Translate Tamil to any languages.

சனி, 31 மே, 2014

ஊடகங்களுக்குப் படிப்பிக்கலாம் வாங்க!

அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள் என எடுத்துக்கொண்டாலும் அவை தமிழுக்கோ படைப்புக்களுக்கோ முதன்மை நிலைமையைக் காட்டாமல் விளம்பரங்களையே முதன்மைப்படுத்துகின்றன. அதுவும் நமது பண்பாட்டைச் சீரழிக்கும் விளம்பரங்களை வெளியிடுவதால் நாளைய தலைமுறைக்குக் கேடு விளைவிக்கின்றன.

அச்சு ஊடகங்களை எடுத்துக் கொண்டால் படைப்பாளிகளுக்கு ஊக்கத்தொகை எதுவும் வழங்குவதில்லை. வெளியிடப்படும் படைப்புகளுக்கு இடையே விளம்பரங்களைப் புகுத்தி விடுவார்கள். சிறந்த படைப்புகள் கிடைக்காமல் வெளியாகிய பொத்தகங்களிலிருந்து பகுதி பகுதியாகப் பொறுக்கிச் சில ஏடுகள் வெளியிடுகின்றன. மொத்தத்தில் தமிழ் அச்சு ஊடகங்கள் என்று சொன்னாலும் பிறமொழிக் கலப்போ ஆங்கில உள்ளீடோ தான் மலிந்திருக்கும்.

இனி மின் ஊடகங்கள் என்றதும் தொலைக்காட்சி, வானொலி, வலைப்பூக்கள், வலைத்தளங்கள், மின்நூல்கள், திரைப்படங்கள், ஒளியும் ஒலியும், இசைத்திரட்டு எனப் பல உள்ளடக்கலாம். இவை எதிலும் தமிழை முதன்படுத்தும் செயலைக் காணமுடியாதே. பிறமொழி விளம்பரங்களே அடிக்கடி இவற்றில் தலையை நீட்டுகின்றது. வானொளி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் யாவும் ஆங்கிலப் பெயரிலேயே இருக்கிறது.

சிமான் இயக்கி மாதவன் நடித்த “வாழ்த்துகள்” படத்தில் தமிழ் சொல்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலும் எல்லாத் திரைப்படங்களுமே தமிழ்நாட்டு அரசின் வரிவிலக்கிற்காகத் தமிழ் தலைப்பை இட்டாலும் தமிழை முதன்மைப்படுத்தாத, தமிழ் பண்பாட்டைப் பொருட்படுத்தாத ஊடகமாகவே வெளிவருகின்றன.

வலைப்பூக்கள், வலைத்தளங்களிலும் பிறமொழிக் கலப்பு, ஆங்கில மொழித் தலைப்பு எனத் தமிழுக்கு முதன்மையளிப்பது மிகக்குறைவு. தமிழுக்கு முதன்மை இடமளித்துப் பல பதிவர்கள் வலைப்பூ நடத்தினாலும் வலைப்பூ வழங்குநர்களின் விளம்பரங்கள் குறுக்கே நிற்குமே! எப்படி இருப்பினும் தமிழ் வலைப்பூக்களில் பிறமொழிப் பதிவுகளை உள்ளடக்காமல் இருப்பது நன்று. பிறமொழி வெளியீட்டுக்குப் பிறமொழியில் வலைப்பூ நடாத்தலாம். மொழியைப் பண்பாட்டைப் பேணச் செறிவான சிறந்த அறிவுரைகளைக் கருத்துக்களைச் சொல்லச் சிலர் வலைப்பூ நடத்தினாலும் பொழுதுபோக்கிற்காகப் பயன்தரா வலைப்பூக்களையும் பலர் நடாத்துகின்றனரே.

மேலோட்டமாகப் பொதுவாகச் சில கருத்துக்களைச் சுட்டிக் காட்ட முடிந்தாலும் விரிவாக இங்கு அலச விரும்பவில்லை. ஆயினும் ஊடகங்கள் தாய் மொழியைப் பேணுவதோடு, பண்பாட்டைப் பேணுவதோடு, மக்களாய (சமூக) மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு நாடு, இன, மத வேறுபாட்டைக் களைந்து ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் நல்வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்கவும் முன்நிற்க வேண்டுமே!

உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஊடகங்களுக்குப் படிப்பிக்கலாம் வாங்க. உங்கள் வலைப்பூக்களில் கீழ்வரும் தலைப்புக்களில் பதிவுகளை இட்டு ஊடகங்களுக்கு படிப்பிக்கப் பாருங்களேன்.

1. தமிழ் ஊடகமாயின் தம் பெயரைத் தமிழில் வைக்கலாமே!
2. தமிழ் ஊடகமாயின் நிகழ்ச்சித் தலைப்பையோ பதிவுத்தலைப்பையோ தமிழில் வைக்கலாமே!
3. தமிழ் ஊடகமாயின் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ தமிழில் வெளிப்படுத்தலாமே!
4. தமிழ் ஊடகமாயின் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் முதன்மைப்படுத்தலாமே!
5. தமிழ் ஊடகமாயின் தமிழின் தொன்மை, சிறப்பு என எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு பிறமொழிகளில் தமிழைக் கற்பிக்கும் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ வெளியிடலாமே!
6. தமிழ் ஊடகமாயின் பழந் தமிழ் இலக்கியங்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ வெளியிடலாமே!
7. தமிழ் ஊடகமாயின் உலக இலக்கியங்களை பிறமொழி, பிறநாட்டுச் சிறப்புகளை செந்தமிழில் வெளியிடலாமே!

என் உள்ளத்தில் தோன்றிய ஏழு எண்ணங்களைப் பகிர்ந்தேன். உங்களுக்குத் தெரிந்த எண்ணங்களையும் பகிருங்கள். அப்ப தான் வணிக நோக்கில் மூழ்கியிருக்கும் ஊடகங்களைத் தட்டி எழுப்பலாம்.

2 கருத்துகள் :

  1. தங்களின் ஆதங்கமும், தமிழ்ப்பற்றும் புரிகிறது நண்பரே.....காலம் ஒருநாள் மாறும் அதுவரை பொறுப்போம்.
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!