வெள்ளியம்மாவுக்கும் (வெள்ளிக்கும்)
மூத்தவனாய்ப் பிறந்த ஐங்கரனும்
தம்பியாம் சுப்பனையும்
தங்கையாம் சுந்தரியையும்
படிக்க வைச்சான் தானும் படிக்கையிலே!
ஆற்றங்கரை ஊராக்களைப் போல
என்ன தான் படித்தாலும்
வேளான்மை செய்யும் குடும்பமானாலும்
ஊர்ப்பள்ளியில் ஐங்கரன்
கணினி ஆசிரியராக இருக்க
விடிகாலையிலும் பொழுதுசாய்கையிலும்
தன் தோட்டத்துப் பயிர்களையே கொஞ்சுவான்!
சுப்பனோ கச்சேரி எழுதுநராயும்
சுந்தரியோ தொடக்கப்பள்ளி ஆசிரியையாயும்
தேப்பனோட தோட்டமும் கையுமாயிருந்த
பள்ளிக்குப் போயறியா வள்ளியப்பனும்
வெள்ளியும் பத்துவரை படித்தாலும் கூட
வள்ளிக்குத் துணையாய் வந்ததும்
அடுப்பூதியும் அவிச்சுப் போட்டுமிருக்க
அறுவடை நாளன்று எல்லோருமாய்
தோட்டத்தில் வந்துகூடி வேலையும் செய்வரே!
அண்டையாள் அன்னக்கிளியும்
அயலாள் அப்புச்சாமியும்
எண்ணிப்பார்த்தால்
ஐங்கரன் வீட்டுச் சுற்றத்தார்
எல்லோருமே தோட்டத்திற்கு வர
வேளாண்மையும் அறுவடையும் நகர
ஆற்றங்கரையூர் ஒற்றுமையாய் வாழ
தொண்டைமானாறு கைகுலுக்குமே!
தொண்டைமானாற்றின் அயலூர்களான
கரணவாய், செம்மணி, வெள்ளைப்பரவை போன்ற
இடங்களில் தானே விளையும் உப்பை
யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசருக்கும்
இந்தியாவை ஆண்ட தமிழரசருக்கும்
ஒற்றுமையும் நல்லுறவும் இருந்தமையால்
மரக்கலங்கள் மூலம் தமிழ் நாட்டிற்கு
ஏற்றுமதி செய்த வரலாறுமிருக்கே!
சிற்றரசன் கருணாகரத் தொண்டைமான் என்பாராம்
தமிழ்நாட்டில் இருந்து வந்திங்கே
யாழ்ப்பாண அரசரின் அனுமதியோட தான்
உப்பு வணிகம் இலகுவாய்த் தொடரவே
பாக்கு நீரிணையோடு ஆறு இணையும்
முகத்துவாரத்தினூடே இருந்த
வல்லிநதி என்னும் நன்னீர் ஓடையை
வெட்டிக் கட்டியமைத்த ஆறாகையால்
வல்லைவெளி தாண்டிய வல்லிநதியே
தொண்டைமானாறானதும் வரலாறே!
(தொடரும்)
அருமை... தொடருங்கள்..
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
தொடர்கிறேன்...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.