Translate Tamil to any languages.

ஞாயிறு, 21 மே, 2023

நேர்காணல் (கடுகுக் கதை)


 காலை விடிந்தது. பகலவன் வீட்டை குடைந்து ஒளி தந்தான். ராசம்மா தேநீர் போட்டு பிள்ளைகளுக்கு கொடுத்தாள். ராசையா தனது வேலைகளைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் 


மூத்தவன் உயிரன் தனது படிப்பில் கவனம் செலுத்தி தன் படிப்பைத் தொடருகிறான். மற்றவர்களை 'கொண்ணன் எழும்பிப் படிக்கிறான். நீங்களும் எழும்பிப் படியுங்கோ' என்று  ராசம்மா  எழுப்புகிறார். 


'ஏழரை மணியாப் போச்சு. அவரவர் வேலைக்கு போக ஆயத்தம் செய்யுங்கோ.' என ராசையா நினைவூட்டினார். 'சாப்பாடு தயார், குளிச்சா வந்து சாப்பிடுங்கோ' என ராசம்மாவும் அறிவிப்புச் செய்தாள். 


உயிரனும் தனது கடமைகளை முடித்துக் கொண்டு, தெருவுக்கு இறங்கினான். ஏதோ ஒரு நேர்காணல் என்று புறப்பட்டுக் கொண்டிருந்தான். வழியில கறுத்தப் பூனை குறுக்கால போனது. அவன் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் பயணிக்கிறான். வழியில 'இந்த மூஞ்சிக்கு, உனக்கும் ஒரு வேலையோடா' எனச் சிலர் நையாண்டி பண்ணினர். அதனையும் கடந்து பயணிக்கிறான். பொன்னி என்ற ஒருத்தி 'நல்ல சம்பளத்தோட வேலை கிடைக்காட்டி, இந்த மூஞ்சியைப் பார்க்காதே' என்று எச்சரிக்கிறார் இவற்றையெல்லாம் தலையில் போட்டபடி உயிரனும் நேர்காணலுக்குப் பயணிக்கிறான்.


'உறுதியான எண்ணத்துடன் எந்தப் பயணம் மேற்கொண்டாலும் எப்போதும் பின்னடைவுக்கு இடம் இருக்காது' என்று பலர் தங்கள் புத்தகங்கள் எழுதி இருந்ததை உயிரன் படித்திருந்தான். அதனால் அவன் தனது குறிக்கோளிலிருந்து விலகாமல் தனது பயணத்தைத் தொடருகிறான். 


குறித்த நேர்காணல் இடத்துக்கு உயிரன் சென்று, தனக்கான அழைப்பு வரும் வரை காத்திருக்கிறான். தனக்கான அழைப்பு வந்ததும் நேர்காணலில் தலையைக் காட்டுகிறான். நேர்காணல் செய்பவரோ படித்தது; படித்ததை வைத்துப் பயிற்சி பெற்றது; பிற இடங்களில் பணி செய்தது என்று பல கேள்விக் கணைகளைத் தொடுத்தார். கடைசியாக 'எனது நிறுவனத்தை ஏன் தெரிவு செய்தாய்' என்றும் கேள்வியை முன்வைக்கின்றார். 


நேர்காணல் செய்தவருக்கு உயிரனின் பதில்கள் திருப்தி அளித்தாலும் மாற்றாரை நேர்காணல் செய்வதற்காக 'வெளியில் போய் இரும்' என்று பணிக்கின்றார். நேர்காணலுக்கு வந்த அனைவரும் நேர்காணல் செய்து முடித்து உயிரனுடன் வெளியே காத்திருக்கின்றனர். 'யார் யாரைத் தெரிவு செய்தாச்சு' என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஒரு மணித்துளி, இரண்டு மணித்துளி என நேரம் கடக்கிறது. 'யாரை தூக்கப் போறாங்களோ எல்லாரையும் கலைக்கப் போறாங்களோ' என்று அவரவர் பேசிக் கொள்கின்றனர். 


நேர்காணல் செய்தவர் எல்லோரும் பார்க்கக் கூடியவாறு வெளியே வந்து நின்று ஒரு நிறுவனம் 'தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ற அறிவும் செயற்றிறனும் மிக்க ஆளைத் தேடுவது வழக்கம். அதன்படிக்குப் பத்துப் பேர் தேவைப்படுமிடத்தில் இந்த நேர்காணலில் ஐந்து பேரைத் தான் தெரிவு செய்யக் கூடியதாக இருந்தது.' எனத் தனது அறிவிப்பை வழங்கத் தொடங்கினார். அதன்படிக்கு, அந்த ஐந்து பேரில் உயிரனும் தேர்வு செய்யப்படுகிறார். 


