Translate Tamil to any languages.

புதன், 24 மே, 2023

வேலைக்குப் போவாள் (கடுகுக் கதை)

 வானம் செம்மஞ்சள் நிறமாக, ஊரும் வெயில் தணிந்ததாக, எரிந்து கொண்டு கடலில் விழுகிற மாதிரிச் சூரியனும் வானில் மின்னக் குத்து மதிப்பாக ஐந்து மணியைத் தாண்டி இருக்கும் அழகான மாலைப் பொழுது. 


முதன்மைச் சாலை வழியே எதிரெதிரே உயிரனும் பொன்னியும் எதிர்பாராமல் சந்திக்கின்றனர். தெரு ஓரமாக ஒதுங்கிக் கொண்டு ஏதோ பேச முற்படுகின்றனர். 


'உனக்கு என்ன வேலை கிடைச்சாச்சு கொண்டாட்டம் நடத்தி போட்டீர். தெருவாலே போன என்னையும் தங்களுடைய வீட்டுக்கு இழுத்துப் போட்டீர். உமக்கு வேலை கிடைச்ச கொண்டாட்டத்தில எனக்கு அதிகம் வரவேற்பு கிடைக்கேல... என்றாலும் வீட்டுக்காரருக்கு என்னையும் நல்ல படிச்ச பிள்ளை என்று காட்டிப்போட்டீர்.' என்றவாறு பொன்னி தன் பேச்சைத் தொடுத்தாள்.


'நேர்காணலுக்குப் போகேக்க என்னைக் கண்டதால் தான் நீ விசாரித்தாய் என்று அறிந்தேன். நேர்காணல் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வரை நீ காத்திருப்பாய் என்று எதிர்பார்க்கவே இல்லை நேர்காணலில் தெரிவு செய்யப்பட்டேன் என்றதும் என்னை இறுகப்பற்றினாய். என் மீது ஏதோ அக்கறை உனக்கு இருப்பதை உணர்ந்தேன். அதனால் தெருவில் நின்று கதைத்தால் ஊராக்கள் நாலும் கதைப்பினம். அதுதான் வீட்டுக்கு வா என்று அழைத்திருந்தேன். என்னவோ உன் திறமையால வீட்டாரின் உள்ளத்தை கொள்ளை அடித்து விட்டாய்!' எனத் தன் எண்ணத்தை உயிரன் பகிர்ந்தான். 


'இப்பவும் தெருவில் தான் நிற்கிறோம், இதில நின்றால் ஊராக்கள் நாலும் கதைக்காதுகள் பத்துப் பதினைந்து எனப் போட்டுக் கதைப்பினம். அடுத்த தெருவில் தான் என்னுடைய வீடு. ஒரு மணித்துளி நேரம் என் வீட்டுக்கு வந்து போகலாமே! வாங்க! வாங்க! என் வீட்டையும் பார்த்ததாக முடியும்.' என்று பொன்னி அழைத்துச் சென்றாள். 


பெட்டை நாய்க்குப் பின்னால போற பொடியன் நாய் போல பொன்னிக்குப் பின்னாலே உயிரன் போய்க் கொண்டிருப்பதை வானம் பார்த்துக் கொண்டிருந்தது.


வாவ் வாவ் எனப் பொன்னி வீட்டு நாய்கள் குரைத்தது. யார் யார் என வீட்டில் உள்ளவர்கள் படலை வரைக்கும் வந்து விட்டனர். 


உந்தச் சைவப் பள்ளிக்கூடத்தில என்னோட படித்த நண்பர் ஒருவர் எங்கட வீட்டைப் பார்க்க வருகிறார். வழியில கண்டால் போல நான் தான் கூட்டிக்கொண்டு வாரேன். நிலைமையைச் சொல்லிப் போட்டு உயிரனை வீட்டிற்கு உள்ளே பொன்னி அழைத்துச் சென்றாள். 


'வாங்கோ தம்பி! ஏதோ நல்ல வேலை கிடைச்சிட்டுதாம். பொன்னி சொல்லித் தான் அறிந்தோம். இப்ப மகிழ்ச்சி தானே!' என்று பொன்னியின் தாய் மங்கம்மா, தகப்பன் மணிராஜ் உயிரனை வாழ்த்தி வரவேற்றனர். 


