தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை நம்பித்தான் பழசைக் கழித்து விடும் நானை போகிப் பண்டிகை என்கிறோம்! தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பித் தான் வெயில், மழை தருவோனுக்கு நன்றி கூறும் கோட்பாட்டைச் சொல்லி பொங்கிப் படைத்து உண்டு களித்து தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம்! உண்டு, களித்துக் கொண்டாட உதவிய எம்வீட்டுச் செல்வங்களான பசு, எருது எல்லாவற்றுக்கும் அடுத்த நாள் கூட நன்றி கூறும் பொங்கல் படையலை பட்டிப்பொங்கல் என்கிறோம்! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு வலுச் சேர்க்கத் தான் உறவுகள் வீட்டுக்குப் போய் வந்து உண்டு களித்து உறவைப் பலப்படுத்தும் நன்நாளைத் தான் மீண்டுப் பாரும் காணும் பொங்கல் என்கிறோம்! உழவர் திருநாள் உறவுகள் பெருநாள் நன்றி கூறும் பண்பாட்டு நாள் தமிழுக்கு முதல் நாள் தைத்திருநாளே!
செத்து செத்து உயிர்த்து வந்த கதையை சொல்ல வந்தேன்! புதுக்குடியிருரப்பில் இருந்து வந்தேன் ஒட்டுசுட்டான் பக்கமாக வந்த வெடித்த எறிகணைத் துண்டுகள் பல என் வீட்டிற்குள்ளும் பாய்ந்தன... ஒன்று முற்றத்துப் பலா மரத்தில் இருந்த பலா பழத்தைக் கீறிக் கிழித்தது! இன்னொன்று முற்றததில் நின்ற உந்துருளியின் எரிபொருள் தாங்கியை உரசிக் கொண்டு போனது! வேறு சில வீட்டுக் கூரையை கிழித்துக் கொணடு போனது! வீட்டிற்குள் உறங்கிய என்னையும் இல்லாளையும் குத்திக் கிழித்து உயிர் குடிக்காமல் போக புதுக்குடியிருப்பு, கோம்பாவிலில் குடியிருக்கும் காட்டு ஆமணக்கு விநாயகர் தான் காப்பாற்றியது என்று இன்றும் அழுகின்றோம்! தமிழன் உயிர்களைக் குடிக்கும் கொத்துக் (கிளஸ்டர்) குண்டுகளுக்கும் தமிழன் உடைமைகளை எரிக்கும் நெருப்புக் (பொஸ்பரஸ்) குண்டுகளுக்கும் முகம் கொடுக்க முடியாமல் ஊர் ஊராகப் பாதுகாப்புத் தேடி அலைந்தோம்! போகும் வழிகளில் பிணங்களைக் கடந்து போய்க் கொண்டு இருக்கும் போது சூட்டுச் சத்தம், குண்டுச் சத்தம் கேட்க பத்தாப்பளைக் கண்ணகி அம்மாவே ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரரே எங்களைக் காப்பாற்று என்றழுதுகொண்டு போய்க் கொண்டிருக்கையிலும் நாம் கடந்த பின் எமக்குப் பின்னே நாம் வந்த வழியில் குணடுகள் வெடித்தன... அம்மோய் அப்போய் என்றழும உறவுகளின் குரல்களும். காதைக் கிழித்தேன்... நிப்பாட்பாத நிப்பாட்டாத - அடுத்த குண்டு விழுந்தால் நாங்கள் செத்துப் போவோம் என்றழும் இல்லாள் பேச்சுக் கேட்டு என் உந்துருளியை முறுக்கிச் சென்றேன்! இரணைப்பாலை, அம்பலவன் பொக்கணை, சாளம்பன், இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்ககால், வாட்டுவாகல் என பஞ்சம் பிழைக்கத் தஞ்சம் தேடி அலைந்தோம்! முள்ளிவாய்க்கால் தள்ளி வந்து வட்டுவாகல் நெருங்கு முன் ஆங்கோர் இடத்தில் கிடந்த வேளை அரூகே வந்தாங்கே வெடித்த குண்டால் உடல் சிதறிப் பல உயிர்கள் பிரிய பிள்ளையாரோ சிவபெருமானாரோ இயேசுநாதரோ/கர்த்தரோ அல்லாஹ்வோ எல்லா மதங்களும் சுட்டும் கடவுள் என்னையும் இல்லாளையும் காப்பாற்றினார்! வன்னி மண்ணில் போர்ச் சூழலில் நாம் வாழ்ந்த வாழ்க்கை நிலை எழுத உலகளவுத் தாளும் வானுயர்ந்த எழுதுகோலும் போதாது போதாது - எமது வாழ் நாளில் எழுதி முடிக்கவும் இயலாது இயலாது - அந்த கடவுள் தான் நீண்ட ஆயுளும் தரவேண்டும்!
02-03-2024 சனி மாலை 3 மணிக்கு யாழ் சரசுவதி (ராஜா கிறீம் ஹவுஸ்) மண்டபத்தில் மட்டுநகர் நீலையூர் சுதாகரனின் "கொத்துவேலி" பொத்தக அறிமுக விழாவில் "எங்கே போகிறோம்" என்ற தலைப்பில் பாடப்பட்ட என் கவிதை.