Translate Tamil to any languages.

வெள்ளி, 8 நவம்பர், 2013

நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?

உவர் யாழ்பாவாணன் "நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?" என்று கேட்க வந்திட்டார் என்று... நீங்கள் துள்ளுவது எனக்குத் தெரியும். பெரும்பாலானோருக்குப் பா (கவிதை) என்றால் முழு நெல்லிப் புளி போல... உண்மையிலே, எனது வாழ்க்கைத் துணைகூட ரமணிச்சந்திரனின் பொத்தகமென்றால் சமைக்கவும் மாட்டாள்; தூங்கவும் மாட்டாள்; கதையிலே மூழ்கி விடுவாள். வாசகரிடையே பாவைப் (கவிதையைப்) பிடிக்காதவர்களும் (அதாவது, கதை விரும்பிகளும்) இருக்கத்தான் செய்கின்றனர்.

இன்றைய இளசுகளுக்கு மூ.மேத்தாவின் புதுப்பா (புதுக்கவிதை) நூல்கள் ஏற்படுத்திய மாற்றங்களால் ஈர்க்கப்பட்டு புதுப்பாவையே (புதுக்கவிதையையே) விரும்புகின்றனர். இத்தனைக்கும் மூ.மேத்தா ஒரு தமிழ் பேராசிரியர். இலக்கணப் பா (மரபுக்கவிதை) எழுதத் தெரிந்த மூ.மேத்தா இளசுகளின் உள்ளத்தைக் கொள்ளையிட புதுப்பா (புதுக்கவிதை) எழுதினாரோ எனக்குத் தெரியாது.

புதுப்பா (புதுக்கவிதை) எளிதாகப் புரிந்து கொள்ளலாம். சட்டுப் புட்டென்று படிக்கச் (வாசிக்கச்) சுகமளிக்கும். இலக்கண வேலிகள் இதற்கில்லை. ஆயினும் உணர்வு வீச்சு, மூச்சான அடி எனச் சில இலக்கண எல்லைகள் இருக்கும். புதுப்பா (புதுக்கவிதை) இலகுவானது என்றாற் போல, உவன் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் கிறுக்குவது போல சிலர் கிறுக்கலாம். பாடலாசிரியர் வைரமுத்து போன்று இறுக்கமான புதுப்பா (புதுக்கவிதை) புனைவோர் பலருண்டு. வாசகரிடையே மூ.மேத்தா, வைரமுத்து போன்று எழுதுவோரின் தரமான புதுப்பாவை (புதுக்கவிதையை) விரும்புவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

கோட்பாட்டுப் (தத்துவப்) பாட்டென்றால் பாவரசர் கண்ணதாசன் நினைவுக்கு வருவார். அவருடையை பாட்டு இலக்கணப் பா (மரபுக்கவிதை) சார்ந்தது. அவர் இலக்கணப் பா (மரபுக்கவிதை) எழுதினால் தேவாரம், திருவாசகம், திருப்புராணம், திருமந்திரம், திருப்புகள் மட்டுமல்ல ஔவை, வள்ளுவர், கம்பர் போன்றோர் பாடிய பாக்களில் இருந்து பொறுக்கிய முத்துக்களையும் சேர்த்துப் புனைந்த பாவலர். இலக்கணப் பா (மரபுக்கவிதை) என்றால்; இலக்கண வேலிக்குள்ளேயே நின்று எழுதினால் சுவையிருக்காது என்பதனை உணர்ந்தே பாவரசர் கண்ணதாசன் இப்படி எழுதினாரோ எனக்குத் தெரியாது.

இலக்கணப் பா (மரபுக்கவிதை) என்பது பலாப்பழம் போல... பலாப்பழத் தோலை அகற்றி; நாரை அகற்றிச் சுளையெடுத்துச் சுவைப்பது போல; இலக்கணப் போர்வையிலிருந்து இலக்கணப் பாவின் (மரபுக்கவிதையின்) பொருளறிந்தால் சுவையிருக்கும். இலக்கணப் பா (மரபுக்கவிதை) வைரம் போல... வைரம் பட்டை தீட்டப் பளிச்சிடுவது போல... இலக்கணப் பாவில் (மரபுக்கவிதையில்) உள்ள இலக்கணப் போர்வையை உரிக்க உரிக்க சுவையிருக்குமாம். இந்த நுட்பத்தை அறிந்தவர்கள் இலக்கணப் பா (மரபுக்கவிதை) மீது தான் நாட்டம் கொள்கின்றனர்.

