Translate Tamil to any languages.

ஞாயிறு, 21 மே, 2017

ஊடகங்களில் மருந்துப் பெயர்களை வெளியிடலாமா?

அச்சு ஊடகங்களை விட, மின் ஊடகங்களைப் பலர் பாவிப்பது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி தான் கரணியம் (காரணம்) ஆகிறது. எப்படி இருப்பினும் அச்சு ஊடகப் படைப்புகளிலோ மின் ஊடகப் படைப்புகளிலோ மருந்துப் பெயர்களைக் குறிப்பிடுவதால் நன்மை, தீமை இருக்கலாம். ஆயினும், அதிகம் தீமை இருப்பதாகப் பேசப்படுகிறது. 

இது பற்றிக் கேட்ட போது "தன் (சுய) மருத்துவத்தைத் தூண்டாத வகையில் எச்சரிக்கையுடன் மருந்துப் பெயர்களைப் பாவிக்கலாம்" என்று மருத்துவர் ஒருவர் எனக்கு மதியுரை (ஆலோசனை) தந்துள்ளார். இப்பதிவிலும் எடுத்துக்காட்டாக எச்சரிக்கையுடன் மருந்துப் பெயர்களைப் பாவித்த பதிவுகளைப் பகிர்ந்துமுள்ளேன்.


எடுத்துக்காட்டு - 01
மேற்படி இணைப்பில் "மருத்துவர் கொடுத்த மருந்து #Citralka என்ற 60 ரூபாய் ஸிரப்..., அது Urinary infection க்கு தலைசிறந்த மருந்து." என்றும் குறித்த மருத்துவரைத் தொடர்பு கொள்வதற்கான முகவரியையும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 'சிறுநீரகக் கட்டி' நோய்க்குக் குறித்த மருத்துவரை நாடினால் சுகப்படுத்தலாம் எனக் குறித்த பதிவர் வெளிப்படுத்துகிறார்.

எடுத்துக்காட்டு - 02
மேற்படி இணைப்பில் டாக்டர் மு.அருணாச்சலம் அவர்களின் பதிவாக குங்குமம் "டாக்டர்" பகுதியில் 'கர்ப்பத்தடை மருந்துகள்' பற்றி அலசப்பட்டுள்ளது. "மாதவிடாய் தள்ளிப்போகத் தரும் மருந்துகளை அடிக்கடி எடுப்பதனால், அதிக ரத்தப்போக்குக் காரணமாக கர்ப்பப்பையை எடுக்க வேண்டி வரலாம். வேண்டாம்!" என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனை எச்சரிக்கையுடனான மருத்துவ மதியுரை எனலாம்.

எடுத்துக்காட்டு - 03
மேற்படி இணைப்பில் யாழ்பாவாணன் அவர்கள் மருத்துவருக்குப் பொய்யுரைத்தல், மாதவிலக்கு வருவதைத் தள்ளிப்போடும் மருந்து, ஆண்-பெண் வயாக்ரா, பெண்களைக் கற்பளிப்புச் செய்த பின் தப்பித்துக் கொள்ள உதவும் மருந்து ஆகியவற்றைக் கூறி "மருத்துவரை நாடாமல் இதனைப் பாவிப்பதால் சாவைச் சந்திக்கின்றனர்." என எச்சரிக்கிறார். அதாவது, மருந்து என்றால் மருத்துவரை நாடி மருத்துவரின் மதியுரைப்படியே பாவிக்கலாம் என்கிறார். மேலும், "மருந்துக் கடைகளில் மருந்தாளுநர் (Pharmacist) மருத்துவர் விரிப்புத் தாள் (Doctor's Description) இன்றி மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது" என்கிறார்.

எடுத்துக்காட்டு - 04
மேற்படி இணைப்பில் "தலைவலி, உடல்வலிக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் கவனிக்க!" என மருத்துவரை நாடாமல் மருந்துக் கடைகளில் மருந்து வேண்டி உண்ணும் சூழலைச் சுட்டிக்காட்டி, கேட்போர் கேட்டதும் மருந்துகளை விற்போரையும் சாடி, "பொருத்தமான, நல்ல மருத்துவரிடம் சந்தேகங்களைக் கேட்பதும், சிகிச்சை பெறுவதும்தான் ஆரோக்கியம் காக்க உதவும்." என வழிகாட்டப்படுகிறது. அதாவது, "நோய்கள் நெருங்கியதும் நல்ல மருத்துவரை நாடிப் போவதே சரி." என்ற செய்தியைக் குறித்த பதிவர் வெளிப்படுத்துகிறார்.

எடுத்துக்காட்டு - 05
மேற்படி இணைப்பில் "விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!" என்ற விகடன் பதிவைப் படியுங்கள். "நோய்கள் தீர்வதற்காகத்தான் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால், மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு, தனியாக சிகிச்சை எடுக்க வேண்டிய சூழலில்தான் இன்று வாழ்கிறோம். இதில் சுயமருத்துவம், அதிகமான ஆன்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி எடுத்துக்கொள்வது, மாதவிடாய் காலம், கர்ப்பம் தவிர்க்க என பெண்கள் சார்ந்திருக்கும் மாத்திரைகள், குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள்... என இந்த மருந்து வகைகளால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம்... தாராளம்!" என எச்சரிக்கை செய்கின்றனர். இப்பதிவு ஓர் சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம் என்பேன்.

