Translate Tamil to any languages.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!

தமிழ் இலக்கண ஆசிரியர் அகத்தியரும்
சிவவழிபாட்டிற்குச் செம்பிலே தேக்கிவைத்த நீரை
காகவடிவில் வந்த கணபதியார் தட்டிவிட
காவிரி ஆறான தண்ணீர்க் கதையுமுண்டே!
பிறந்த நாள், நன்நாள் என்றால் கூட
இனிக்க இனிப்புச் சிற்றுண்டியுடன்
குடிக்கப் பால்த்தேனீர் பருக நீட்டுவதும்
தமிழர் வரலாறு கூறும் பண்பாடே!

விருந்தாளிகள் குளிர்நீராய்ப் பருகுவதற்கல்ல
வீட்டிற்கு வந்தவுறவு முறியாமல் பேணவே
செம்பும் தண்ணீரும் நீட்டிய பண்பாடு - இப்ப
நம்ம வீடுகளிலே காணாமல் போய்விட்டதே!

அறிவியல், நுட்பங்களெனப் பல வழிகளிலும்
உலகம் முன்னேறிக்கொண்டே இருக்க
எங்கள் தமிழர் பண்பாடு மட்டுமே
எங்குமே பின்னேறிக்கொண்டே இருக்கிறதே!

எடுத்துக்காட்டுக்கு எந்தப் பொன்நாளாயினும் சரி
பண்பாட்டை மறந்து பணத்தை இறைத்து
எடுத்துக்கோ எடுத்துக்கோ என நீட்டுவதும்
குடிக்கப் புகைக்க வேண்டியன எல்லாமே!
கண்ட குடிகளும் கண்ட நிகழ்விலே
கண்டதையும் பால், அகவை வேறின்றி
குடிச்சுப் புகைச்சு வீழ்ந்திட்ட விளைவால்
தமிழர் பண்பாடு காற்றிலே பறக்குதே!
உறவுகளே! உலகம் முன்னேறுவதைப் பாரும்!

படங்கள்: வலை வழியே பொறுக்கி மேம்படுத்தப்பட்டவை.

சான்று:
அகத்தியர்
செம்புக் குடத்தில தண்ணீர் எதற்கு?

இப்பதிவு முற்றிலும் வகை-(4) - புதுக்கவிதைப் போட்டியிற்காக எழுதப்பட்ட எனது சொந்தப் பதிவு என்பதை உறுதிப்படுத்துகிறேன்.

இப்பதிவு "வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடாத்தும் மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015“ இற்காக எழுதப்பட்ட பதிவு என்பதை உறுதிப்படுத்துகிறேன்.

இப்பதிவு இதற்கு முன் எந்தவொரு ஊடகங்களிலும் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன். மேலும், இப்பதிவு போட்டி முடியும் வரை எந்தவொரு ஊடகங்களிலும் வெளியிடமாட்டேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

இதோ! உங்கள் எழுத்துக்கு உரூபா 50000.00 பரிசில்


வலைப்பதிவர் சந்திப்பு 2015 இற்கான வலைப்பூவில்...
என்ற எனது பதிவில் புதுக்கோட்டையில் நிகழவுள்ள வலைப்பதிவர் சந்திப்பு 2015 பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவர்களது பத்துச் செயல் திட்டங்களுக்கு அப்பால் பதினொன்றாவதாக உரூபா 50000.00 பரிசில் மற்றும் வெற்றிக் கேடயம் வழங்கும் செயல் திட்டத்தை, புதுக்கோட்டையில் நிகழவுள்ள வலைப்பதிவர் சந்திப்பு 2015 இற்கான செயல் வீரர்கள் அறிவித்துள்ளனர்.

வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை
தமிழ்நாடு அரசுதமிழ் இணையக் கல்விக் கழகம்
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000

ஒவ்வொரு பரிசுடனும்
தமிழ்க்களஞ்சியம் (http://www.tamilkalanchiyam.com) இணையம் வழங்கும் மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக ஐந்து போட்டிகளுக்குமான மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

உங்கள் நா வண்ணம் போல, உங்கள் கை வண்ணத்தைக் காட்ட அழகாக வடிவமைத்த ஐந்துவகைப் போட்டிகளைக் கீழே தருகின்றேன்.

வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி-கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -4 பக்க அளவில் 4பக்கம்இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - 4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - 4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்
வகை-(4) புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5) மரபுக்கவிதைப் போட்டிஇளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி. அழகொளிரும் தலைப்போடு

போட்டி ஒழுங்குகள் (விதிகள்) பல உண்டு. அதில் "வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்." என்பதையே நான் விரும்பிப் போற்றுகிறேன்

புதிதாக வலைப்பக்கம் தொடங்கிப் போட்டியில் கலந்துகொள்வோருக்கு எனது முதன்மை வாழ்த்துகள். ஆயினும் அவர்கள் தொடங்கிய வலைப்பக்கத்தைத் தொடர்ந்து பேண நமது வலைப்பதிவர்கள் மதியுரை (ஆலோசனை) தருவார்கள் என உறுதிமொழி தருகின்றேன்.

என்னடா இந்தச் சின்னப்பொடியன் எப்பவும் இப்படித்தான்... படியெடுத்துப் பகிருவான், ஆனால் முழுமையாகத் தரமாட்டான் என்று குழம்பாதீர்... முழுமையாக, நிறைவாக (திருப்தியாக) தகவலறிந்து; போட்டியில் பங்குபற்றி, உரூபா 50000.00 பரிசில் மற்றும் வெற்றிக் கேடயம் பெற விரும்பும் எல்லோரும் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி படிக்கலாம்.

"விரும்பும் எல்லோரும்" என்பதை விட எல்லோரும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளில் பங்கெடுங்க விரும்புங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

எழுத்து எல்லாம் நன்று - அதை
இன்று வெளிக்காட்டி
போட்டிக்கு அனுப்பிப்போட்டால்
கிட்டுவது பரிசில் மட்டுமா?
புகழும் அல்லவா கிட்டும்!
நீங்கள் பரிசில் பெற்றால்
சிறந்த படைப்பாளி என்றே - உங்களை
ஏற, இறங்கப் பார்ப்பாங்களே!
பரிசில்களுக்காக அல்ல
சிறந்த படைப்பாளி என்று - நீங்கள்
உங்களை அடையாளப்படுத்தவேனும்
இன்றே - உலகளாவிய
மின்தமிழ் இலக்கியப் போட்டிகளில்
பங்கெடுங்க விரும்புங்களேன்!

சனி, 12 செப்டம்பர், 2015

வலைப்பதிவர் சந்திப்பு 2015 இற்கான வலைப்பூவில்...


அறிஞர்கள் பலர் ஒன்றிணைந்து "வலைப்பதிவர் சந்திப்பு 2015" இற்கென வலைப்பூ ஒன்றைத் திறந்து வலைப்பதிவர் சந்திப்புப் பற்றிய எல்லாவற்றையும் அக்கு வேறு ஆணி வேறாகப் புட்டுப் புட்டாக போட்டுடைத்து உண்மைகளை வெளிப்படுத்திப் புதுக்கோட்டைக்கு வருமாறு அழைக்கின்றனர். ஒவ்வொரு அறிஞர்களும் வெளிப்படுத்துவதைப் பார்த்தால் நம்பிக்கை ஊட்டும் செயற்குழு, பயன்தரும் பணித்திட்டங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

உண்மையில் இப்வலைப்பூவிலுள்ள பதிவுகளைப் படித்தால் எவர் அழைப்புத் தாராவிட்டாலும் நாம் புதுக்கோட்டைக்குப் போய் வலைப்பதிவர் சந்திப்பு 2015 இல் கலந்துகொள்ளவேண்டிய எண்ணம் எம் உள்ளத்தில் தானாகவே பிறக்கும். அப்படியென்ன அக்கு வேறு ஆணி வேறாகப் புட்டுப் புட்டாக போட்டுடைத்து உண்மைகளை வெளிப்படுத்துகிறார்கள் என அறிய விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்.

