Translate Tamil to any languages.

சனி, 21 டிசம்பர், 2013

காதல் நாடகம்


(நிறுவனமொன்றில் முதலாளியின் அறையினுள்...)
பெண்ணின் தந்தை : வணக்கம் ஐயா!
என்னுடைய மகள்
மணமுடிக்க மறுக்கிறாளையா!

ஆணின் தாய் : வணக்கம் ஐயா!
என்னுடைய மகனும்
மணமுடிக்கப் பின்னிற்கின்றான் ஐயா!

முதலாளி : உங்கட பிள்ளைகளுக்க
காதல் நோய் பிடிச்சிடுச்சோ?

ஆணின் தாய் : எத்தனையோ பெண்கள்
வரிசையிலே முண்டியடிக்க
உந்தாளின்ர மகளை
என்ர மகன் விரும்புவானே!

பெண்ணின் தந்தை : எந்தவொரு ஆணையும்
நிமிர்ந்தும் பார்க்காத என்ர மகள்
உந்தாளின்ர மகனை விரும்புவாளே!

முதலாளி : உங்கட பிள்ளை வளர்ப்பு
எனக்கு வேண்டாம்...
நிறுவனத்துக்குள்ளே
காதல் பண்ண இயலாது...
உங்கட வீடுகளில
நீங்கள் எதையாச்சும்
பண்ணியிருக்கலாமே!

பெண்ணின் தந்தை : வெளியில எவரையும்
விரும்பியிருக்கிறாளோ என்று
பணியாளர்களுக்குள்ளே கேட்டால்
தெரிய வருமெனத் தங்களை நாடினேன்!

ஆணின் தாய் : நானும்
அப்படித்தான் பாருங்கோ
உங்களை நாடினேன்!

முதலாளி
(பெண்ணைக் கூப்பிட்டு) : ஏன் காணும்
மணமுடிக்க மாட்டேனென்று
சினுங்கிறியாமே!

பெண் : மணமுடித்தால்
இளமையும் அழகும்
கெட்டிடுமேயென அஞ்சி
காலம் தள்ளுகிறேன் ஐயா!

ஆணின் தாய்
(தனக்குள்ளே) : என்னையும் என் வீட்டையும்
நன்றாகப் பேணக் கூடியவள் போல...

முதலாளி
(ஆணைக் கூப்பிட்டு) : என்னடாப்பா
மணமுடிக்க மாட்டேனென்று
காலம் கடத்துறியாமே!

ஆண் : நாலு காசு
சேமிச்சு வைச்சுப்போட்டு
இறங்கலாமென்றுதான் ஐயா!

பெண்ணின் தந்தை
(தனக்குள்ளே) : கண்ணை இமை காப்பது போல
என்ர மகளையும்
பார்க்கக் கூடியவன் போல...

முதலாளி
(பெற்றவர்களைப் பார்த்து) :தங்கமான
பிள்ளைகளைப் பெத்துப்போட்டு
என்னையும்
விசாரிக்க வைச்சுப்போட்டு
நாடகமாடுறியளே!

பெண்ணின் தந்தையும்
ஆணின் தாயும் : ஐயா!
எங்களை மன்னிக்கவும்
இந்தக் காலப் பிள்ளைகள்
பணி செய்யுமிடங்களிலே
பலரோட பழகேக்க
யாரையேனும்
விரும்பியிருக்கலாமென
அஞ்சி வந்தோம்...

முதலாளி
(பெற்றவர்களைப் பார்த்து) : நடந்து முடிந்தது
உள்ளத்தை விட்டு அகலாதே...
அறியாமல் தெரியாமல்
பிள்ளைகளையும் விசாரிச்சாச்சு...
என் மீதும்
அவங்கள் ஐயப்படலாம்...
அதனால,
நானே
அவங்களோட பேசி
மணமுடிக்க வைக்கிறன்...

பெண்ணின் தந்தையும்
ஆணின் தாயும் : அவங்க விரும்பினால்
செய்து வையுங்கோ
ஐயா!

பெண்ணின் தந்தையும்
ஆணின் தாயும்
(தமக்குள்ளே) : எப்படியோ
திருமணம்
ஒப்பேறினால் போதுமே!

