Translate Tamil to any languages.

புதன், 28 மே, 2014

பாப்புனைக - கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினால்...

1961 இல் யாழ்ப்பாணப் பிரதேசக் கலைமன்றம், நாட்டுப்பாடல் நடன நாடகக்குழு வெளியிட்ட "வாய்மொழி இலக்கியம்" என்ற பொத்தகத்தில் இருந்து "என் செய்வாய் பெண் பனையே" என்ற தலைப்பில் நாட்டார் பாடலொன்றைப் படித்துச் சுவைத்தேன். அதாவது, கள்ளுக் குடித்தவர் வெறியேறியதும் கதைத்துக்கொள்ள ஆளின்றி பெண் பனையோடு பேச்சுத் தொடுப்பதாக அப்பாடல் அமைந்திருந்தது. அதற்குப் பெண் பனை  பதிலளிப்பதாக பனையின் சிறப்பைப் பகிருவதாக அப்பாடல் அமைந்திருந்தது.

அதனைப் படிக்கு முன் மேற்காணும் கதைக்கு ஏற்பப் பாப்புனைய முயற்சி செய்வோமா!
வெறியேறிய கள்ளுக் குடித்தவர் இப்படிப் பெண் பனையைக் கேட்பதாக எண்ணிப் பாருங்கள். இவ்வாறு உங்கள் எண்ணத்தைக் கொட்டிப் பாப்புனைக.

பெண் பனையே! பெண் பனையே!
கள்ளுக் குடித்தேன் நானே...
குடிச்ச புளிச்சல் கள்ளு
உன்னாலே என்னதான் பண்ணுவாய் என்றே
என்னாலே உன்னைக் கேட்க வைக்குதே!

பெண் பனைக்கு வாயிருந்தால் கள்ளுக் குடித்தவரை எப்படியெல்லாம் கேட்டிருக்கும். பனை சார்பாகக் கீழே இருப்பது எனது கைவண்ணம். உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள்; தோன்றும் உங்கள் எண்ணத்தைக் கொட்டிப் பாப்புனைக.

சீவல் தொழிலாளி வெட்டி வீழ்த்திய
பச்சையோலைப் பக்கம் தள்ளாடி வந்தால்
கருக்குகள் உன் காலறுக்குமே!
வீசும் காற்றோடு மோத இயலாத
காவடியாடும் காவோலை விழுந்தால்
விழுந்த வீச்சிலே உன் கழுத்தறுக்குமே!
என் அடிப்பகுதில் இருந்து - நீ
என் உச்சிப்பகுதியை அண்ணாந்து பார்த்தால்
வானத்து ஞாயிற்று வெயில் எறிக்க
உன் கண்ணைத் தாக்க - நீயும்
பிடரியில் அடிவிழ வீழ்வாய் என்பேனே!

உங்கள் யாழ்பாவாணன் ஒரு சின்னப் பொடியன் ஆகையால் அவரது எண்ணம் பெரிதாக அமையாவிட்டாலும் பரவாயில்லை. பாபுனைய விரும்பும் எல்லோரும் இவ்வாறு முயற்சி எடுக்கலாம் தானே. நீங்கள் முயற்சி எடுத்ததையும் கீழே தரப்படும் நாட்டார் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
வாய்மொழி இலக்கியம்
உண்மையில் நாட்டுப் பாடல்கள் தூய தமிழிலேயே உள்ளன. அதேவேளை இசை, இலக்கணம், எளிமையான சொல்லாட்சி எனப் பல இருப்பதால் தான் அவை இன்றும் வாழ்கின்றன. உங்கள் முயற்சியையும் மேற்காணும் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஒவ்வொருவர் எண்ணமும் வேறுபடுவது இயல்பு. எனவே, பலரது படைப்புகளை ஒப்பு நோக்குவதன் மூலம் ஒவ்வொருவரது எண்ணம், எழுத்து, நடை, பாபுனையும் ஆற்றல் ஆகியவற்றை அறிய முடியுமே! மேலே தரப்பட்ட பாடல் உள்ள பொத்தகத்தைப் பதிவிறக்கக் கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கித் தேடுக.

https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ

9 கருத்துகள் :

 1. "என் செய்வாய் பெண்பனையே" எனும் அரிய சுவையான சொற்செழுமை மிக்க பாடலைத் தந்ததற்கு முதல் நன்றி.
  கொழித்தல்- எனும் சொல் வழக்கொழிந்து விட்டது. சுளகால் அதை எப்படிச் செய்வதென இன்றைய பெண்களுக்குத் தெரிய வாய்ப்பேயில்லை.அடுத்து அவசியமுமில்லை என்றாகிவிட்டது இன்றைய வியாபார கடுகதியுலகு.
  எனக்குப் பாடல் புனையும் வல்லமையில்லை, ஆனால் ஓரளவு ஓசை நயம்,சொற்சுவை, கருத்தான பாடல்களை ரசிப்பேன்.
  தங்கள் புனைவில் கருத்திருந்த போதும் ஒசைநயம்,சொற்சுவையில் வசனத் தன்மை தூக்கி நிற்கிறது. இது என் கருத்து.
  மேலும் மெருகேற்றி இக்கருத்துக்களை வலுப்படுத்தலாம்.
  அடுத்து. சுமார் 20 ஆண்டுகளாக ஈழத்தில் பொத்தகம் எனும் சொல்-புத்தகமெனும் சொல்லின் இடத்தைப் பிடித்துவிட்டது.
  இதை யார்? ஆய்வு செய்து பரப்பினார்கள். ஆனால் பொத்தகமென எங்கள் பாட்டா,பாட்டிமார் கூறக் கேட்டுள்ளேன். ஆனால் அவர்கள் பல சொற்களை சற்று கொச்சையான மொழியில் பேசியுள்ளார்கள். உ+ம்: அகப்பை-ஏப்பை, திருநெல்வேலி-தின்னவேலி, அப்பர்-கொப்பர் இப்படிப் பல.
  இந்த பொத்தகம் -சற்று இறடலாக உள்லது. இரண்டிலும் புதிய அறிமுகத்தில் எழுத்தும் கூட, இதிலும் நூல் எனும் சொல் நன்று போலுள்ளது. இது என் எண்ணம்.
  நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்வும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் தெரிவித்த மதிப்பீட்டுரை எனக்குப் பிடித்திருக்கிறது.
   எனது பதிவுகளில் நான் திருத்தம் செய்வேன்.
   "நூல் எனும் சொல் நன்று போலுள்ளது." என்பதை ஏற்கிறேன்.
   மிக்க நன்றி.

   நீக்கு
 2. உங்களைப் போன்று நகைச்சுவை எழுத முடியாத நான் தான் சின்னப் பொடியன்!
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அருமையான விளக்கமும் நல்ல பதிவும் வாழ்க வளமுடன்....!

  பதிலளிநீக்கு
 4. உங்கள் பா அருமை. சுட்டிக்காட்டிய பாடலும் மிக அழகாக புனையப் பட்டுள்ளது.
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!