Translate Tamil to any languages.

ஞாயிறு, 5 நவம்பர், 2017

திரையிசைப் பாடல் எழுத முயலுங்கள்


நம்மாளுகள் திரைப் (சினிமாப்) பாடல் எழுதுவதைத் தெரிந்துகொள்ள விரும்பலாமென ஏற்கனவே நான் எழுதிய பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

பாடல் எழுத என்ன தேவை?
நல்ல கவிதை தேவை!
நல்ல கவிதைக்கு என்ன தேவை?
இனிமையான இசை தேவை!
அதெப்படி?

"உன்முகம் எனக்குத் தெரிந்ததால்
எனக்குள் காதல் வந்ததே!" என

யாழ்பாவாணனும் கிறுக்கிப்போட்டு
நல்ல கவிதை என்பான் - ஆனால்
இதில் உணர்வு இருக்கு - நல்ல
இசையைக் காணவில்லையே என்பீர்!

எவரோ தாக்குரை செய்திடவே
யாழ்பாவாணனும் தன்னை நொந்து
சற்று இசையை வரவழைக்க
முயன்று பார்த்திருக்கிறார் போலும்!

"உன்அகம் அறியாமலே உன்முகம் பார்த்தேன்.
என்அகம் அறிந்தே உன்மீது காதலானேன்." என
எழுதி வாசித்துப் பார்த்தாலும் கூட...

"உன்அகம் அறியாமலே
உன்முகம் பார்த்தேன்.
என்அகம் அறிந்தே
உன்மீது காதலானேன்." என
எழுதி வாசித்துப் பார்த்தாலும் கூட...

அதே உணர்வு இருக்க, அடுத்து
ஏதோ இசை முட்டுவதைப் பார்க்கலாமே!
எதுகை, மோனை எட்டிப் பார்க்க
எழுத முயன்றதால் இவ்விசை முட்டியதோ!

மெட்டு என்றால் இசைக் கூட்டு, அதையும் சொல்லி; கதைக்கான சூழல் பற்றியும் சொல்லி பாட்டெழுது என்பாங்க... அதற்குப் பழைய பாடல் மெட்டுகளை வைத்துப் புதிய பாடல்களை எழுதிப் பழகலாமே!
எடுத்துக் காட்டிற்காக

"இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை" என்ற

பாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.

மெல்லிசை காவிவரும்
குளிர்காற்றுக்கு நிறமுமில்லை
இன்னிசை இல்லையென்றால்
வரும் பாட்டொலி சுவைப்பதில்லை

இவ்வாறு இன்னொரு பாடலைப் பார்ப்போம்.

"வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே" என்ற

பாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.

கிளியோடு விளையாடி
கிளியோடு உறவாடி
கிளியோடு பேச்சுக்காட்டி
பாட்டுப் போட்டோமே

இவ்வாறு இன்னொரு பாடலைப் பார்ப்போம்.

"கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ... ஓ... ராரிரோ...
ராரிரரோ... ஓ... ராரிரோ..." என்ற

பாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.

பெண்ணே உனைத்தானே
கண்ணில் அழகென
கண்டேன் உனை நானே
பெண்ணே உனைத்தானே
கண்ணில் அழகென
கண்டேன் உனை நானே
முந்தி எவர் உனைத் தான் பார்த்தான்
பிந்தி இவர் உனை நான் பார்த்தேன்
ராரிரரோ... ஓ... ராரிரோ...
ராரிரரோ... ஓ... ராரிரோ...

இவ்வாறு பழைய பாடல்களின் மெட்டுக்கு/ இசைக் கூட்டுக்கு பாடல் புனையப் பழகுவதன் மூலம் புதிதாகப் பாடல் புனையப் பயிற்சி கிடைக்குமென நம்புகின்றேன். ஆயினும், இதனை வழக்கப்படுத்தினால் நல்லதல்ல. ஏனெனில் உங்கள் பாடல், பழைய பாடல் மெட்டில் அமைந்திருக்குமெனத் தங்களைக் குறைவாக மதிப்பிட முயல்வார்கள். எனவே, இதனைப் பயிற்சியாகப் பேணிப் புதுப்புது மெட்டிற்கும் பாடல் புனைய முயிற்சி செய்யுங்கள்.