தளத்தின் தலைப்பு
வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை
http://bloggersmeet2015.blogspot.com/
என்றிருக்க
வணக்கம் வருக வருக
http://bloggersmeet2015.blogspot.com/2015/08/welcome.html
என்ற பதிவில் - முதலில்
நான் பொறுக்கிய சொல்கள் இவை...
அப்படி என்னதான்யா இருக்கு புதுக்கோட்டையில?
http://www.madhumathi.com/2015/08/pudhukottaispecials.html
அப்படியே
அந்த வலைப்பூவை மேய்ந்தேன்.

வெளிநாடுவாழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
http://bloggersmeet2015.blogspot.com/2015/08/blog-post.html
என்றொரு பதிவைப் படித்தேன் - அதில்
"முக்கியமாக,
வெளிநாடுவாழ் தமிழ்வலைப்பதிவர்கள்
தமது நிதிஉதவி, விளம்பர உதவியுடன் – வரஇயலாதவர் –
தமது வாழ்த்துரையை, கவிதையை 10,15வரிக்குள் தெரிவித்தால்
அதை விழா அரங்கில் அழகாக எழுதி வைக்க விரும்புகிறோம்.
கவிதையாகவோ வாழ்த்துரையாகவோ தருக!" என்று கேட்டிருக்கிறாங்க...

ஈழத்திலிருந்து வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்ப அரசு இடமளிக்காமை, நானும் ஏழை என்பதாலும் விழா இனிதே இடம்பெற இறைவனை வேண்டி விழா ஏற்பாட்டாளர்கள், பங்கெடுப்போர் என எல்லோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன். அடுத்துவரும் பதிவர் சந்திப்புகளில் கலந்துகொள்ள முயற்சி செய்கிறேன். எப்படியிருப்பினும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பதிவர்கள் நிதிஉதவி, விளம்பர உதவியுடன் கவிதையோ வாழ்த்துரையோ அனுப்பி வைப்பீர்களென நம்புகிறேன்.

உங்களூரிலும் நீங்களும்
வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வை நடத்தலாம்
அதற்கு முன்
“வலைப்பதிவர் திருவிழா-2015” நல்ல சில ஆலோசனைகள்
http://bloggersmeet2015.blogspot.com/2015/09/2015.html
என்ற பதிவை மறக்காமல் படியுங்கள்!
அறிஞர்கள் பலர் வெளிப்படுத்திய
பெறுமதிமிக்க மதியுரைகள்
பயன்தரும் எண்ணங்கள் எல்லாமே
என் உள்ளத்தில் வந்து குந்திவிட்டன...
உங்கள் உள்ளத்தையும் ஈர்க்குமென நம்புகின்றேன்!

சில பேருக்குப் புது இடத்துக்கு போகக் கொஞ்சம் தயக்கமா இருக்கும்; சிலருக்கு பயமாகக் கூட இருக்கும். இப்படிப் புதிய எதற்கும் பயப்படுவதை "Neophobia" என உளவியலில் அழைப்பதைச் சுட்டிக்காட்டியும் பயங்களை வீசிப்புட்டு புதுக்கோட்டைக்கு வருமாறு அறிஞர் ஒருவர் அழைப்பதை
இது நம்ம ஏரியா
http://bloggersmeet2015.blogspot.com/2015/09/our-pudukkottai-blogger-meet.html
என்ற பதிவில் படிக்கலாம்.

(1)    கவிதை ஓவியக் கண்காட்சி
(2)    பதிவர்களின் அறிமுகம்
(3)    தமிழிசைப் பாடல்கள்
(4)    நூல்வெளியீடுகள்
(5)    குறும்பட வெளியீடுகள்
(6)    20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்
(7)    தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு
(8)    பதிவர்களுக்கான போட்டிகள் – பரிசுகள்
(9)    புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்
(10)   பதிவர்களின் புத்தகக் கண்காட்சி, விற்பனை என
நிகழ்ச்சி நிரல் தயாராகிவருகிறது என
வலைப்பதிவர் திருவிழா -தங்கள் வரவு “நல்வரவு“ ஆகிட ஒரு வேண்டுகோள்...
http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_10.html
என்ற பதிவில் படிக்கலாம்.

