தெருவின் இருமருங்கிலும் விடுப்புப் பார்ப்போர் ஏராளம். சீனவெடி கொழுத்திக் கொண்டு சிலர் முதல் நிரையில் நகர்ந்தனர். இடையிடையே சிலர் "தலைக்கு மேலே வெடிக்கும்" வாணவெடிகளையும் கொழுத்திச் சென்றனர். "நேருக்கு நேராய் வரட்டும், நெஞ்சுத் துணிவிருந்தால்" என்ற பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்க "டங்கு டக்கு" எனத் தவிலடிக்க இரண்டாவதாக நகருவது கண்ணன் மேளதாளக் குழுவினர் என்றனர். "தா தெய், தாம் தகிட தோம்" என்ற தாளக்கட்டுக்கு அமைவாய் கண்ணகி நாட்டியப் பெண்கள் குழு நிலமதிர ஆட்டம் போட்டவாறு மூன்றாவதாய் நகர்ந்தனர்.
கடைசியாகக் கதாநாயகர்களுக்கு உயர்ந்த நிலையில் மதிப்பளிக்கப்பட்டு ஏற்பாட்டாளர்கள் அழைத்துச் சென்றனர். அதுவும் உழவு இயந்திரப் பெட்டியில் கட்டிலைப் போட்டு அதற்கு மேலே அவர்களை நிற்க வைத்திருந்தனர். அவர்களது கழுத்துக்கு ஐம்பது பவுண் தங்கப் பதக்கம் சங்கிலி தேடாக் கயிறு மொத்தத்தில போட்டு இருந்தனர். போதாக்குறைக்கு நீண்ட மலர் மாலையும் அணிவித்து இருந்தனர். ஊர்ப் பெரியவர் வந்து போக்குவரவுக்கு இடையூறு விளைவிக்காமல் ஊர்வலத்தை ஓர் ஓரமாக ஒதுக்கினார்.
ஓட்டுநரும் நடத்துநரும் "ஆட்டுக் கடா ஊர்வலம் பார்த்தது போதும் ஊர்தியில் வந்தேறுங்கோ" என அழைத்தனர். ஊர்தி நகர, நகர ஆட்டைப் பார்த்த நம்மாளுகள் ஓடி, ஓடி வந்து தொற்றி ஏறினர். ஊர்திக்குள்ள நம்மாளுகள் ஏறினால் மிச்சம் சொல்லவும் வேண்டுமா?
"தளபதி போலத் தாடி வைத்த, செவி மடிந்து தொங்க, மான் கொம்பு போல நீண்ட கொம்பு வைத்த, எவ்வளவு பெரிய, உயரமான ஆட்டுக் கடாவை இவ்வளவு மதிப்பளித்துக் கொண்டு செல்கிறாங்களே" என்று ஆளுக்காள் தங்கள் ஐயங்களைக் கேட்டுத் தீர்க்கத் தொடங்கினர்.
ஊர்க் கோடியிலுள்ள ஒரு கோவிலில, ஆண்டுக் கணக்கில இப்படி வளர்த்த ஆட்டுக் கடாக்களை, இவ்வாறு ஊர்வலமாகக் கொண்டு போய்ச் சேர்த்து, கோவில் வாசலில வைத்து ஆட்டைக் கிடத்திப் போட்டு, கத்திக்கு வேலை கொடுப்பாங்கள். இதற்காக மாதக் கணக்கில கத்தியைத் தீட்டீ வைத்திருப்பாங்கள். அதாவது ஒரே வெட்டில, தலை வேறு முண்டம் வேறாக வெட்டியதும் பாயும் குருதியை(இரத்தத்தை) கடவுளின்(சிலையின் முகத்துக்கு) பக்கமாகத் தெறிக்கக் கூடியதாக வடிவமைத்துச் செய்வாங்கள்.
தங்கள் உறவுகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக, குறித்த கடவுளுக்கு குருதிச் சாவு(இரத்தப் பலி) கொடுக்க வேண்டுமென்பது சிலரது நம்பிக்கை. இதன்படிக்கு, இவ்வாறு ஆடு, கோழி வெட்டும் நிகழ்வை 'வேள்வி' என்று அழைப்பாங்கள். வேள்விக்குக் கழுத்தைக் கொடுக்க இருக்கின்ற ஆட்டுக் கடாவுக்கும் சேவற் கோழிக்கும் இவ்வளவு மதிப்பா? என்றெல்லாம் அறியாத, தெரியாத பலர் ஐயங்களைக் கேட்டுக் கொண்டிருக்க, ஊர்தியும் நிறுத்தப்பட, நானும் இறங்கி விட்டேன்.
ஊர்தியில் பக்கத்து இருக்கையில் இருந்த அகவை(வயது) எண்பது மதிக்கூடிய ஒருவர் "கோவிலில வெட்டினால் ஆட்டுக் குருதி(இரத்தம்) வறுத்துத் தின்னேலாது. ஆனால், வீட்டுப் பக்கமாக வெட்டினால் ஆட்டுக் குருதி(இரத்தம்) வறுத்துத் தின்னலாம்" என்று துயரப்பட்டது நினைவுக்கு வந்தது. இப்பேற்பட்டவர்களுக்கு அரசியல்வாதிகளும் மதவாதிகளும் தான் சரி.
அறிவியலில் முன்னேற்றமடைந்த இருபத்தியோராம் நூற்றாண்டு இளைய தலைமுறையினர் தங்கள் புத்தியைத் தீட்டி வேள்விகளை நிறுத்தாவிடில் கடவுளுக்குக் குருதிப் படையலென ஆடு, கோழி வெட்டுறது தொடருமென எண்ணியவாறு எனது செயலகத்திற்கு நுழைந்து என் பணியைத் தொடரப் பிந்திப் போச்சு.
(எல்லாம் புனைவு/ யாவும் கற்பனை)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!