நானறிந்தவரை நல்ல இசைப் பாடல்களோ திரைப் பாடல்களோ அடியொன்றின் ஈற்றுச் சீரின் இசையை ஒட்டியே கேட்போர் உள்ளங்களில் குடியிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக "மே" என்ற இசையோடு கேட்போர் உள்ளங்களில் குடியிருக்கும் பாடலொன்றைக் கேட்டுப் படித்துப் பாருங்களேன்.


படம்: அவந்தான் மனிதன்
இசை: Ms விஸ்வநாதன்
பாடியவர்கள்: Tm சௌந்தர்ராஜன், p சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே
(அன்பு)

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே
(அன்பு)

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே
(அன்பு)

மானிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே
(அன்பு)

இந்தப் பழைய பாடல் மெட்டை வைத்துப் புதிய பாடல் ஒன்றை எழுதிப் பாருங்களேன்! எனது முன்னைய எடுத்துக்காட்டில் "அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்..." என்ற பாடல் வரிகளை கொடுத்திருக்கிறேன். நான் எழுதிய பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

"ததுங்கின ததுங்கின ததுங்கின ததுங்கின தா னானே
ததுங்கின ததுங்கின ததுங்கின ததுங்கின தா னானே"

என்ற மெட்டில் / இசைக் கூட்டில்

"கடலில எழும்புற அலைகள கேளடி ஓ மானே
மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே
கடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓ மானே
உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே"

என்றவாறு 'செம்பருத்தி' படத்தில் வருகிற பாடல் அமைந்திருக்குமோ? எப்படியோ இசையோடு கவிதை எழுதினாலும் திரையிசைப் பாடல் எழுதச் சில தகவல் தேவை. அவை எவை என்பதனை 'திரைப்படத்தில் மெட்டுக்கு பாடல் எழுதுவது எப்படி' என்ற தலைப்பில் கவிஞர் செந்தமிழ்தாசன் அவர்கள் விளக்குகிறார். நானும் உங்களுடன் அதனைப் பகிருகிறேன்.


இனி, திரையிசைப் பாடல் எழுதக் கற்றவற்றைத் தொகுத்துப் பார்க்க ஒரு பதிவு உண்டு. அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

செவ்வாய், 31 அக்டோபர், 2017

எழுத்தும் பயனும்

1
எழுத்து, உனக்கு சோறு போடுமா?
எழுத்து, உனக்கு வருவாய் தருமா?
எழுத்து, உனக்கு நற்பெயரைக் கொடுக்குமா?
எழுத்து, உனக்கு நல்வாழ்வைக் கொடுக்குமா?
என்றெல்லோ வீட்டார் கேட்டுத் தொல்லை!
கலைத்தீபம், கவிமுரசு, கவியருவி,
இலக்கியச் செம்மல் என்றெல்லாம்
பட்டம் தந்து பொன்னாடை போர்த்ததும்
என் எழுத்து, எனக்களித்த பரிசென்றுரைக்க
"தாளில் கிறுக்கிக் கொடுப்பதும்
சால்வையைத் தோளில் போடுவதும்
பார்வைக்கு அழகாய் இருக்கும் - அதில்
பெறுமதி இல்லைக் காணும்" என
பெண்டாட்டி என்மீது எரிந்துவிழுவாள்!
"உனக்குப் பிள்ளை, குட்டி கிட்டாததும்
எழுத்து, எழுத்தென மூழ்கிக் கிடந்ததாலே!" என
மாமிக்காரி ஒப்பாரி வைப்பதும் நிகழும்!
"இணையம், வலைப்பக்கம் எனத் தலைகாட்டி
தூக்கத்தை விற்று நோய்களை வேண்டுறியே!" என
மாமன்காரன் அறம் பாடுவதும் நிகழும்!
"என்ர அப்பன் பண்டிதருக்குப் படிச்சவர்
இவர் என்னதான் எழுதிக் கிழிச்சென்ன!" என
என்ர அப்பன் என்னைத் திட்டுவார்!
"என்ர அப்பன் உடையாருக்குப் படிச்சவர்
இவர் எழுதித்தான் என்ன பண்ணுவார்!" என
என்ர அம்மாவும் பொரிந்து தள்ளுவார்!
இப்படிக் கேள்விக்கணைகள் காதைக் குடைந்தாலும்
நானும் என் எண்ணங்களை எழுதுகின்றேன்!
என் எழுத்தை விரும்பிப் படிப்பவர்
உள்ளம் நிறைவைத் தரும் வண்ணம்
நானும் என் எண்ணங்களை எழுதுகின்றேன்!
எழுதுவதால் தான் நானும் நிறைவடைகின்றேன்
வாசகர் உள்ளம் நிறைவடைய - நாளும்
நானும் என் எண்ணங்களை எழுதுகின்றேன்!
நல்லதை எழுதுங்கள் நல்லதை வாசியுங்கள்
உள்ளம் நிறைவடைய உணர்ந்து செய்யுங்கள்
உள (மன) நோய்கள் கிட்ட நெருங்காது
உண்ணான நெடுநாள் வாழலாம் பாருங்கோ!

