Translate Tamil to any languages.

புதன், 27 நவம்பர், 2013

ஊருக்கு மதியுரை உனக்கில்லையடி


ஓர் ஊரில சிறந்த சைவ சமயப் பேச்சாளர் இருந்தார். "அவருடைய
பேச்சை நேரில பார்த்துப் பேசும் போது கேட்க வேண்டும்" என்பது
அவரது மனைவிக்கு நெடுநாள் விருப்பம். அவளது வீட்டில் இருந்து
சற்றுத் தூரத்தில் பிள்ளையார் கோவில் இருக்கிறது. அங்கு தான்,
இன்று தனது கணவன் பேசப் போகிறாரென அறிந்த அவள், களவாகப் போய் தனது விருப்பத்தை நிறைவேற்ற முனைந்தாள்.

கொடி மரத்துக்கான வழிபாடு(பூசை) முடியத்தான், பிள்ளையார் கோவிலில சமயப் பேச்சுத் தொடங்கும். ஒலிபெருக்கியில் சொல்லப்படுவதை கேட்டுக் கொண்டே சோறு சமைத்து முடித்தாள். வழிபாடு முடியப் போவதை உணர்ந்து, கறிகளைப் பிறகு வந்து வைக்கலாமென முடிவு எடுத்துக் கோயிலுக்குப் புறப்பட்டாள். சிறிது நேரத்தில் பேச்சாளரின் சமயப் பேச்சுத் தொடங்கியது.

"ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை" யில தொடங்கி "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" என முடித்து
கோவிலுக்கு வருவோர் நோன்பு(விரதம்) இருந்து பிள்ளையாரை
வழிபட்டால் எல்லாவற்றிலும் வெற்றி கிட்டுமென்றார். முடியாதோர்
சைவ உணவை மட்டும் உண்ணுங்கள். முட்டை, மீன், இறைச்சி
உண்பவர்கள் கோவிலுக்குள் நுழைய வேண்டாம். பச்சை இலை,
காய் கறி சமைத்து உண்பதோடு, இறைவழிபாட்டையும் மேற்கொண்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்றார். சைவமாக இருந்து
கொண்டு பிள்ளையாரை வழிபாட்டால் நன்மைகள் உண்டெனப்
பேச்சைத் தொடர்ந்தார்.

பேச்சாளரின் மனைவி போதுமென வீடு திரும்பி மைசூர் பருப்பு,
உருளைக் கிழங்கு, கத்தரி, வெண்டி என நாலு கறிகளும் வாழைக்காய், பப்படம் பொரியலும் வைத்து முடியப் பேச்சாளரும்
வீடு வந்து சேர்ந்தார். சரி, சரி சாப்பாட்டைப் போடுமெனக் கணவன்
குந்தவும் பெரிய தலை வாழையிலையைப் போட்டு சோறு,
கறிகளை வைத்து முடித்தாள். பருப்புக்கு மேலே இதயம் நல்லெண்ணை விடும் போது தான் "ஏனடி கோழிக் கறி வைக்கேல்லை" என்றார் பேச்சாளர்.

உங்கட பேச்சைப் பார்க்கணும் கேட்கணும் என்று இன்றைக்குப்
பிள்ளையார் கோவிலில வந்து ஒளிந்திருந்து பார்த்துக் கேட்டேன்.
அங்கே தானே "நோன்பிருங்கள், இல்லாட்டிச் சைவமாயிருங்கள்
அப்ப தான் பிள்ளையார் அருள் தருவார்" என்று சொன்னியள்.
அதனால வந்த உடனேயே "பிடித்து வைத்திருந்த கோழியைத்
திறந்து விட்டிட்டு" பதினாறு நாள் பிள்ளையார் கோவில் திருவிழா
முடியக் காய்ச்சலாமென, சைவக் கறி, சோறு வைத்தேன். இதில்
"என்ன பிழையிருக்கு?" என்றாள் பேச்சாளரின் மனைவி.

"ஊருக்கு மதியுரை(உபதேசம், ஆலோசனை) உனக்கில்லையடி! வீட்டில சொன்னதைச் செய்ய வேண்டியது தானேடி" என்று முழங்கினார் பேச்சாளர். "உங்களைப் போல பேச்சாளர்கள் இப்படி நடந்தால், உங்கட பேச்சைக் கேட்டவர்கள் என்ன செய்வார்கள்" என்றும் "உன்னைத் திருத்திக் கொள், மக்களாயம்(சமூகம்) தானாகவே திருந்தும்" என்று சுவாமி விவேகானந்தர் சொன்னதையும் கூறி "வாய்ப் பேச்சை நிறுத்திப் போட்டுச் சாப்பிடடா, இல்லாட்டி வேற பெண்டாட்டியைப் பாரடா" என்று பேச்சாளரின் மனைவியும் உறைப்பாகத் திட்டித் தீர்க்கவும் அங்கு அமைதி நிலவியது.
(எல்லாம் புனைவு - யாவும் கற்பனை)

2 கருத்துகள் :

  1. உபதேசம் என்பதே ஊருக்குத்தானே
    தனக்கில்லையே
    இப்படித்தானே பழகி இருக்கிறோம்
    சுவாரஸ்யமான கதை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!