Translate Tamil to any languages.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

பாதணி (செருப்பு)


(மேலுள்ள படத்தைப் பார்த்ததும் எழுதியது)

”பாதணி” என்று
தலைப்பிட்ட போது தான்
சடையப்ப வள்ளல் வளர்த்த
வான்மீகியின் இராமாயணத்தை
கற்பனை அலை வீசும் கடலாக
இராமனின் பாதணியை வைத்து
பரதன் அண்ணன்
அயோத்தியை ஆண்ட கதையை
சுந்தரத் தமிழில்
காவியமாய்ப் பாடி முடித்த
கம்பரை மீட்டுப் பார்த்தே
கா(பனை)வோலைக் கால்களை
வெட்டிப் பாதணி போட்டவர்களும்
குளிர்பானக் குடுவையை (போத்தலை)
தட்டையாக்கிப் பாதணி போட்டவர்களும்
நினைவில் வர - அவை
நம்ம ஈழ மண்ணில் நிகழ்ந்த
போரினால் ஏற்பட்ட வடுவாக
மறக்க முடியவில்லைக் காணும்
எனது அருமை உறவுகளே!
புதுப் பாதணி கடிக்கும் என்பது
நாம் படித்த பழமொழி
கடிக்கும் பாதணி உடனே
கல்லும் முள்ளும் குத்தும்
கால்களுடன் நடைபோட்ட
ஈழத்து உறவுகளை
எம்மொழியில் படித்தேனும்
உலகம் கண்டும் உதவவில்லையே!

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 01


அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன். இப்பகுதியில் அசை, சீர் பற்றிய கேள்விகளும் விளக்கங்களும் உள்ளடங்கி இருக்கிறது. அடுத்த பகுதி அடுத்த பதிவில் தர விரும்புகிறேன்.


இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

சான்றுகள்

நம்மாளுகள்
வாழ்கையின் கண்ணாடி!
நம் கலைஞர்கள்
மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி!
எமது காலம்
வரலாற்றுக் கண்ணாடி!
எந்த ஆண்டவனே வந்தாலும்
இந்த உண்மையை மாற்ற இயலாது!
பொய்கள்
காற்றிலே பறந்தாலும்
காற்றைக் கிழித்துக் கொண்டு
நாங்களே
உண்மைகளை நாடுகிறோம்!
ஆமாம், உண்மைகள்
அவ்வளவு கனமானவை!
வாழ்கையின் சான்றாக
"தாய்மையே வாய்மை" என்று
ஒரு வரிப்பாவில் கூறுவது பொய்யா?
ஓ! மனிதா!
ஒதுங்கித் தனித்து நின்று
ஒழிந்து - நீ
எதைச் செய்தாலும்
எப்போதும் ஊரறியச் சான்றுகள்
எண்ணிலடங்காமல் இருக்கே!

எதற்கு எதை மாற்றுவது?


தந்தையோ தன்னைப் போல
மருத்துவராக வாவென்று...
தாயோ தன்னைப் போல
பொறியியலாளராக வாவென்று...
பிள்ளையோ தனக்கு இலகுவானது
மருத்துவமும் பொறியியலும் கலந்த
உயிரித் தொழில்நுட்பம் தானென்று...
முக்கோண உச்சிகளாக
மூவரும் முரண்டு பிடிக்கையில்
எவரது உள்ளத்தில் எதை மாற்றுவது?
உலகெங்கும்
அறிவியல் வானைத் தொட
ஊரெங்கும்
மெய்யறிவு முகட்டைத் தொட
வீட்டில் பிள்ளைகள்
திரைப்பட நடிகர்கள் காட்டும் வழியில
தாங்களே பயணப்பட
எவர் போக்கில் எதை மாற்றுவது?
பெற்றவர்கள் தங்கட போக்கில
பிள்ளைகள் தங்கட போக்கில
ஊடகங்கள் தங்கட போக்கில
பள்ளிகளின் ஒழுக்கம் கிடப்பில
ஆசிரியர்கள் தங்கட நடப்பில
சிறார்கள் தாம் விரும்பிய வழியில
ஊரோ உருப்பட முடியல
நாடோ பின்னோக்கிய நடையில
நாட்டு வளம் குறுகும் நிலையில
மக்கள் வளம் தேயும் நேரத்தில
எல்லாம் அரசுப் பதவிகளில
உள்ளவர் கைகளில உருளுவதால
நாமும் ஊரும் நாடும் முன்னேற
எங்கே எதை மாற்றுவது?
நாட்டுக்கு நாடு போரோய
நாடுகளுக்கு உள்ளே போர் வெடிக்க
போராலே துண்டுகளாக நாடுகள் உடைய
நெடுநாள் ஆட்சிக்காரர் இறங்கியோட
உயிரிழப்பும் போர் முரசும் ஓயாத
எங்கட உலகில் அமைதியைப் பேண
எப்படி எதை மாற்றுவது?
வீட்டுக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, உலகிற்கு
எங்கும் எதிலும் எப்போதும்
ஒரே கோட்பாடு நடைமுறைக்கு வர
எல்லாம் மாறும் என்றாலும்
எதற்கு எதை மாற்றுவது?

தற்கொடைச் சாவுக்கு மாற்றுவழி தேடுவோம்


உலகையே அழவைத்த
நேற்றைய
முத்துக்குமாருவைப் போல
இன்றைய
பொறியியலாளர் கிருஸ்ணமூர்த்தியும்
உலகின் முகத்தைத் திருப்ப
கண்ணீர் கதை எழுதிவிட்டார்!
"இளைஞர்களே போராடுங்கள்.
ஆனால், தயவு செய்து
உங்களின் உயிர்களை
ஈகம் (தியாகம்) செய்ய வேண்டமென
ஈழத்து யாழ் தினக்குரலில்
வைகோ கூறியிருப்பதாகப் படித்தேன்!
தன்னை ஒறுத்துச் சாவடைதலால்
உண்மையை உணர்த்தலாம்...
ஆனால்,
வெளிப்பட்ட உண்மையால் கிடைத்த
விளைச்சலைப் பயன்படுத்த
தமிழர் இல்லையெனில்
எவருக்கு நன்மை?
போராட வேண்டமென
உங்களைத் தடுக்க
எனக்கோ எள்ளளவும் உரிமையில்லை...
எப்படியிருப்பினும்
தற்கொடைச் சாவை நிறுத்தி
மாற்று வழிகளில் போராடுவதையே
பலரும் விரும்புகின்றனர்!
ஒரு தமிழன் அல்லது ஒரு தமிழிச்சி
இவ்வுலகில் வாழும் வரை
முத்துக்குமாரு, கிருஸ்ணமூர்த்தி போன்ற
தொப்புள் கொடி உறவுகள்
எல்லோரையும்
நினைவூட்டிய வண்ணமே வாழ்வர்!