இலக்கிய விரும்பிகள் (வாசகர்கள்), இலக்கியப் படைப்பாளிகள் இலக்கியத்துறையில் பல பிரிவுகளில் நாட்டம் கொண்டாலும் சிறப்பாக ஒன்றையே விரும்புவர். நீங்கள் புதுப்பாவையா (புதுக்கவிதையையா) அல்லது இலக்கணப் பாவையா (மரபுக் கவிதையையா) அல்லது பாக்களில் (கவிதைகளில்) விருப்பமில்லையா என்பதனை கீழ்வரும் கருத்துக்கணிப்பூடாகத் தெரிவியுங்கள் பார்ப்போம். இக்கருத்துக் கணிப்புப் பாபுனைய விரும்புவோருக்கு ஊக்கமளிக்கும் என நம்புகின்றேன்.

நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?

வாக்குப் போட்டாச்சா? உங்கள் விருப்புக்கான விளக்கத்தையும் சொல்லுங்க... அப்ப தான், உங்கட பேச்சை நம்பி; நம்மாளுகள் எழுதுகோல் ஏந்தி உலகெங்கும் தமிழ் பரப்ப முன்வருவாங்க!

4 கருத்துகள் :

  1. எளிமையான சொல்லாடல் இருப்பின் மரபுக்கவிதையைப் பலரும் விரும்பலாம். இலக்கணம் இறுக்கமாக இருப்பின் யாழ்பாவாணன் போன்ற சின்னாக்களின்ர புதுக்கவிதையிலும் தரமிருக்கும். தமிழ் வாழத் தமிழிலிலக்கணம் பேணவேண்டும் என்பதற்காக, நான் மரபுக்கவிதைக்கே வாக்குப் போட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர்களே! என்னைப் போன்று வாக்களித்த பின்னர், உங்கள் மாணவர்களுக்குக் கூறுவது போன்று நீங்களும் உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்.

      நீக்கு
  2. முதலில் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் - “யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்“ என்பதுதான் இலக்கணப்படியும், இலக்கியப்படியும் (அழகியல்) சரியாக வருகிறது. நீஙகள் “பாபுனைய“ என்று ஒற்றின்றிப் போட்டிருப்பதன் காரணம் என்ன? அதற்குரிய இலக்கணம் உண்டாயின் தெரிவிக்க வேண்டுகிறேன். ( பாபுனைய என்று -ப் -ஒற்று மிகாமல் இருக்க)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கென்று புதிய இலக்கணம்
      நான் வகுத்துக்கொள்ள
      நான் ஒன்றும் பெரியன் அல்ல...
      தங்கள் கருத்துப் படி
      'பாபுனைய' என்பதில்
      'பா + ப் + புனைய = பாப்புனைய' என
      'ப்' ஒற்று மிகுதல் வேண்டும்!
      தாங்கள் கூறிய படி
      "“யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்“
      என்பது தான்
      இலக்கணப்படியும், இலக்கியப்படியும்
      (அழகியல்) சரியாக வருகிறது." என்பதை
      ஏற்றுக்கொள்கிறேன் ஐயா!
      சிறிய மாற்றம் பெரிய கேள்விக்கு
      இடமளிக்கும் என்பதை ஏற்று
      'பாபுனைய' என எழுதியதன் விளைவு
      இலக்கணத் தெளிவை ஏற்படுத்துமென நம்பினேன்
      நல்லறிவை ஊட்டிய குருவே
      நன்மை கருதி மாற்றம் செய்வேன்
      வாசகர் நற்றமிழில் நற்பாப் புனையவே!
      வேலைப்பளு காரணமாக நிறுத்திவைத்த
      'யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்' என்ற தொடரை
      இவ்விலக்ண வழு நீக்கப்பட்டு
      மீள விரைவில் பதிவிட உள்ளேன் ஐயா!
      தங்கள் மதியுரை எனக்கு மட்டுமல்லை
      என் போன்ற சிறியோருக்கும்
      புதியவர் எல்லோருக்கும்
      சிறந்த பாடமாக அமையட்டும் குருவே!

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!