நாங்கள் சதுர்த்தி நாளில் நோன்பும் இருப்போம்
சங்கடங்கள் தீருமெனக் கணபதியை வேண்டுவோம்
(நாங்கள்)
தலையில குட்டித் தோப்புக்கரணம் போடுவோம்
தலையில கொஞ்சம் அறிவைக்கூடப் பெருக்குவோம்
(தலையில)
உலகத்தில் முதன்முதல் எழுதிய ஆனைமுகனே
வியாசருக்குப் பாரதக்கதை எழுதிய ஆனைமுகனே
தந்தமுடைத்து எழுதுகோலாக்கி எழுதிய ஆனைமுகனே
எந்தன் எண்ணங்களை எழுதவுதவும் ஆனைமுகனே!
எங்கள் பிள்ளைகள் படிக்கவுதவும் ஆனைமுகனே!!
(நாங்கள்)
(தலையில)
காவேரியை நீராகக் கமண்டலத்தில் முட்ட
அடைத்து வைத்திருந்த அகத்தியருக்குக் கிட்ட
காகம் உருவில் வந்த விக்கினேசன் தட்ட
கமண்டல நீரோ ஆறாகப் பெருக விட்ட
விக்கினேசன் செயலறிந்து வேண்டி நிற்கிறோம்
அகத்தியரைப் போலவே தலையிலே குட்டி
நம்வாழ்வு மேம்பட வேண்டி நிற்கிறோம்!
(நாங்கள்)
(தலையில)
கஜமுகாசுரனுக்கு ஆயிரத்து எட்டு முறையாம்
தோப்புக்கரணம் போட்ட தேவர்கள் தானாம்
பிள்ளையாரை வேண்டிக் கொண்ட பயனாம்
பிள்ளையாரே கஜமுகாசுரனை அழித்த செயலாம்
பிள்ளையாருக்கு மும்முறை தோப்புக்கரணம் தானாம்
தேவர்கள் போட்டதை நாமும் போடுகிறோம்
பிள்ளையாரே நமக்கு நல்லறிவைத் தாருமையா!
(நாங்கள்)
(தலையில)
பிள்ளையார் முன்னே பிரம்மா குறுகிநிற்கவே
பார்த்திருந்த சந்திரன் கேவலமாகச் சிரிக்கவே
பார்த்த பிள்ளையாருக்குக் கோபம் வந்திடவே
சந்திரனைத் தேய்ந்துபோக வைத்ததும் பிள்ளையாரே!
இருண்ட சந்திரனும் பிள்ளையாரைப் பணியவே
பணிந்த சந்திரனும் வளரும்நிலை பெற்றானே!
தேய்பிறை என்பதும் வளர்பிறை என்பதும்
எங்கள் பிள்ளையார் வகுத்த செயலென்றே
சதுர்த்தியில் பணிவோம் சங்கடங்கள் தீருமென்றே!
(நாங்கள்)
(தலையில)
அறிஞர்களே! எனது குலதெய்வமாகிய என்னூர் விநாயகரை எண்ணி எழுதிய
வரிகள் இவை. இதில் வரலாற்று வரிகள் இணைத்துள்ளேன். தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள்.
திருத்தங்கள் செய்த பின் யூடியூப் இல் வெளியிட உதவும்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!