Translate Tamil to any languages.

ஞாயிறு, 21 மே, 2023

நேர்காணல் (கடுகுக் கதை)


 காலை விடிந்தது. பகலவன் வீட்டை குடைந்து ஒளி தந்தான். ராசம்மா தேநீர் போட்டு பிள்ளைகளுக்கு கொடுத்தாள். ராசையா தனது வேலைகளைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் 


மூத்தவன் உயிரன் தனது படிப்பில் கவனம் செலுத்தி தன் படிப்பைத் தொடருகிறான். மற்றவர்களை 'கொண்ணன் எழும்பிப் படிக்கிறான். நீங்களும் எழும்பிப் படியுங்கோ' என்று  ராசம்மா  எழுப்புகிறார். 


'ஏழரை மணியாப் போச்சு. அவரவர் வேலைக்கு போக ஆயத்தம் செய்யுங்கோ.' என ராசையா நினைவூட்டினார். 'சாப்பாடு தயார், குளிச்சா வந்து சாப்பிடுங்கோ' என ராசம்மாவும் அறிவிப்புச் செய்தாள். 


உயிரனும் தனது கடமைகளை முடித்துக் கொண்டு, தெருவுக்கு இறங்கினான். ஏதோ ஒரு நேர்காணல் என்று புறப்பட்டுக் கொண்டிருந்தான். வழியில கறுத்தப் பூனை குறுக்கால போனது. அவன் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் பயணிக்கிறான். வழியில 'இந்த மூஞ்சிக்கு, உனக்கும் ஒரு வேலையோடா' எனச் சிலர் நையாண்டி பண்ணினர். அதனையும் கடந்து பயணிக்கிறான். பொன்னி என்ற ஒருத்தி 'நல்ல சம்பளத்தோட வேலை கிடைக்காட்டி, இந்த மூஞ்சியைப் பார்க்காதே' என்று எச்சரிக்கிறார் இவற்றையெல்லாம் தலையில் போட்டபடி உயிரனும் நேர்காணலுக்குப் பயணிக்கிறான்.


'உறுதியான எண்ணத்துடன் எந்தப் பயணம் மேற்கொண்டாலும் எப்போதும் பின்னடைவுக்கு இடம் இருக்காது' என்று பலர் தங்கள் புத்தகங்கள் எழுதி இருந்ததை உயிரன் படித்திருந்தான். அதனால் அவன் தனது குறிக்கோளிலிருந்து விலகாமல் தனது பயணத்தைத் தொடருகிறான். 


குறித்த நேர்காணல் இடத்துக்கு உயிரன் சென்று, தனக்கான அழைப்பு வரும் வரை காத்திருக்கிறான். தனக்கான அழைப்பு வந்ததும் நேர்காணலில் தலையைக் காட்டுகிறான். நேர்காணல் செய்பவரோ படித்தது; படித்ததை வைத்துப் பயிற்சி பெற்றது; பிற இடங்களில் பணி செய்தது என்று பல கேள்விக் கணைகளைத் தொடுத்தார். கடைசியாக 'எனது நிறுவனத்தை ஏன் தெரிவு செய்தாய்' என்றும் கேள்வியை முன்வைக்கின்றார். 


நேர்காணல் செய்தவருக்கு உயிரனின் பதில்கள் திருப்தி அளித்தாலும் மாற்றாரை நேர்காணல் செய்வதற்காக 'வெளியில் போய் இரும்' என்று பணிக்கின்றார். நேர்காணலுக்கு வந்த அனைவரும் நேர்காணல் செய்து முடித்து உயிரனுடன் வெளியே காத்திருக்கின்றனர். 'யார் யாரைத் தெரிவு செய்தாச்சு' என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஒரு மணித்துளி, இரண்டு மணித்துளி என நேரம் கடக்கிறது. 'யாரை தூக்கப் போறாங்களோ எல்லாரையும் கலைக்கப் போறாங்களோ' என்று அவரவர் பேசிக் கொள்கின்றனர். 