வலைப்பதிவர் சந்திப்பு 2015 இற்கான வலைப்பூவில் "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற அடிப்படையில் நான் படித்ததில் பொறுக்கிய எடுத்துக்காட்டுக்கள் சிலவற்றைப் பகிர்ந்துள்ளேன். வலைப்பதிவர்கள்/ வலைப்படைப்பாளிகள் சந்திப்பு எவ்வளவுக்கு எவ்வளவு பயனுள்ளது என்பதை சின்னப்பொடியன் நான் சொல்லத் தேவை இல்லையே! அவ்வளவுக்கு அவ்வளவு வலைப்பதிவர் சந்திப்பு 2015 இற்கான வலைப்பூவை மேய்ந்தால்/ உலாவினால் கற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன். அப்படியே படித்து முடித்த கையோட கைகுலுக்கும் நண்பர்களுக்குக் கூறி உலகெங்கும் பரப்பி உதவுங்கள்.

புதுக்கோட்டையில் ஒன்றுகூடும்
வலைப்பதிவர்களே/ வலைப்படைப்பாளிகளே
எங்கள் எழுத்தாலே வெளிவந்த
எங்கள் அறிமுகங்களை அறிந்து
எமக்கிடையே உறவைப் பேணிய
நாம் ஒன்றுகூடினால் என்னவாகும்?

என்னவாகுமென எண்ணுவதை விட
ஒன்றுகூடிப் பண்ணுவோம் பல - அதில்
உலகத்தாருக்குத் தமிழை ஊட்டுவோம்...
உலகத்தார் தமிழரை அடையாளம் காணவே!

புதுக்கோட்டையில் நிகழும்
வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வு
ஏற்பாட்டாளர்கள், நெறிப்படுத்துவோர் உடன்
பங்குபற்றுவோர் எல்லோருக்கும் - உங்கள்
யாழ்பாவாணனின் வாழ்த்துகள் - அதனை
ஏற்றுக்கொள்ளுங்கள் உறவுகளே!

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

நம்பக்கூடியதை நறுக்காகக் கூறலாமே!

வெளியீடு என்பது பகலுக்குப் பகலவன் (கதிரவன்) போல இரவுக்கு இரவவள் (நிலவவள்) போல ஒளியை வெளியிட்டு உலகில் மாற்றத்தைக் காட்டும் செயலே! ஆற்றல் உள்ளோரின் வெளியீடும் அறிவொளியை வெளியிட்டு வாசகர் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயலாக இருக்கவேண்டும். சூழலில், மக்கள் உள்ளங்களில், நாட்டில், அரசில், உலகில் மாற்றத்தை வெளியீடுகளால் ஏற்படுத்த முடியும். எழுதுகோல் ஏந்திய எவரும் தமது படைப்புகளை வெளியிட முன் இவற்றை எல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

எத்தனையோ பதிவர்கள் (வலைப் படைப்பாளிகள்) இந்த உண்மையைக் கருத்தில் எடுத்து எத்தனையோ பதிவுகளைத் தங்கள் வலைப்பூக்களில் பகிருகின்றனர். இந்தியத் தமிழ்நாட்டில் 'சவுக்கு' (https://www.savukkuonline.com/) என்னும் அரசியல் மற்றும் அரசு தொடர்பான கருத்துக்கள் வெளியிடுதல் மற்றும் அநீதிகளை இடித்துரைக்கும் ஒரு தமிழ் வலைப்பூவாக அறிஞர் சங்கர் அவர்களால் நடாத்தப்படுகிறது. சவுக்கு இணையதளத்தையும் கூட 28/02/2014 அன்று பத்து நாட்களுக்குள் மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை யாவரும் அறிவர். அதற்குக் காரணம் 'சவுக்கு' என்ற வலைப்பூ வெளியிட்ட வலுவான படைப்புகளே!