'வேலையில எதற்கும் முகம் கொடுத்து வேலை செய்தால் தான், நிரந்தரமாக வேலை செய்து பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற்று முன்னேற முடியும்' என மணிராஜ் உயிரனுக்கு வழிகாட்ட, மங்கம்மா பால்த் தேனீர் போட்டுக் கொண்டு வந்து உயிரனுக்கு நீட்டினார். 


'உங்களுக்குச் சரியான வரவேற்புத் தான்.' என்று உயிரனை பார்த்துப் பொன்னி புன்னகைத்தாள். நாங்கள் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை. அதனால், எங்கட வீடும் ஒரு சின்ன வீடு தான். வீட்டு நிலைமையைப் பொன்னி விளக்கினாள். 


'நீயும் படிச்ச நீ தானே! நல்ல வேலைக்கு விண்ணப்பித்து வேலை கிடைத்ததும் தந்தி அடிக்கவும்.' என்று உயிரன் தன் விருப்பத்தினை வெளியிட்டுத் தான் வீட்டுக்குப் புறப்பட எழும்பினான்.


'எங்கட பிள்ளையும் வேலைக்கு விண்ணப்பம் போட்டபடி தான் இருக்கிறாள். இவளுக்கேற்ற வேலை கிடைக்க வேண்டுமே!' என்று தாய் மங்கம்மா தன் பிள்ளையை உயர்த்திப் பேசினார். 


'இந்தக் காலத்தில என்னத்தைப் படிச்சாலும் நல்ல வேலையில நல்ல வருவாய் பெறுகிற ஆளாக இருக்க வேண்டும்' என்று தந்தை மணிராஜ் உம் தன் பக்கத்துக்குச் சொல்லி முடித்தார். 


படிப்பில கெட்டிகாரப் பிள்ளை. படிச்சு முன்னேற ஊக்கம் தருகிற பிள்ளை. நேர்காணலுக்கு போகேக்கையும் வேலை கிடைச்சால் தான் தன்னைப் பார்க்கலாமென்று எச்சரித்தும் அனுப்பிவைத்தாள். அப்படியான நல்ல பிள்ளை கேட்டதற்காக உங்களுடைய வீட்டையும் வந்தேன் என்று உயிரன் தன் நிலையை விளக்கினான். 


'சரி! பிள்ளைக்கு வேலை கிடைத்ததும் சொல்லுங்கோ! அப்ப உங்கட வீட்டை வருவேன். இப்ப நான் வீட்டுக்கு போகிறேன்' என்று உயிரன் தன் வீடு நோக்கிப் புறப்பட்டான். 


'உன்னைப் போல தம்பி, எங்கட பிள்ளைக்கும் வேலை கிடைத்தால் எங்களுக்கும் மகிழ்ச்சி தான்.' என பொன்னியின் தாய், தந்தை உயிரனை வழியனுப்பி வைத்தனர். 


'இனி வேலையில தான் இருப்பியள். என்னோட கதைக்கக் கூட நேரம் இருக்குமோ தெரியாது.' என்று பொன்னி உயிரனின் கையைப் பிடித்துக் கேட்டாள். 


'கதைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் கதைக்கத் தானே வேண்டும். இதில் என்ன சிக்கல் இருக்கு' என உயிரன் கையை விடுவித்துக் கொள்கிறான். 


'முதல்ல நீ ஒழுங்காக வேலையில் சேர், பிறகு தான் நீ உயர்ந்த நிலைக்கு வருவாய். அப்பதான் நானும் பெரிய இடத்துப் பிள்ளையெனக் கதைக்க முடியும். சரி! என்னுடன் கதைப்பதற்காகத் தானும் நீ நல்ல வேலையில சேரத் தானே வேண்டும்.' என உயிரன் பொன்னியின் கையைக் குலுக்கினான். 


'நானும் முயற்சி செய்கிறேன். எங்கேயும் வெற்றிடமிருந்தால் மறக்காமல் எனக்கு நினைவூட்டும்' என்று அவளும் அவனது கையை இறுகப் பற்றுகிறாள். 


'மீண்டும் சந்திப்போம்' என இருவரும் கையை விலக்கிக் கொண்டு பிரிகின்றனர். 


(யாவும் கற்பனை)


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!