2. எழுதப் பழகிய வேளை

சொந்தமாக எழுத முடியாவிட்டாலும்
மாற்றாரின் பதிவுகளைப் போல
எழுத முயன்றல் கூட
சொந்தமாக எழுத வருமே!
நானும் அப்படித் தான்
மூ.மேத்தாவின் பாவரிகளைப் போல
எழுத முயன்ற பின்னே
ஈழத்துப் பத்திரிகைகளில் வெளியான
பாவரிகளைப் பார்த்தும் - அதே போல
எழுத முயன்ற பின்னே
பா/கவிதை நடை போல
சொந்தமாக எழுதப் பழகிக்கொண்டேன்!
எழுதப் பழகியதை வைத்தே
என் எண்ணங்களைப் பகிருகிறேன்!
ஆனால், நான் எழுதுவது
கவிதை அல்லது பா அல்லது பாடல்
எது போலவும் இல்லாவிடினும்
நான் கிறுக்குவது தமிழில் தானே!

3. நீங்களும் எழுதலாம்

எனது திறமைகளை வெளிக்கொணர உதவும்
உடைமைகளைப் பொறுக்கிச் சென்றவருக்கு
தெரியவில்லைப் போலும்
கைக்கெட்டியதைக் கையாளலாம் என்றே!
கரிதுண்டால் பா/கவிதை புனைந்து
பாரதியார் - தன்
உள்ளக்கிடக்கையை வெளியிட்டது போல
நானும் என் கைக்கெட்டியதை வைத்து
எனது திறமைகளை அரங்கேற்றுகிறேன் - நாளும்
எனது திறமைகள் வெளிவருகின்றனவே!
'முடியாது' என்பது
நம்மாளுங்க (மனித) அகரமுதலியில்
இருக்கக்கூடாது என்றாலும்
'முடியும்' என்பதற்கு
பயிற்சியும் முயற்சியும் இருந்தால் போதுமே!
அப்படியாயின் - நீங்களும்
எப்படியாவது உங்கள் திறமைகளை
அரங்கேற்ற முன்வாருங்கள் - உங்கள்
நல்லெண்ணங்களைப் பகிருங்கள்
எழுத்தும் பயனும் என்னவென்று உணருவீர்!

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

தமிழுக்குச் சாவு நெருங்கி வருகிறதா?

உலகத் தமிழ் வலைப்பதிவர்களே! வலைப்பக்க வாசகர்களே! "தமிழ் மொழி அழியும்" என்று பதிவுகள் போட்டுப் பேரெடுக்க முடியாவிட்டாலும் "தமிழுக்குச் சாவு நெருங்கி வருகிறதா?" எனச் சிறு குறிப்பினைப் பகிர முன்வருகின்றேன்.

முதலில் இந்த ஒளிஒலி (Video) பதிவைப் பாருங்கள்.

மேற்காணும் ஒளிஒலி (Video) பதிவினைக் கருதிற்கொண்டு, சற்றுச் சிந்திப்போமாக...

