Translate Tamil to any languages.

வெள்ளி, 23 மே, 2014

மின்நூல்கள் பயன்தருமா?

உறவுகளே! பல இணையத்தளங்களில் (அவர்களது அனுமதியுடன்) இருந்து பதிவிறக்கிய மின்நூல்களை ஒன்றுதிரட்டி சேமிப்பகங்களில் வைத்திருக்கிறேன். பெரும்பாலும் எனது தெரிவாக அமைந்திருந்தாலும் உளவியல், இதழியல், தமிழ் இலக்கணம், பாட்டு இலக்கணம், தமிழ் இலக்கியம், கணினி எனப் பல துறை நூல்களைத் தொகுத்திருக்கிறேன். மேலும், பல நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைத் திரட்டிக் களஞ்சியப்படுத்தவும் எண்ணியுள்ளேன். இம்முயற்சிக்குப் பலர் உதவியும் ஒத்துழைப்பும் தருவதாகக் கூறியுமுள்ளனர்.

"எப்படியோ ஆயிரமாயிரம் மின்நூல்களைத் திரட்டி வைத்திருந்தாலும் இவற்றால் எவருக்குப் பயன்கிட்டும்?" என நீங்கள் கேட்கலாம். நானொரு எழுத்தாளராக, கவிஞராக, கதாசிரியராக, பாடலாசிரியராக, நாடக ஆசிரியராக என்றில்லாமல் உளநல மதியுரையராக, உளவியலாளராக, இதழியலாளராக, எனப் பல நிலைக்கு உயர எண்ணியுள்ள எல்லோருக்கும் பயன்தரும் வகையில் இம்மின்நூல் களஞ்சியத்தை ஒழுங்குபடுத்தி உள்ளேன்.

மேலும், "மின்நூல்கள் பயன்தருமா?" என நீங்கள் கேட்கலாம்.

அறிஞர்கள் - தங்கள்
அறிவைப் படைத்திருக்க - அவை
அச்சு நூல்களாகவோ மின்நூல்களாகவோ
எம் கைக்கெட்டலாம் - அவை
எம் அறிவைப் பெருக்க உதவுமே!
அறிவைப் பெருக்கலாம் என்பது
அறிவில் விருப்பம் / நாட்டம் உள்ளோருக்கு மட்டுமே
இலகுவாயிருக்கும் என்பேன்!
பெற்றோர்களிடமோ
நண்பர்களிடமோ
ஆசிரியர்களிடமோ
ஊடகங்களிடமோ இருந்து
நாம்
அறிவைப் பெறுவது போலவே
மின்நூல்களைப் படித்தும்
பயனீட்டலாமே - ஆனால்
கைக்குள் அடங்கி நிற்கும்
அச்சு நூல்களைப் போலல்லாது
கணினி வழியே படிக்க முடிந்தாலும்
அறிவைப் பெருக்கும் வழி ஒன்றே!
பொதுவாக, முடிவாகச் சொல்வதாயின்
அறிஞர்களின் அறிவைத் திரட்ட
நம் அறிவைப் பெருக்க
நல்லதோர் ஊடகம் மின்நூல்களே!

இன்றைய தொழில் நுட்ப உலகில் அச்சு ஊடகங்களை விட மின் ஊடகங்களே முன்னிலையில் இருக்கிறது என்பதை மறக்கமுடியாது. மேலும் கணினி, மடிக்கணினி, நடைபேசி, இணையப்பக்கங்களில் எனப் பல வழிகளில் மின்நூல்களைப் படிக்க முடியும். நாம் இவ்வாறு ஒரு வழியில் மின்நூல்களைப் படிக்க வசதி கொண்டிருந்தால் போதும். புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர் தமக்குத் தேவையான மின்நூல்களைப் பெற்றுத் தமிழறிவைத் தம் பிள்ளைகளுக்கு ஊட்டுவார்கள் என நம்பியே மின்நூல் களஞ்சியம் அமைத்தேன்.

உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண இம்மின்நூல் களஞ்சியம் உதவுமென நம்புகிறேன். தமிழ் தெரியாதோரும் தமிழை மறந்தோரும் தமிழை ஆங்கில மொழி மூலம் படிக்க உதவும் நூல்களும் இம்மின்நூல் களஞ்சியத்தில் இருக்கிறது. மேலும் கணினித் தொழில் நுட்ப நூல்களும் உண்டு. இவற்றை எல்லாம் படிக்க விரும்பி நூல்களைத் தேடும் உள்ளங்களுக்கு இந்தச் செய்தியைச் சொல்ல இந்தத் தளத்தினூடாக ஒவ்வொரு நூல்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் அறிமுகம் செய்யவுள்ளேன்.

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மேலே குறிப்பிட்டவாறு மின்நூல்கள் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். அடுத்து உங்கள் தளங்கள் ஊடாகவோ நண்பர்கள் ஊடாகவோ உலகெங்கும் வாழும் உறவுகளுக்குத் தெரியப்படுத்துங்கள். அதாவது படிக்க விரும்பி நூல்களைத் தேடும் உள்ளங்களுக்குத் தெரியப்படுத்தி உதவுங்கள். கீழ்வரும் படத்தைச் சொடுக்கி மின்நூல் களஞ்சியப் பக்கத்தைப் பார்வையிடலாம்.

4 கருத்துகள் :

  1. Followers ஆகி விட்டேன்... இனி இந்த தளத்தையும் தொடர்கிறேன்... விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்!

    மின்னுால் பதிவுகள் என்றும் இருப்பவை!
    பொன்னுால் தொகுப்பெனப் போற்று!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மதியுரையை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!