எல்லோரும் சிறந்த பதிவர்களாக மின்ன வேண்டும். அவர்கள் மின்னும் வேளை உலகெங்கும் நற்றமிழ் பரவவேண்டும். எழுதுகோல் ஏந்தி எழுதிப் படைத்து வெளியிடும் வேளை தாம் உலகெங்கும் மின்ன வேண்டும் என்பதற்காகப் பிறரது பதிவைப் படியெடுத்துப் பகிர இயலாதே! ஆயினும் எடுத்துக்காட்டிற்காக அல்லது சுட்டிக் காட்டுவதற்காக  பிறரது பதிவை அவரது அடையாளத்துடன் பகிர இயலும் என்பேன்.

யாழ்பாவாணன் என்ற சின்னப்பொடியன் மேற்படி பலரது பதிவுகளை அறிமுகம் செய்திருந்தாலும் அன்றொரு நாள் மாட்டிக்கிட்டார். இந்தியத் தமிழ்நாட்டிலும் ஈருருளிகளில் பயணிப்போர் தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) அணிய வேண்டுமென்ற ஒழுங்குமுறை நடைமுறைக்கு வந்தாச்சு! அதன் பின் ஆளுக்கொரு தமது உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை வெளியிட்டாலும் அரசின் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டனர். தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) அணிய வேண்டுமென்பதற்காக முகத்தை மறைக்கும் கறுப்புக் கண்ணாடி போட்டதைப் பாவித்ததால் இணையர்கள் மாறிப் பறந்தனராம். அதனைச் சின்னப்பொடியன் யாழ்-தினக்குரல் நாளேட்டில் படித்திருக்கிறார்.

யாழ்-தினக்குரல் நாளேட்டில் வெளிவந்த பகுதியை அப்படியே படியெடுத்துப் பாவிக்காத சின்னப்பொடியன், தனது கைவண்ணத்தில் "தலைக்காப்பு அணிகலனும் ஆள்மாறாட்டமும்" என்ற தலைப்பில் ஒரு பதிவை வழங்கினார். ஆயினும், அதற்கான பின்னூட்டத்தில் அறிஞர் சீராளன் அவர்கள் "தலைக்கவசம் அணிதல் அவசியமானது தான். ஆனாலும் யாழ் தினக்குரல் பொய்யான தகவலை உதாரணம் காட்டியது தான் தாங்க முடியல்ல... ஒரே நிறத்தில் ஈருருளிகளும் ஒரே நிறத்தில் ஆண், பெண் இணையர்களின் ஆடைகள் உயரங்கள்... எல்லாம் எப்படி சாத்தியமாகும்... ஐயோ ஐயோ" எனத் தெரிவித்திருந்தார்.

அதற்குச் சின்னப்பொடியனும் "தங்கள் ஐயப்பாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை தான். யாழ் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த பகுதியைப் படியெடுத்து இத்தளத்தில் பகிர முயற்சி செய்கிறேன்." என்று பதிலளித்த பின் அப்பகுதியை வெட்டிப் படியெடுத்து "தலைக்காப்பு அணிகலனும் ஆள்மாறாட்டமும்" என்ற  பதிவின் முடிவில் ஒட்டியிருக்கிறார். இதெல்லாம் சின்னப்பொடியனுக்குத் தேவை தானா? "பதிவை வலைப்பூவில் இணைக்குமுன் தான் எழுதியது நம்பக்கூடியதாக உள்ளதா? வாசகரை நம்பவைக்கத் தேவையான சான்றுகளை இணைக்க வேண்டுமா?" என்றெல்லாம் சிந்திக்கத் தவறியதாலே தான் பின்னூட்டத்திற்கு அஞ்சியே இப்படிச் செய்திருக்கிறார். அதனைப் பார்வையிடக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கலாம்.