முதலாளி
(ஆணையும் பெண்ணையும்
நேரிலே கூப்பிட்டு) : 25 - 35 இற்குள்ளே
மணமுடித்தால் தான்
நலமான வாழ்வமையும்
28 இல கட்டினதால
இன்றைக்கு - எனக்கு
எட்டுப் பிள்ளைகளப்பா
பெற்றவர்கள் கிழடானால்
பயனில்லைப் பாரும்
மறுப்பின்றி
மணமுடிக்க "ஓம்" போடுங்கோ!

பெண் (தனக்குள்ளே) : ஊதுகுழல் ஊதியோ
கண்ணெதிரே கண்ணடித்தோ
குறுணிக் கல்லெறிந்தோ
தங்க நகை மின்ன
உந்துருளியை(motor bike) நிறுத்தியோ
உதையுருளியில்(bicycle) பின் தொடர்ந்தோ
திரைப்பட நடிகர்கள் போல
துரத்திப் பிடித்தோ
இன்னும் இன்னும்
எத்தனையோ வழிகளில்
முயற்சி எடுத்தேனும்
"என்னைக் காதலி" என்று
கேட்காத நண்பரே
ஒரே பணித்தளத்தில்
தூரத் தூரப் பணி செய்தும்
உணவுண்ணும் அரங்கில்
சந்திக்கின்ற போதும்
பழகிய அன்பும்
காட்டிய பண்பாடும்
"உன்னைக் காதலி" என்று
என்னைத் துாண்டுகிறதே!

ஆண் (தனக்குள்ளே) : அழகு நடை காட்டியோ
புதிய புதிய ஆடைகள் அணிந்து
அடிக்கடி ஆடியாடி வந்தோ
ஐயம்(doubt) கேட்பது போல
கதைத்துப் பேச நாடியோ
தாளில் ஏவுகணை(rocket) விட்டோ
ஈயும் மென் நாரால் (rubber band)
பூவரச இலைக் காம்பை
மடித்து எய்து விட்டோ
அடிக்கடி அருகே வந்து
மார்பில் கை வைத்துக் காட்டியோ
போகும் வழியில் போவது போல
சற்று இடுப்பாலே இடித்துப் போட்டு
"மன்னிக்கவும்" என்று சொல்லிப் போயோ
மதிய உணவை விட்டிட்டு
அப்படியே வந்துட்டேன் - அந்த
அன்னம் கடையில ஒரு பொதி
எடுத்துத் தாருமேனெனக் கெஞ்சியோ
இன்னும் இன்னும்
எத்தனையோ வழிகளில்
முயற்சி எடுத்தேனும்
என்னுள்ளத் தாழ்ப்பாளை
திறக்க முயற்சிக்காமல்
பண்பாகத் தூர நின்றே
இனிமையாகப் பேசுங்கிளியே
உன்னை ஏற்கத்தான்
உள்ளம் விரும்புகிறதே!

முதலாளி
(ஆணையும் பெண்ணையும்
பார்த்து) : ஊமையாகத் தரையைப் பார்த்து
கால் விரல்களை எண்ணுறியளோ...
ஓமோ இல்லையோ
உங்கட விருப்பத்தைக் கூறுங்களேன்?

ஆண் (பெண்ணைப்
பார்த்து) : உங்களுக்கு விருப்பம் என்றால்
எனக்கு ஓம்!

பெண் (ஆணைப்
பார்த்து) : உங்களுக்கு விருப்பம் என்றால்
எனக்கு ஓம்!

ஆணும் பெண்ணும்
(முதலாளியைப் பார்த்து) : பெற்றவர்களுக்கு விருப்பம் என்றால்
எங்களுக்கும் ஓம்!

முதலாளி
(ஆணையும் பெண்ணையும்
பார்த்து) : வருகிற மாதம் முதலாம் நாள்
என்னுடைய செலவிலே
உங்களுக்குத் திருமணம்!
ஆனால்,
காதலிக்காமல் திருமணமா?

ஆணும் பெண்ணும்
(முதலாளியைப் பார்த்து) : திருமணமாகிய பின் மலரும்
காதலே
மகிழ்வைத் தருமென
பாவரசர் கண்ணதாசன்
சொல்லி வைச்சிருக்கிறாரே!

(முதலாளி எல்லோருக்கும் கற்கண்டு வழங்கி மகிழவும்
முதலாளியின் அறையிலிருந்து எல்லோரும் வெளியேறினர்...)

2 கருத்துகள் :

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!