Translate Tamil to any languages.

ஞாயிறு, 12 நவம்பர், 2017

கள்ளக் காதலும் நகைச்சுவைக் காதலும்

இன்றைய (2017 இல் எழுதுகிறேன்) காலகட்டத்தில கள்ளக்காதல் அதிகம் என்பதால் தான் அறிஞர் ஒருவர் தனது வலைப் பக்கத்தில் (கூகிளில்) இப்படியொரு படத்தை இடுகையிட்டாரோ தெரியவில்லை.
மேலுள்ள படம் கூகிள் ஊடாக நகைச்சுவை எனத் தேடேக்க கிடைத்தது. அதனைச் சொடுக்க http://sakthistudycentre.blogspot.com/2013/08/free-hospital.html என்ற இணைப்பும் கிட்டியது. படத்தைப் பார்த்ததும் என்னுள் தோன்றியதை எழுதுகிறேன்.

கடற்கரையில காதலிக்க வந்த காதலி "கனநேரம் இங்க இருக்கேலாது" எனச் சொல்ல, "கொப்பரும் கொம்மாவும் 'வீட்டில ஆளைக் காணோம்' எனத் தேடுவினமோ?" எனக் காதலன் கேட்கிறான்.

"பள்ளிக்கூடத்தால பிள்ளைகள் வந்து என்னைத் தேடுவினம்" எனக் காதலி சொல்ல கடற்கரையில காதலிக்க வந்த காதலனோ "பிள்ளைகளின்ர தேப்பன்காரன் வந்தால் தன் தலை போயிடும்!" என எண்ணுகிறான்.

இந்த நேரம் பார்த்து எனது எண்ணத்தில் இப்படித் தோன்றிச்சு!

சும்மா காதலிக்கப் போகேக்க
கடற்கரையில காதல் சுகம் காணேக்க
நேரம் மட்டுப்படுத்தப்படேக்க தான்
கள்ளக்காதல் இதுவென்று தெரியவருமே!

அந்த எண்ணத்தை இப்படியும் எழுதிப் பார்த்தேன்.
1.
ஒருவன்: கள்ளக்காதல் தான் அதிகம் மகிழ்வைத் தருமே!

அடுத்தவன்: அப்படியா! அதெப்படி?

மற்றவன்: காதலிக்க வந்தவளின்ர கணவன் அல்லது அவளின்ர தகப்பனோ அண்ணன், தம்பியோ வந்து; அடி, உதை எல்லாம் பரிசாக வழங்கும் போது தெரியுமே!

2
ஒருவள்: மக்கள் முன் (Public) காதல் சுவையிருக்காதே!

அடுத்தவள்: "கண்ட கண்ட இடத்திலயும் கண்டறியாத இரண்டுகள்" என்று மக்களுக்கே வெறுத்துப் போச்சடி!

மற்றவள்: கணவன்மார் கண்டுட்டாங்கள் என்றால் எங்கட கதை போச்சடி!

அதே எண்ணத்தைத் தலைகீழாக இப்படி மாற்றி எழுதிப் பார்த்தேன்.
1
ஒருவன்: கள்ளக்காதல் என்று தெரிந்தும் தலை காட்டியது பிழையே!

அடுத்தவன்: எப்படியடா தெரியும், அவள் ஐந்து பிள்ளைகளுக்கு அம்மா என்று...

மற்றவன்: 'கண்டதே காதல் கொண்டதே கோலம்' என்றால் உப்படித் தாண்டா!

2
ஒருவள்: மக்களுக்கு (Public) முன்னால காதலிப்பதாகக் காட்டிப் பணக்காரியாகத் தலை காட்டினாய்! இப்ப என்னாச்சு?

அடுத்தவள்: மண், பொன், பணம் என அள்ளித் தந்தவன், ஐந்து பிள்ளைகளுக்கு அப்பனடி!

மற்றவள்: வருவாய் ஈட்டப் போய் வயிற்றில கருவை வேண்டியிருந்தால் உன் கதை முடிஞ்சிருக்குமடி!

அதே எண்ணத்தைத் தலைநிமிர்த்தி இப்படி மாற்றி எழுதிப் பார்த்தேன்.
1
ஒருவன்: முன்பின் அறியாமல் ஒருத்தியோட களவாகச் சந்திக்கலாமோ?

அடுத்தவன்: காதல் என்ற உணர்வு, தனியாகச் சந்திக்கத் தூண்டுமே! அவளே நாடியும் வந்தாள்...

மற்றவன்: வயிற்றில வளருற குழந்தைக்கு உன்னை அப்பனாக்க, இப்ப அவள் உன்னைத் தேடுறாளாமே!

2
ஒருவள்: மக்களுக்கு (Public) முன்னால அடுத்தவனை அடிக்கடி சந்தித்தால் தப்பாகத் தானே கதைப்பாங்க...

அடுத்தவள்: உதை அடிக்கடி நோட்டமிட்ட ஆள்கள் சொல்லியே, உன்ர கணவன் மணமுறிப்பு கேட்கிறாரோ?

மற்றவள்: கணவன் விலகினாலும் சந்தித்தவனைக் கட்டலாமென்றால் அவனுக்கும் நாலு மனைவியோ!

"வேடந்தாங்கல்" வலைப்பூவில கிடந்த படத்தைப் பார்த்து, நம்மாளுங்க "காதல்" என்று சொல்லிப் போடுகின்ற வேடங்களை எழுத வைத்த கடவுளை நேரில் சந்தித்தால் என்ன சொல்லியிருப்பார்?

போலிக் கண்களில் தெரிந்ததை நம்பி
அறிவுக் (ஞானக்) கண்ணால் பார்க்கத் தெரியாத
முட்டாள்களுக்குச் சொல்ல ஏதுமில்லை!

கடவுள் தான் இப்படிக் கையை விரிப்பார் என்றால், நம்ம சோதிடக்காரர் இருக்கிறாரே! அவரையும் நேர்காணச் சென்றேன்.

இயற்கையாய் இயல்பாய் இசைந்த - இரு
உள்ளங்களுக்குச் சோதிடம் தேவையில்லை - அது
வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கம் எதற்கும் சரியே!

சோதிடக்காரரின் பதில் என்னைச் சோதித்தது. அதாவது, இயற்கைக்கு முரணாக "காதல்" என்ற வெறியில் (போதையில்) தள்ளாடித் தள்ளாடி விழுகின்றவர்களைப் பற்றி எழுதியதாக எண்ணினேன். உடனே இப்படியும் எழுதத் தோன்றிச்சு!

நல்ல பொருளுக்கு விளம்பரம் வேண்டியதில்லை...
கள்ளச் சந்திப்போ பொதுச் (Public) சந்திப்போ
நல்ல காதலுக்கு ஒருபோதும் வேண்டியதில்லை...
எங்கிருந்தாலும் உள்ளங்கள் உரசினால் போதுமே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!