெனத் தடுப்பது எனது நோக்கமல்ல. ஆங்கே நாம் நமது வலைப்பூப் பதிவுகளைச் சுட்டி, அங்குள்ளவர்களை நமது வலைப்பூப் பக்கம் இழுத்துவர முயற்சிப்போம்.


முகநூல் பக்கத்திலே விருப்பு (Like), கருத்து (Comments), பகிர் (Share) அதிகம் என்றாலும் வலைப்பூப் பக்கத்திலும் பதிவர்கள் பலருக்கு இவை அதிகமாகக் கிடைக்கின்றதே! அவர்களது சுவையான பதிவுகள் மற்றும் அவர்களது கருத்திட்டுப் பதிவர்களை ஊக்கப்படுத்தும் செயல் என்பன தான் அவர்களது வெற்றிக்குக் காரணம். முகநூல் பக்கத்திலே விபத்தாக இவை கிடைத்தாலும் வலைப்பூப் பக்கத்திலே பதிவர்களின் தனி அடையாளத்திற்காகவே கிடைக்கின்றன. எனவே தான் வலைப்பூ நடாத்திப் பேணுவதால் நன்மை என்பேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!