கடைசித் தமிழன் இருக்கும் வரை
தமிழ் வாழுமென்று எவரும் முழங்கலாம் தானே!
இலங்கை தமிழரின் தாயகமாம் - ஆங்கே
பௌத்தம் பின்பற்றிய தமிழரே சிங்களவராம்
இந்தியாவிலே 21 கோடி தமிழர் இருந்தனராம்
இப்ப பாரும் 6 கோடி தமிழர் இருக்கின்றனாம்
எப்படியோ தமிழர் பிறமொழிக்காரராக மாறவே
தமிழ் பேசும் உறவுகள் யாவும் சுருங்கினவாம்!
தமிழர் பிறமொழிக்காரராக மாறினால் பாரும்
தமிழ் பேசும் உறவுகள் உலகில் இருப்பரோ?
உலகில் தமிழ் பேசுவோர் குறைவதைக் காண
தமிழுக்குச் சாவு நெருங்கி வருகிறதா? என
எண்ணத் தோன்றிச்சு எழுதிவிட்டேன்!

நானும் இந்த எச்சரிக்கையை உணர்ந்து இரு மின்நூல்களை வெளியிட்டுள்ளேன். மேலும் பல வெளியிட உள்ளேன். மேலுள்ள தகவல் உண்மையா என்றறியக் கீழுள்ள இணைப்புகளைச் சொடுக்கி மின்நூல்களைப் படியுங்கள்.

இலகுவாகக் குளிர்மையாகப் பார்வையிட
வழமையாகப் பார்த்துப் பதிவிறக்க
உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.


"அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும்" https://senthilmsp.blogspot.com/2017/10/tamil-language.html என்ற பதிவைப் படித்ததும் இக்குறிப்பினைத் தங்களுடன் பகிர முடிந்தது.

வெள்ளி, 27 அக்டோபர், 2017

அம்மாவா அப்பாவா வாங்க வாதாடலாம்!

கடந்த தீபாவளியன்று (2017-10-18 ஆம் நாள்) காலை 9 மணிக்கும் மீண்டும் இரவு 8 மணிக்கும் பாலிமர் தொலைக்காட்சி  ஒளிபரப்பிய பட்டிமன்றத்தைப் பார்க்காதோர் பார்வைக்கு:

தலைப்பு: பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும்பங்காற்றுபவர் தாயா? தந்தையா?

நடுவர்: திருமிகு பழ.கருப்பையா அவர்கள்

தாயே அணி:-
புதுக்கோட்டை நா.முத்துநிலவன் (அணித்தலைவர்)
திருமிகு “ரேடியோ மிர்ச்சி“ மிருதுளா, சென்னை
திருமிகு மதுரை முத்து,
திருமிகு சாரோன், சென்னை.

தந்தையே அணி:-
மதுக்கூர் இராமலிங்கம் (அணித்தலைவர்),
திருமிகு பேரா.கல்யாணசுந்தரம், கோவை
திருமிகு தேவகோட்டை மகாராஜன்,
திருமிகு பர்வீன் சுல்தானா, சென்னை

மேற்காணும் தகவல் பெற்ற இணைப்பு-

முதலில் பட்டிமன்றம்; அடுத்து வாதாடலாம் வாங்க!
உலகத் தமிழர் வீடுகளில் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய பட்டிமன்றம் இதுவென்பேன்.


மேற்காணும் பட்டிமன்றத்தைப் பார்த்தாச்சா?
பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும்பங்காற்றுபவர்
அம்மாவா அப்பாவா எனக்கும் ஐயம் தான்...
ஆயினும்
பட்டிமன்ற நடுவர் கூற்றுப்படி உணர்வீர்
சான்றுகள் அதிகம் காட்டி நின்று
அம்மா பக்கம் ஈர்த்து விட்டனர்
பாவலர் முத்துநிலவன் குழுவினரே!
பட்டிமன்ற நடுவரின் உறைப்பான தீர்ப்பை
நானும் உங்களுடன் பகிர விரும்பினேன்
விளைவாக இப்பதிவு உங்கள் பார்வைக்கு!