புதிய சூழலில் புதிய சந்திப்பில் புதியவர்களை அறிமுகமாக்கிக் கொள்வதால் பல நட்புகளைத் தோற்றுவிக்கலாம். பல நல்ல அறிஞர்களும் நண்பராகக் கிடைக்கலாம். அந்த வகையில் உயிரனும் பலருடன் தன்னை அறிமுகம் செய்து, பலரையும் தனது பக்கம் உள்வாங்கிக் கொள்கிறான். அதன்படிக்குப் பலரும் அன்றிலிருந்து உயிரனுடன் நண்பர்கள் ஆகின்றனர். 


குறித்த இடத்தில் இருந்து எல்லோரும் கலையும் போது உயிரனும் வீட்டுக்குச் செல்கிறான். செல்லும் வழியில் மீண்டும் பொன்னி வந்து நின்று மறித்து 'நேர்காணல் எப்படி இருக்கு, நீ தெரிவு செய்யப்பட்டாயா' என்று கேட்கின்றாள். 'தன்னில் இவ்வளவு அக்கறை இவளுக்கு ஏன் என்பதை அவன் அந்த நேரம் அலசிக்கொள்ள விரும்பவில்லை' எல்லாம் வெற்றி, அடுத்த மாதம் முதலாம் நாள் வேலை என்று சொல்லிவிட்டான். 


அந்தத் தெருவால பலர் பயணிக்கின்ற அந்த வேளை கூட, அவள் அவனை இறுக அணைத்து; 'எனக்கு வாழ்வு கிடைத்துவிட்டது' என்று ஆனந்த கண்ணீர் வடிக்கிறாள். அதன் பின்னர் தான், அவள் தன் மீது பற்று வைத்திருக்கிறாள் என்பதை உயிரனால் உணர முடிந்தது. சரி! சரி! தெருவில வீண் பேச்சு எதற்கு, 'வீட்டுக்கு வா போவோம்' என்று அழைக்கின்றான். அவளும் அவனது நிழல் போலத் தொடர்ந்தாள்.


வீட்டுக்கு சென்ற உயிரனுடன் அழையா விருந்தாளியாக பொன்னியும் வந்து சேர்ந்தாள். ராசம்மாவும் ராசையாவும் 'யார் இந்த பிள்ளை' என்று கேட்காமல் 'உனக்கு வேலை கிடைத்து விட்டதா' என்று கேட்கின்றனர். 'ஆம்! கிடைத்துவிட்டது, ஐம்பதினாயிரம் சம்பளம்' என்றான். அவனைத் தாயும் தகப்பனும் கட்டி அணைத்துக் கொண்டனர். 'தலைப் பிள்ளை தலை நிமிர்ந்து விட்டான்' என்று அவர்களும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.


அப்ப தான் உயிரனின் சகோதரர்கள் 'அண்ணாவுக்கு வாழ்த்துகள்' என்று கைகுலுக்கிக் கொண்டிருந்தனர். அப்போது தான் 'யாரந்தப் புது ஆள்' என்று வினவினர். வழியில் என்னைப் பார்த்துப் பலர் பழித்தும் நெழித்தும் கொண்டிருக்கும் போது, சைவப் பள்ளிக்கூடத்தில படித்த இவள் மட்டும் வாழ்த்துத் தெரிவித்தாள். 'நான் தெரிவு செய்யப்பட்டதை அறிந்து கொள்ள' நேர்காணல் முடியும் வரை தெருவில காத்திருந்திருந்தாள். 'வேலை கிடைச்சிட்டுது' என்றதும் மகிழ்ச்சியடைந்தாள். 'வீட்டுக்கு வா, வீட்டில வந்து கதைக்கலாம்' எனக் கூட்டிக் கொண்டு வந்தனான் என விளக்கினான்.. அந்த வீட்டில் உயிரனுக்கு வேலை கிடைத்த கொண்டாட்டம் தொடர்கின்றது.

                                              (யாவும் கற்பனை)



ஞாயிறு, 15 ஜனவரி, 2023

2023 தை பிறந்தால் நல்வழி பிறக்கும் தானே!

 

 
உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர் எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

2023 இல் எனது 'தன் முன்னேற்ற வழிகள் (Ways of Self Improvement)' வலையொளிப் பக்கம் https://www.youtube.com/@kasi.jeevalingam தொடங்கியுள்ளேன். அதில் வரும் தகவலை வாசிக்க https://mhcd7.wordpress.com/ என்ற இணைப்பைச் சொடுக்கலாம்.




"2023 தை பிறந்தால் நல்வழி பிறக்கும் தானே!" என்ற நம்பிக்கையில் வலைப்பதிவுகளை அதிகம் பகிர எண்ணியுள்ளேன். 