http://www.ypvnpubs.com/2015/09/blog-post.html

வலைப்பூ ஒன்றிற்குப் பார்வையிடச் செல்வோர் பதிவைப் படித்திருந்தால் பதிவரின் எண்ணங்களை மட்டுமே அறிந்திருக்க முடியும்; பின்னூட்டங்களைப் படித்திருந்தால் பதிவரின் ஆளுமை, ஆற்றலை மதிப்பிட முடியுமே! மேற்காணும் இணைப்பைச் சொடுக்கிச் சின்னப்பொடியனின் தவறை மதிப்பிட்டு விட்டீர்களா? இணையர்கள் மாறிப் பறந்திருப்பின் அதனை நம்பக்கூடியதாக, அதற்கான சான்றை இணைத்திருந்தால் தவறிருக்காது என்பேன். பின்னூட்டத்திற்கு அஞ்சிச் சான்றை இணைத்தமையால் தவறு உணரப்பட்டிருக்கிறது.

வெளியீடு என்பது மாற்றங்களை ஏற்படுத்த உதவும் ஊடகம் எனின் அதற்குக் காரணம் வாசகர் உள (மன) மாற்றங்களே! ஒவ்வொரு பதிவரின் பதிவின் நீளம், அகலம், உயரம் அல்லது ஆழம் என வாசகர் பார்த்தாலும் பதிவர் சொல்ல வருகின்ற செய்தியைத் தானே அதிகம் கருத்திற் கொள்கின்றனர். அப்படியாயின் ஒவ்வொரு பதிவரும் தமது பதிவுகளின் ஊடாகச் சொல்ல வருகின்ற செய்தியை நம்பக்கூடியதாக நறுக்காகக் கூற முயன்றிருப்பின் வாசகர் உள்ளம் நிறைவடையும்.


வியாழன், 3 செப்டம்பர், 2015

தலைக்காப்பு அணிகலனும் ஆள்மாறாட்டமும்

இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் ஆடி (ஜூலை) முதலாம் நாள் தொடக்கம் தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) கட்டாயம் என்ற சென்னை உயர்நீதிமன்றம் கட்டளைப்படி (உத்தரவுப்படி) தமிழக அரசு, தமிழ்நாட்டில் இருசில்லு ஊர்தி (வாகன) ஓட்டிகள் தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) கட்டாயம் அணிய வேண்டுமென அறிவிப்புச் செய்திருந்தது. நானும் அது பற்றி வலைப்பூக்களைப் படித்து அறிந்தேன்.

தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) அணியத் தவறினால், ஈருளிகளின் ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யடும் என்று தெரிவிக்கப்பட்டதால்; காவற்றுறையினரின் கண்காணிப்பை மேலுள்ள படத்தில் பார்க்கலாம்.


"குறிப்பு:- குறிப்பிட்ட விளம்பரத்தில் உள்ள காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஹெல்மட், தலையை முழுவதும் மறைத்துக் காப்பது போல் அல்லாது வெறுமனே தலையில் அணியும் சாதாரண தலைக்கவசம் என்பது போல் காட்சிப்படுத்த்ப்பட்டுள்ளது,சற்று நெருடலாக உள்ளது(இதற்கு சரியான படத்தை பயன்படுத்தி இருக்கலாம் -நன்றி திரு,கண்ணன் அவர்கள்.) எனினும் வாகனம் ஓட்டும் நண்பர்கள் தங்கள் தலையை முழுவதும் மூடுவது போல் உள்ள தலைக்கவசத்தை தேர்ந்தெடுத்து வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ஏனென்றால் தலைக்கவசம் உயிர்க்கவசம்.நன்றி!" என்றவாறு மேற்காணும் படத்தின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்தது
இணைப்பு:  http://www.thirumangalam.org/3164
மேற்படி வலைப்பூப் பதிவைப் படித்ததும் "தலையை முழுவதும் மூடுவது போல் உள்ள தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) அணிவது நல்லதா? கெட்டதா?" என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோணி அவர்கள் தலைமையில் ஊரூராகப் பட்டிமன்றம் நடத்தினால் நல்வருவாய் ஈட்டலாம் போலத் தெரிகிறதே! எனது ஈழத்து யாழ்ப்பணத்தில் இருந்து வெளிவரும் யாழ்-தினக்குரல் நாளேட்டில் "தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) அணிந்து சென்ற இரு இணையர்கள் மாறிப் பயணித்தனர்." என்ற செய்தியைக் கூட நான் படித்தேன்.