அம்மாவும் தேவை அப்பாவும் தேவை
நானென்ற குழந்தை நாடறிய...
அம்மாவின் அன்பும்
அணைப்பும் அறிவூட்டலும்
அப்பாவின் அறிவூட்டலும்
நம்பிக்கையூட்டலும் வழிகாட்டலும்
என்றவாறு எண்ணிப்பார்த்த வேளை
இருவரது பணியும் எனக்குத் தேவை தான்...
நானென்ற மனிதனை உலகறிய...
உலகத் தமிழ் வலைப்பதிவர்களே!
உங்களை வளர்த்தெடுத்ததில் பெரும்பங்காற்றியவர்
அம்மாவா? அப்பாவா? - உங்கள்
வாழ்வில் நீங்கள் எண்ணிப்பார்த்ததை
அப்படியே பகிருங்கள் - அவை
எப்படியாயினும் பலருக்கு நிறைவைத் தருமே!


கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் பயன்பெறுக.

புதன், 25 அக்டோபர், 2017

தமிழில் பா/கவிதை புனைந்து காட்டுவோம்!

இலக்கியம் தோன்றிப் பின் தான்
இலக்கணம் தோன்றியது என்று தான்
எண்ணிப் பா/கவிதை புனையலாம் தான்
என்றும் எண்ணியதை எழுதலாம் தான்
எழுதவே வந்தமரும் சொல்கள் தான்
தமிழாக இசைத்து ஒலிக்கத் தான்
தமிழில் பா/கவிதை புனையலாம் தான்!

சீருக்குச்சீர் முதலெழுத்துப் பொருந்தத் தான்
மோனையென்று வந்தமையத் தான்
சீருக்குச்சீர் இரண்டாமெழுத்துப் பொருந்தத் தான்
எதுகையென்று வந்தமையத் தான்
"பாலைப் போல வெள்ளை" என்று தான்
உவமையென்று வந்தமையத் தான்
தமிழில் பா/கவிதை புனையலாம் தான்!

உரைநடை அமைப்பை ஒதுக்கித் தான்
சுவைமிகு சொல்கள் வந்தமரத் தான்
எதுகை, மோனை, உவமை வரத்தான்
வாசகர் மீளமீள வாசிக்கச் சுகந்தான்
சுருங்கச் சொல்லி உணர்த்தத் தான்
உணர்வுகளின் மூச்சாக அமையத் தான்
தமிழில் பா/கவிதை புனையலாம் தான்!

எழுதுகோல் ஏந்தினால் எவரும் தான்
எழுதினால் பா/கவிதை ஆகலாம் தான்
எழுதவே வந்தமரும் சொல்களில் தான்
வடமொழி, பிறமொழிச் சொல்களும் தான்
சாட்டுக்குத் "Thanks" என ஆங்கிலமும் தான்
நுழைந்தே தமிழைக் கொல்லத் தான்
பா/கவிதை புனைவது ஆகாது தான்!

தமிழில் உலாவுவதும் பிறமொழிகள் தான்
தமிழருக்கு அத்தனையும் தெரியாது தான்
தெரிந்த நற்றமிழ் சொல்களில் தான்
தமிழர் வாழ்விடச் செய்திகளைத் தான்
சூழவுள்ள மக்கள் வாழ்வைத் தான்
தம்மெழுத்து நடையினில் சொல்லித் தான்
தமிழில் பா/கவிதை புனையலாம் தான்!

இலங்கை, யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில் 21/10/2017 சனியன்று உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய '1000 கவிஞர்கள் கவிதைகள்' என்ற பெருநூல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இக்கவிதை இடம்பிடித்துள்ளது.



மேலே குறிப்பிட்ட '1000 கவிஞர்கள் கவிதைகள்' என்ற பெருநூல் பற்றிய எனது கண்ணோட்டத்தினை 24 நேரத்தில் மின்நூலாக்கி உள்ளேன். அதனைக் கீழே பார்வையிடலாம்.


பக்கம் பக்கமாக பிரட்டிப் பார்க்க

பதிவிறக்க