மேற்காணும் எடுத்துக்காட்டுகளை வைத்துக்கொண்டு அச்சு ஊடகப் படைப்புகளிலோ மின் ஊடகப் படைப்புகளிலோ மருந்துப் பெயர்களைக் கையாளலாமா? எடுத்துக்காட்டு - 04 உம் எடுத்துக்காட்டு - 05 உம் இதற்கான நல்ல பதிலைத் தந்திருக்கும். அதில் "காய்ச்சல், பீய்ச்சல்" என்றாலே கூகிள் தேடுபொறியில் மருந்துகளைத் தேடிப் பாவிக்கிறார்கள் எனின் "நோயும் அந்நோய்க்கான மருந்தும்" மருத்துவர்கள் அல்லாத நாம் பகிர்ந்தால் அப்படியே குடித்துச் சாகவும் பலர் இருக்கிறார்களே! ஆயினும் மருத்துவர்கள் வெளியிடும் பதிவுகளில் மருந்துப் பெயர்களைத் தந்திருந்தாலும் "மருத்துவரின் உடல் சோதனையின் பின் மருத்துவர் வழிகாட்டலின் படி பாவிக்கலாம்." என்று எழுதியிருப்பார்களே!

எடுத்துக்காட்டுக்கு வயிற்றோட்டம் வந்திட்டுது என்றால் கோப்பி அல்லது 5ml தேன் குடிக்கிறோம். 5ml தேன் குடித்ததும் சிறிது நேரத்திற்குத் தண்ணீர் குடிக்கக்கூடாது. அல்லது 5ml தேன் உடன் தண்ணீரைக் கலந்து குடிக்கக்கூடாது. அதாவது 5ml தேன் உடன் தண்ணீரைக் கலந்து குடித்தால் வயிற்றோட்டம் அதிகரிக்கும். வயிற்றோட்டத்தை அதிகரிக்கவோ வயிற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தவோ 5ml தேன் பாவிக்கின்ற முறையில் தான் இருக்கு. அதேவேளை குழந்தைக்கா, இளையோருக்கா, முதியோருக்கா எவருக்கு '5ml தேன்' வழங்கலாம் என்பதில் கூடச் சிக்கல் இருக்கே!

அதேபோலத் தான் காய்ச்சல் என்றால் 'பனடோல்' அல்லது 'பரசிற்றமோல்' எனப் பல மருந்துகள் இருக்கலாம். "இம்மருந்துகளை எவருக்கு (குழந்தைக்கா, இளையோருக்கா, முதியோருக்கா) எவ்வளவு வழங்கலாம்; எத்தனை தடவை வழங்கலாம்; எத்தனை பக்க விளைவுகள் இருக்கு." என்பதை அறியாமல் பதிவுகளில் பகிருவது பாதிப்பையே தரும். ஆகையால் மருத்துவராயினும் சரி படைப்பாளியாயினும் சரி பதிவர்களாயினும் சரி "மருத்துவரின் உடல் சோதனையின் பின் மருத்துவர் வழிகாட்டலின் படி மருந்துகளைப் பாவிக்கலாம்" என்று மருந்துப் பெயர்களைப் பகிரலாம்.

நோய் சுட்டி, அதற்குத் தீர்வாக மருந்துப் பெயர்களை முன்வைத்தால் வாசகர் தன் (சுய) மருத்துவம் செய்யத் தூண்டும் என்பதால் மருந்துப் பெயர்களைப் பகிருவதை ஏற்கமுடியாது. நோயாளியின் உடல்நிலை மற்றும் நோயின் அறிகுறியைத் தீர்மானிப்பவர் மருத்துவரே! மருத்துவரின் அறிவுரைப்படியே மருந்துகளைக் கையாள வேண்டும்.

இந்த இந்த நோய்களுக்கு இந்த இந்த மருந்துகளைப் (மருந்துப் பெயர்களைச் சுட்டி) பாவிக்கவேண்டாமென எச்சரிக்கலாம். இது பற்றி மருத்துவரின் அறிவுரையை நாடவும் எனக் குறிப்பிடலாம். எச்சரித்த பின்னும் மருந்துகளை வேண்டிப் பாவிப்போர் தான் குற்றவாளி எனலாம்.

முடிவாக "தன் (சுய) மருத்துவம் செய்யத் தூண்டாமலும் மருத்துவரின் மதியுரைப்படியே மருந்துகளைக் கையாள வேண்டுமென எச்சரித்தும் குறித்த மருந்துகளைப் பாவிப்பதனால் ஏற்படும் கேடுகளை வெளிப்படுத்தியும் அச்சு ஊடகப் படைப்புகளிலோ மின் ஊடகப் படைப்புகளிலோ மருந்துப் பெயர்களைக் கையாளலாம்." என்பதே என் கருத்து.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!