அதாவது, வெவ்வேறான இணையர்கள் ஒரே நிற ஈருளிகளில் ஒரே நிற ஆடை, ஒரே நிற தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) அணிந்து சென்றனர். ஓர் இடத்தில் குறித்த வெவ்வேறான இணையர்கள் ஈருளியை நிறுத்திவிட்டு பொருள் வேண்டச் சென்றிருந்தனர். பொருள் வேண்டச் சென்ற வேளை தமக்குள்ளேயும் பிரிந்து சென்றிருந்தனர்.  ஈற்றில் இணையும் வேளை கணவன்-மனைவி மாறுபட்டு வெவ்வேறான இணையர்களாகப் பயணித்தனராம். 

ஈருளிகளில் பயணித்துக்கொண்டு இருக்கையில் இணையர்கள் செல்லும் வழி, கதை, பேச்சு ஆகியவற்றை வைத்து தாம் தாம் தமக்குள்ளே மாறி ஏறிக் குந்தியிருப்பதை உணர்ந்தனராம். பின்னர் கறுப்புக் கண்ணாடி போட்ட தலைக்காப்பு அணிகலனைத் (தலைக்கவசத்தை) திறந்து ஆளை ஆள் நேரில் பார்த்து உண்மையை உறுதிப்படுத்தினராம்.

அடுத்ததாக நடைபேசியில் தத்தம் கணவர்-மனைவிக்கு அறிவிப்புப் பறந்ததாம். குறித்த இடத்தில் எல்லோரும் ஒன்றுகூடித் தத்தம் உண்மைத் துணையுடன் மீள இணைந்து தத்தம் வழியே தாம் பயணித்தனராம். முகத்தை மறைக்கும் கறுப்புக் கண்ணாடி போட்ட தலைக்காப்பு அணிகலனைப் (தலைக்கவசத்தை) பாவித்ததால் வந்த விளைவு என யாழ்-தினக்குரல் நாளேட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதைத் தங்களுடன் பகிர்ந்தேன். 

கறுப்புக் கண்ணாடி போட்ட தலைக்காப்பு அணிகலனைப் (தலைக்கவசத்தை) பாவித்து வங்கிக் கொள்ளைகள் மேற்கொள்வதாலும் பிற தவறுகளைச் செய்வதாலும் இலங்கையில் கறுப்புக் கண்ணாடி போட்ட தலைக்காப்பு அணிகலனுக்குத் (தலைக்கவசத்திற்கு) தடை போடப்பட்டிருக்கிறது. 

ஈருளிகளில் பயணித்துக்கொண்டு போகையில் உங்களால் விபத்து நிகழாது என்ற நம்பிக்கையில் பயணித்தாலும் பிறரால் விபத்து நிகழ வாய்ப்பு உண்டு என்பதை உணர்ந்து தலைக்காப்பு அணிகலனை (தலைக்கவசத்தை) மாட்டிய பின் தங்கள் ஈருளியான உந்துருளியில் முறுக்கி முந்திச் செல்லலாம் என்பதை மறக்க வேண்டாம். முகத்தை மறைக்கும் கறுப்புக் கண்ணாடிக்குப் பதிலாக முகத்தை வெளிக்காட்டும் மெல்லிய (Light) நிறக் கண்ணாடி போட்ட தலைக்காப்பு அணிகலனைப் (தலைக்கவசத்தை) பாவித்தால் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம்.

யாழ்-தினக்குரல் நாளேட்டில் வெளிவந்த பகுதியைக் கீழே பார்க்கலாம்.