Translate Tamil to any languages.

ஞாயிறு, 5 நவம்பர், 2017

திரையிசைப் பாடல் எழுத முயலுங்கள்


நம்மாளுகள் திரைப் (சினிமாப்) பாடல் எழுதுவதைத் தெரிந்துகொள்ள விரும்பலாமென ஏற்கனவே நான் எழுதிய பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

பாடல் எழுத என்ன தேவை?
நல்ல கவிதை தேவை!
நல்ல கவிதைக்கு என்ன தேவை?
இனிமையான இசை தேவை!
அதெப்படி?

"உன்முகம் எனக்குத் தெரிந்ததால்
எனக்குள் காதல் வந்ததே!" என

யாழ்பாவாணனும் கிறுக்கிப்போட்டு
நல்ல கவிதை என்பான் - ஆனால்
இதில் உணர்வு இருக்கு - நல்ல
இசையைக் காணவில்லையே என்பீர்!

எவரோ தாக்குரை செய்திடவே
யாழ்பாவாணனும் தன்னை நொந்து
சற்று இசையை வரவழைக்க
முயன்று பார்த்திருக்கிறார் போலும்!

"உன்அகம் அறியாமலே உன்முகம் பார்த்தேன்.
என்அகம் அறிந்தே உன்மீது காதலானேன்." என
எழுதி வாசித்துப் பார்த்தாலும் கூட...

"உன்அகம் அறியாமலே
உன்முகம் பார்த்தேன்.
என்அகம் அறிந்தே
உன்மீது காதலானேன்." என
எழுதி வாசித்துப் பார்த்தாலும் கூட...

அதே உணர்வு இருக்க, அடுத்து
ஏதோ இசை முட்டுவதைப் பார்க்கலாமே!
எதுகை, மோனை எட்டிப் பார்க்க
எழுத முயன்றதால் இவ்விசை முட்டியதோ!

மெட்டு என்றால் இசைக் கூட்டு, அதையும் சொல்லி; கதைக்கான சூழல் பற்றியும் சொல்லி பாட்டெழுது என்பாங்க... அதற்குப் பழைய பாடல் மெட்டுகளை வைத்துப் புதிய பாடல்களை எழுதிப் பழகலாமே!
எடுத்துக் காட்டிற்காக

"இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை" என்ற

பாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.

மெல்லிசை காவிவரும்
குளிர்காற்றுக்கு நிறமுமில்லை
இன்னிசை இல்லையென்றால்
வரும் பாட்டொலி சுவைப்பதில்லை

இவ்வாறு இன்னொரு பாடலைப் பார்ப்போம்.

"வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே" என்ற

பாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.

கிளியோடு விளையாடி
கிளியோடு உறவாடி
கிளியோடு பேச்சுக்காட்டி
பாட்டுப் போட்டோமே

இவ்வாறு இன்னொரு பாடலைப் பார்ப்போம்.

"கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ... ஓ... ராரிரோ...
ராரிரரோ... ஓ... ராரிரோ..." என்ற

பாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.

பெண்ணே உனைத்தானே
கண்ணில் அழகென
கண்டேன் உனை நானே
பெண்ணே உனைத்தானே
கண்ணில் அழகென
கண்டேன் உனை நானே
முந்தி எவர் உனைத் தான் பார்த்தான்
பிந்தி இவர் உனை நான் பார்த்தேன்
ராரிரரோ... ஓ... ராரிரோ...
ராரிரரோ... ஓ... ராரிரோ...

இவ்வாறு பழைய பாடல்களின் மெட்டுக்கு/ இசைக் கூட்டுக்கு பாடல் புனையப் பழகுவதன் மூலம் புதிதாகப் பாடல் புனையப் பயிற்சி கிடைக்குமென நம்புகின்றேன். ஆயினும், இதனை வழக்கப்படுத்தினால் நல்லதல்ல. ஏனெனில் உங்கள் பாடல், பழைய பாடல் மெட்டில் அமைந்திருக்குமெனத் தங்களைக் குறைவாக மதிப்பிட முயல்வார்கள். எனவே, இதனைப் பயிற்சியாகப் பேணிப் புதுப்புது மெட்டிற்கும் பாடல் புனைய முயிற்சி செய்யுங்கள்.

நானறிந்தவரை நல்ல இசைப் பாடல்களோ திரைப் பாடல்களோ அடியொன்றின் ஈற்றுச் சீரின் இசையை ஒட்டியே கேட்போர் உள்ளங்களில் குடியிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக "மே" என்ற இசையோடு கேட்போர் உள்ளங்களில் குடியிருக்கும் பாடலொன்றைக் கேட்டுப் படித்துப் பாருங்களேன்.


படம்: அவந்தான் மனிதன்
இசை: Ms விஸ்வநாதன்
பாடியவர்கள்: Tm சௌந்தர்ராஜன், p சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே
(அன்பு)

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே
(அன்பு)

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே
(அன்பு)

மானிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே
(அன்பு)

இந்தப் பழைய பாடல் மெட்டை வைத்துப் புதிய பாடல் ஒன்றை எழுதிப் பாருங்களேன்! எனது முன்னைய எடுத்துக்காட்டில் "அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்..." என்ற பாடல் வரிகளை கொடுத்திருக்கிறேன். நான் எழுதிய பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

"ததுங்கின ததுங்கின ததுங்கின ததுங்கின தா னானே
ததுங்கின ததுங்கின ததுங்கின ததுங்கின தா னானே"

என்ற மெட்டில் / இசைக் கூட்டில்

"கடலில எழும்புற அலைகள கேளடி ஓ மானே
மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே
கடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓ மானே
உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே"

என்றவாறு 'செம்பருத்தி' படத்தில் வருகிற பாடல் அமைந்திருக்குமோ? எப்படியோ இசையோடு கவிதை எழுதினாலும் திரையிசைப் பாடல் எழுதச் சில தகவல் தேவை. அவை எவை என்பதனை 'திரைப்படத்தில் மெட்டுக்கு பாடல் எழுதுவது எப்படி' என்ற தலைப்பில் கவிஞர் செந்தமிழ்தாசன் அவர்கள் விளக்குகிறார். நானும் உங்களுடன் அதனைப் பகிருகிறேன்.


இனி, திரையிசைப் பாடல் எழுதக் கற்றவற்றைத் தொகுத்துப் பார்க்க ஒரு பதிவு உண்டு. அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!