Translate Tamil to any languages.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

எதிர்த்தான் வீழ்ந்தான்

நீண்ட நாள் எதிரி
என்னை
பிடித்துச் சிறையிலடைக்க வழியின்றி
தன்னைத் தானே அழித்த கதை
உங்களுக்குத் தெரியுமா?
மூளையைப் பாவிக்காத முட்டாள் எதிரி
எனக்கு வேண்டியதை
எவரும் வழங்காமல் செய்தும்
உறவுகளாக எவரையும்
இணைய விடாமல் தடுத்தும்
எதற்கும்
தன் காலில் விழவைத்தால்
பிடித்துச் சிறையிலடைக்கலாமென
எதிர்த்தான் வீழ்ந்தான்!
ஒர் உறவை முறிப்பதனால்
புதிதாய் எந்த உறவும்
முளைப்பதில்லை
புதிதாய் இணைந்த உறவால்
பழைய உறவுகள்
முறிவதைப் பார்க்கிறோம்
எதிரிக்கு எட்டுமா - இந்த
உண்மை!
"ஆயிரம் நண்பர்களை
வைத்துக்கொள்
ஒர் எதிரியை ஏனும்
உருவாக்கி விடாதே" என்றுரைத்த
பாவரசர் கண்ணதாசனின் வழிகாட்டலின் படி
இயன்றவரை
கைக்கெட்டியதைக் கையாண்டதால்
நானோ
எதிரியின் பிடியில் சிக்கவில்லை!

சிவராத்திரிக்குப் பின்னாலே...

இந்துக்கள் கொண்டாடும் சிவராத்திரியின் பின்னாலே பெரிய உண்மையே மறைந்திருக்கிறது. படைத்தல் கடவுளான பிரம்மாவும் காத்தல் கடவுளான விஷ்ணுவும் தான் தான் பெரியவர் என்ற இறுமாப்பும் தலைக்கனமும் இருந்து வந்தது. இந்துக்களின் முழு முதற் கடவுளாகிய சிவன் இதனை முடிவுக்குக் கொண்டுவர முனைந்தார்.
சிவன் பூமிக்குக் குறுக்கே ஒளிப் பிளம்பாகத் தோன்றி இதன் அடியையோ முடியையோ முதலில் கண்டுபிடித்து வருபவரே பெரியவர் என அறிவித்தார். அவ்வழியே பிரம்மாவும் விஷ்ணுவும் போட்டியில் இறங்கினர்.
பிரம்மா பறவையாக முடியையும் விஷ்ணு பன்றியாக அடியையும் தேட முயன்றனர். இறுதியில் இருவரும் தோல்வி கண்டனர்.
விஷ்ணு தனது தோல்வியை சிவனிடம் வந்து சொன்னார். வானிலிருந்து விழுந்த தாழம்பூவைக் கொண்டு வந்து சாட்சியாகக் காண்பித்து முடியைக் கண்டுபிடித்தாக பிரம்மா பொய் கூறினார். எல்லாம் அறிந்த சிவனுக்கு உண்மை தெரிந்தமையால் பிரம்மாவின் விளையாட்டைக் கண்டித்தார். இருவரது இறுமாப்பும் தலைக்கனமும் சிவனின் செயலால் அடங்கியது. இச்செயலை நினைவூட்டிச் சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி ஆகும்.
சிவனுக்கு உண்மை கூறிய விஷ்ணுவுக்கு உலகெங்கும் கோவில்கள் உண்டு. சிவனுக்குப் பொய்ச் சாட்சி கூறிய தாழம்பூவை கோவிற் பூசைகளில் சேர்ப்பதுமில்லை... சிவனுக்குப் பொய் கூறிய பிரம்மாவுக்கு எங்கேனும் கோவில்களும் இல்லை. சிவராத்திரிக்குப் பின்னாலே இப்படியொரு வரலாறு மறைந்திருக்கிறது.

குழப்பம்

எலிக் கட்சித் தொண்டர் : என்னங்க நாய்க் கட்சி, அடிக்கடி குலைத்துக் குலைத்து குழப்பம் விளைவிக்கிறாங்க...

பூனைக் கட்சித் தொண்டர் : குழப்பம் விளைவித்து நம்மாளுகள் சாவடைந்தால் தானே, அவங்க ஆட்சியில நிலைக்கலாம்...

நல்ல நாடகம்


(ஞாயிறு விடுமுறை நாளாகையால் ஊர்க்கோழி உரிச்சுக் காய்ச்சித் தின்று முடிய தாய், தந்தை, பிள்ளைகள் வீட்டின் முன் பகுதியில் குளிர்களி வேண்டிக் குடித்த வண்ணம் இருந்தனர்.)
பிள்ளை-01 : அப்பா! ஓர் உதவி செய்வியளே!
தகப்பன் : இப்ப ஏலாது. கோழிக்கறியும் சோறும் செமிக்கப் படுத்து நித்திரை கொள்ளுங்கோ...
பிள்ளை-02 : அம்மா! ஓர் உதவி செய்வியளே!
தாய் : கொப்பர் படுக்கச் சொல்கிறார், பிறகு, எனக்கு ஏன் தொல்லை தாறியள்...
(இரண்டு பிள்ளைகளும் அறைக்குள் நுழைந்து சிறிது நேரத்தின் பின் வெளியே வந்து நின்று...)
இரண்டு பிள்ளைகளும் : அப்போய்! அம்மோய்! நாங்க படம் பார்க்கப் போறோம்...
தகப்பன் : என்ன படமடா?
இரண்டு பிள்ளைகளும் : உதில தான், "கல்லடியான்" படமாளிகையில தான்... "திண்டு வளர்ந்தான்" படந்தான்
தகப்பன் : படத்துக்குக் காசு எங்கால...
இரண்டு பிள்ளைகளும் : உங்கட கால்சட்டைக்குள்ளே கையைவிட்டு எடுத்தோம்...
தாய் : அப்பாடை காசைக் கொடுங்கோ! வாற கிழமை படம் பார்க்கலாம்...
தகப்பன் : சீ! சீ! இப்பவே போவோம்! காசைத் தாங்கோ...
இரண்டு பிள்ளைகளும் : இந்தாருங்கோ... வாங்கோ படத்துக்குப் போவோம்!
தாய் : பிள்ளைகளுக்கு இணங்கிப் போறது நல்லதுக்கில்லை...
தகப்பன் : எங்கட விருப்பத்தைத் திணித்தால், பிள்ளைகள் தங்கட கைவரிசையைக் காட்டத்தான் செய்வினம். பிள்ளைகளோட அணைஞ்சு போறது நல்லது தானே...
(பிள்ளைகள் விருப்பத்தை அறியணும் அவர்களுக்கு ஏற்றாற் போல இசையணும் என்றவாறு எல்லோரையும் படத்துக்குத் தந்தை கூட்டிச் செல்கிறார்.)

ஆளைத் தெரியுமா?

காதலன் : பா(கவிதை)ப் போட்டியென்றதும் திருவிளையாடலில் வரும் தருமி நினைவுக்கு வருகிறதே!

காதலி : எழுதிய பா(கவிதை)வுக்கு விளக்கமளிக்க ஆள் தேடிய தருமி தானே!

(இக்கருத்து எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. தங்கள் உள்ளம் புண்படும் ஆயின் என்னைத் தண்டிக்கவும்)