Translate Tamil to any languages.

ஞாயிறு, 11 மே, 2014

அன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்!

பாப்புனைய இறங்கு முன் அன்னையர் நாள் பற்றி எண்ணிப் பாருங்கள். அம்மா எல்லோருக்கும் பொதுவான உறவு. எல்லோரும் அம்மா  வயிற்றில் கருவாகி, உருப்பெற்று, அம்மாவின் வயிற்றை உதைத்து தள்ளி, தாய் மண்ணில் தவழ்ந்து, தலை நிமிர்ந்து நடை போட வைத்த அந்த அம்மாவை நினைவூட்டும் நாளாக அன்னையர் நாள் விளங்குகிறதே!

அடுத்து, அம்மாவை நினைவூட்டும் பிறர் பாக்களை/கவிதைகளை, திரைப் பாடல்களை நினைவுபடுத்துங்கள். ஆயினும், அம்மாவைப் பிரிந்திருந்த வேளை உங்கள் உள்ளத்தில் எழுந்த அம்மாவின் அருமையை எண்ணிக்கொள்ளுங்கள். இனி அந்த அம்மாவை நினைவூட்டும் அன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய முயலுங்கள்.

ஆயினும், தங்கள் பாவில் பிறர் எழுதிய அடிகள் வராதவாறு பேணவும்.  எப்படியோ, ஓரிரு அடிகள் வந்தே ஆகவேண்டும் என இருப்பின் யாருடைய அடிகளைப் பொறுக்கி எழுதுகிறோம் எனச் சுட்டிக்காட்ட வேண்டும். இல்லையேல் எம்மை இலக்கியத் திருடர்கள் என்று தான் அழைப்பார்கள்.

எடுத்துக்காட்டாக மன்னன் படத்தில் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற பாடலடியைத் தங்கள் பாவில் இணைக்க விரும்பினால் பின்வருமாறு கையாளலாம்.

அன்னையர் நாளாம் இன்றென அறிய
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற
மன்னன் படப்பாடலை மீட்டுப்பார்க்கிறேன்!

இனி, உங்கள் சொந்த எண்ணங்களில் விளைந்த பாவண்ணத்தைப் பார்ப்போமா... என்னை ஈன்றவளும் அம்மா, அம்மாவை ஈன்றவளும் அம்மா என நீங்கள் அறிந்தால் கீழ்வரும் அடிகளை ஆக்கலாமே!

அன்னையை ஈன்றவளும் அன்னையே
என்னையை ஈன்றவளும் அன்னையே
உன்னையை ஈன்றவளும் அன்னையே
அன்னையே சான்றாவள் என்னையே
பிள்ளையென உலகுக்கு உரைக்கவே!

எம்மைப் பெத்து வளர்த்து ஆளாக்கிய அம்மா பட்ட துன்பம், துயரம் ஏராளம் இருக்கும். அவற்றை அம்மாவைப் பிரிந்திருந்த வேளை எண்ணிப் பார்த்திருப்பியளே! அவற்றை எழுதினால் கூட பா/கவிதை வருமே!

வெந்து கொண்ட வயிற்று அன்னை
நொந்து கொண்டே பாலூட்டிய அன்னையே
நொந்து பெத்த அன்னை - என்னை
நொந்து கொள்ள விடாத அன்னையே
பிள்ளைகள் நாம் மறப்போமா!

எம்மை ஈன்ற போது தாய் பட்ட துயரையும் தான் நொந்தாலும் எம்மை நோகாமல் வளர்த்த தாய் பற்றி எழுதினோம். இனி, அப்பா அடிக்க வந்தாலும் அம்மா அடிக்க விடமாட்டார். அதைப் படிக்கிற காலத்தில அறிந்திருப்பியள். அதுபற்றி அடுத்துப் பார்ப்போமா!

படிக்காத வேளை பார்த்தும் - என்னை
அடிக்காது அன்பு காட்டிய அன்னையே
படிக்க வைக்க முயன்றாள் - என்னை
அடிக்காது அறிவு ஊட்டிய அன்னையே
படித்தவரானோம் எம் அன்னையாலே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே! மேலே எப்படி எண்ணமிட்டு எப்படிப் பாப்புனைய முயன்றிருக்கிறேன் என்பதை விரித்திருக்கிறேன். பாப்புனைந்த வேளை சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கு பற்றி அறிய விரும்பி இருப்பியளே!

அன்னையை, என்னையை எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'ன்' வரவும் வெந்து, நொந்து எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'ந்' வரவும் படிக்காத, அடிக்காது எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'டி' வரவும் எதுகை அமைத்துள்ளேன்.

சீர்கள் / சொல்கள் முதலெழுத்துப் பொருந்தி வர அமைதல் மோனை என்றும் சீர்கள் / சொல்கள் ஈராமெழுத்துப் பொருந்தி வர அமைதல் எதுகை என்றும் அறிவீர்கள். மரபுக் கவிதை அல்லது புதுக் கவிதை எதுவானாலும் எதுகை, மோனை அமையப் பாப்புனைந்தால் தான் இசையோடு படிக்கச் சுகமளிக்கும்.

அன்னையை ஈன்றவளும் அன்னையே
என்னையை ஈன்றவளும் அன்னையே
உன்னையை ஈன்றவளும் அன்னையே
அன்னையே சான்றாவள் என்னையே
பிள்ளையென உலகுக்கு உரைக்கவே!

வெந்து கொண்ட வயிற்று அன்னை
நொந்து கொண்டே பாலூட்டிய அன்னையே
நொந்து பெத்த அன்னை - என்னை
நொந்து கொள்ள விடாத அன்னையே
பிள்ளைகள் நாம் மறப்போமா!

படிக்காத வேளை பார்த்தும் - என்னை
அடிக்காது அன்பு காட்டிய அன்னையே
படிக்க வைக்க முயன்றாள் - என்னை
அடிக்காது அறிவு ஊட்டிய அன்னையே
படித்தவரானோம் எம் அன்னையாலே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே! மேற்படி பாப்புனைந்த பின் என்ன தலைப்பிட்டிருப்பியள்? அன்னையர் நாளில் எண்ணிய எல்லாம் எழுதியமையால் 'அன்னையர் நாளில் எண்ணிய சில...' என்று தலைப்பிட்டுக் கொள்வோமா! ஏனையா, இப்படிப் பாப்புனைய எடுத்துரைத்தேன்? உங்கள் கைவண்ணத்தால் ஆன பாவண்ணத்தால் உலகெங்கும் தூய தமிழ் பரப்பிப் பேணவே!

10 கருத்துகள் :

  1. இப்படி எல்லாம் எனக்கு எழுத வராதே...! நீங்கள் நன்றாக எழுதி உள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயன்றால் இயலாதது ஏதுமுண்டோ?
      முயற்சி செய்யுங்கள்
      வெற்றி பெறுங்கள்
      வாழ்த்துகள்

      நீக்கு
  2. அருமையாகக் கற்றுத் தருகிறீர்கள்.
    தொடருங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பெறுமதியான கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. அவசரமாக எழுதி உடனேயே போடவேண்டும் என்று போட்டு விட்டேன். உங்கள் பதிவை பார்த்திருந்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. விபரங்களுக்கு
    மிக்க நன்றி ! வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பெறுமதியான கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. பாப்புனைய கற்றுத் தரும் தங்களின் முயற்சிகள் யாவும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் ஐயா .
    மிக்க நன்றி பகிர்வுக்கும் அழைப்பிற்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பெறுமதியான கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் பெறுமதியான கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!