நேர்காணல் செய்தவர் எல்லோரும் பார்க்கக் கூடியவாறு வெளியே வந்து நின்று ஒரு நிறுவனம் 'தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ற அறிவும் செயற்றிறனும் மிக்க ஆளைத் தேடுவது வழக்கம். அதன்படிக்குப் பத்துப் பேர் தேவைப்படுமிடத்தில் இந்த நேர்காணலில் ஐந்து பேரைத் தான் தெரிவு செய்யக் கூடியதாக இருந்தது.' எனத் தனது அறிவிப்பை வழங்கத் தொடங்கினார். அதன்படிக்கு, அந்த ஐந்து பேரில் உயிரனும் தேர்வு செய்யப்படுகிறார். 


புதிய சூழலில் புதிய சந்திப்பில் புதியவர்களை அறிமுகமாக்கிக் கொள்வதால் பல நட்புகளைத் தோற்றுவிக்கலாம். பல நல்ல அறிஞர்களும் நண்பராகக் கிடைக்கலாம். அந்த வகையில் உயிரனும் பலருடன் தன்னை அறிமுகம் செய்து, பலரையும் தனது பக்கம் உள்வாங்கிக் கொள்கிறான். அதன்படிக்குப் பலரும் அன்றிலிருந்து உயிரனுடன் நண்பர்கள் ஆகின்றனர். 


குறித்த இடத்தில் இருந்து எல்லோரும் கலையும் போது உயிரனும் வீட்டுக்குச் செல்கிறான். செல்லும் வழியில் மீண்டும் பொன்னி வந்து நின்று மறித்து 'நேர்காணல் எப்படி இருக்கு, நீ தெரிவு செய்யப்பட்டாயா' என்று கேட்கின்றாள். 'தன்னில் இவ்வளவு அக்கறை இவளுக்கு ஏன் என்பதை அவன் அந்த நேரம் அலசிக்கொள்ள விரும்பவில்லை' எல்லாம் வெற்றி, அடுத்த மாதம் முதலாம் நாள் வேலை என்று சொல்லிவிட்டான். 


அந்தத் தெருவால பலர் பயணிக்கின்ற அந்த வேளை கூட, அவள் அவனை இறுக அணைத்து; 'எனக்கு வாழ்வு கிடைத்துவிட்டது' என்று ஆனந்த கண்ணீர் வடிக்கிறாள். அதன் பின்னர் தான், அவள் தன் மீது பற்று வைத்திருக்கிறாள் என்பதை உயிரனால் உணர முடிந்தது. சரி! சரி! தெருவில வீண் பேச்சு எதற்கு, 'வீட்டுக்கு வா போவோம்' என்று அழைக்கின்றான். அவளும் அவனது நிழல் போலத் தொடர்ந்தாள்.


வீட்டுக்கு சென்ற உயிரனுடன் அழையா விருந்தாளியாக பொன்னியும் வந்து சேர்ந்தாள். ராசம்மாவும் ராசையாவும் 'யார் இந்த பிள்ளை' என்று கேட்காமல் 'உனக்கு வேலை கிடைத்து விட்டதா' என்று கேட்கின்றனர். 'ஆம்! கிடைத்துவிட்டது, ஐம்பதினாயிரம் சம்பளம்' என்றான். அவனைத் தாயும் தகப்பனும் கட்டி அணைத்துக் கொண்டனர். 'தலைப் பிள்ளை தலை நிமிர்ந்து விட்டான்' என்று அவர்களும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.


அப்ப தான் உயிரனின் சகோதரர்கள் 'அண்ணாவுக்கு வாழ்த்துகள்' என்று கைகுலுக்கிக் கொண்டிருந்தனர். அப்போது தான் 'யாரந்தப் புது ஆள்' என்று வினவினர். வழியில் என்னைப் பார்த்துப் பலர் பழித்தும் நெழித்தும் கொண்டிருக்கும் போது, சைவப் பள்ளிக்கூடத்தில படித்த இவள் மட்டும் வாழ்த்துத் தெரிவித்தாள். 'நான் தெரிவு செய்யப்பட்டதை அறிந்து கொள்ள' நேர்காணல் முடியும் வரை தெருவில காத்திருந்திருந்தாள். 'வேலை கிடைச்சிட்டுது' என்றதும் மகிழ்ச்சியடைந்தாள். 'வீட்டுக்கு வா, வீட்டில வந்து கதைக்கலாம்' எனக் கூட்டிக் கொண்டு வந்தனான் என விளக்கினான்.. அந்த வீட்டில் உயிரனுக்கு வேலை கிடைத்த கொண்டாட்டம் தொடர்கின்றது.

                                              (யாவும் கற்பனை)கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!