ஞாயிறு, 1 ஜனவரி, 2023

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

 


2023 இலிருந்து எல்லா வலைப் பக்கங்களும் வழமை போல் இயங்கும்.

தன் முன்னேற்ற வழிகளைத் தெரிந்துகொள்வோம்.

2023 இலிருந்து புதிய வலையொளி (யூடியூப்) பக்கம் தொடங்கி உள்ளேன்.

தன் முன்னேற்ற வழிகளைத் தெரிந்துகொள்வோம்.

https://youtu.be/WSd0DvWRfvs

இனிய வலையுறவுகளே! தொடர்ந்தும் எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.







ஞாயிறு, 25 டிசம்பர், 2022

வலையுறவுகளுக்கு இனிய கிறிஸ்த்துமஸ் வாழ்த்து

.வணக்கம் வலையுறவுகளே!


 மீண்டும் 2023 இல் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்.

செவ்வாய், 13 டிசம்பர், 2022

யாழ்பாவாணனுக்கு 'சொற்சுவைத் தேனி' விருது

இலங்கை - யாழ்ப்பாணம் - மாதகலில் இருந்து இயற் பெயர்: காசி.ஜீவலிங்கம்,  இலக்கியப் பெயர் (புனைபெயர்): யாழ்பாவாணன் ஆகிய நான் 1986, 1987 ்காலப் பகுதியில் இலக்கியம் படைக்கலாம் என முயன்று பார்த்தேன். சிறு நாடகம் முதலில் எழுதி, இயக்கி அரங்கேற்றினேன். எனது முதலாவது கவிதை 25/09/1990 யாழ் ஈழநாதம் ஏட்டில் வெளியானது. பின் வீரகேசரி ஏட்டிலும் வெளியானது. சில படைப்புகள் இந்திய மற்றும் இலங்கைத் தொகுப்பு நூல்களிலும்  வெளியானது. 2010 இலிருந்து இணைய வழியில் எனது படைப்புகளைப் பகிர்ந்து உலகலாவிய வாசகரைப் பேணி வருகிறேன். 

2020 தீநுண்மி (கொரோனா) தொற்றுப் பரவல் மற்றும் ஆள் முடக்கம் காலப் பகுதியில் இணைய வழிக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. அந்த வகையில் நானும் இரண்டாண்டுகள் இலக்கியப் பயிலரங்குகள் நடாத்தி வந்தேன். ஏனைய குழுக்களின் இணைய வழிக் கலந்துரையாடல்களிலும் பங்கு பற்றியிருந்தேன். அந்த வகையில் இந்திய-தமிழக தேனித் தமிழ்ச் சங்கம் எனக்கு '‘சொற்சுவைத் தேனீ'' எனும்  விருதினை வழங்கியிருக்கிறது.

தேனித் தமிழ்ச்சங் கமேதந்த சான்றிதழ்
தேடியே வந்ததென் கைக்கு.
                   {இரு விகற்பக் குறள் வெண்பா}


மேற்படி விருது வழங்கியமையைத் தெரிவித்து மதிப்புக்குரிய தேனி மு,சுப்பிரமணி (தலைவர், தேனித் தமிழ்ச் சங்கம்) அவர்கள் பின்வருமாறு பகிர்ந்துள்ளார்.

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இந்தியாவிலிருக்கும் விருதாளர்களுக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றது.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இவ்விழாவில் பங்கேற்க இயலாது என்பதால், மின்னஞ்சல் வழியாக விருதுச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.

தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தங்களுக்கான பக்கம்:

சொற்சுவை விருதாளர்கள் பக்கம்:

இப்படி ஒரு நிகழ்வில் உரையாற்ற ஒழுங்கு செய்து தந்த பெரியோருக்கும் நிகழ்வில் பங்கெடுத்த பெரியோருக்கும் எனக்கான விருதினை என் கைக்குச் சேர்ப்பித்த மதிப்புக்குரிய தேனி மு,சுப்பிரமணி (தலைவர், தேனித் தமிழ்ச் சங்கம்) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் நான் பல சான்றிதழ்களைப் பெற்றிருந்தாலும் நான் பல பட்டங்களைப் பெற்றிருந்தாலும் 'யாம் பெற்ற கல்வி இவ்வையகமும் பெற வேண்டும்' என்ற நோக்கில் எனது பணியைத் தொடர ஊக்குவித்தாலும் என்னிடம பயன்பெற்று நிறைவடைந்த பயனாளர்களின் மகிழ்ச்சியை உள்ளத்தில் பேணுவதிலே நான் நிறைவடைகிறேன்.