Translate Tamil to any languages.

புதன், 15 மே, 2013

நற்றமிழ் வெளிப்படுத்தாத வாய்கள்


அன்புள்ள நண்பரின் மணநாள் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிய "சாப்பாட்டுக்கு வாருங்கோ" என அழைத்தார்கள். இருப்பிடத்திற்குப் போய்க் குந்தினதும் பெரிய வாழை இலையைப் போட்டார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாய் கறிகளைப் போடத் தொடங்கினர்.  "எப்பன் உண்டெனப் போடப்பா..." என்றொரு கிழம் சொல்லிச்சு. என்னவோ, பருப்புக் கறிக்கு மேலே "ஆனந்தம்" நல்லெண்ணை ஊற்றியதும் மூச்சுப் பேச்சின்றி எல்லோரும் மூக்கு முட்ட விழுங்கினர்.

வடை, சவ்வரிசிக் கஞ்சி (பாயாசம்) வழங்கியதும் உண்டு களித்துப் பின் எச்சில் இலையோட ஒரு கோடியில் வந்து, இலையை எறிந்து போட்டுக் கை கழுவிய பின் முன்றலில் கூடினர். அவ்வேளை உணவு வழங்கியோர் ஆளுக்கொரு "அணில்" குளிர்களி வழங்கினர்.

பிறகென்ன, உண்டு சுவைத்து ஆளுக்கொரு நொட்டை நொடுக்குச் சொல்லிச்சினம். "ஐஸ்கிறீம்" இற்கு "சுகர்" காணாதாம். கிழங்குக் கறி "டேஸ்ட்" இல்லையாம். மோருக்கு "சோல்ட்" கூடிப் போச்சாம். வாழை இலைக்குப் பதிலாக "பிளேட்" இல் தந்திருக்கலாமே என்றும் தொடர்ந்தனர்.

உண்ட வாயாலே கண்டதையும் சொல்லலாம். ஆனால், தமிழராய் இருந்து கொண்டு பிறமொழிச் சொற்களை இணைத்துப் பேசினால் தமிழல்லவா சாகிறது.

நானும் குளிர்களி உண்டு முடிய அன்புள்ள நண்பருக்குப் பரிசில்ப் பொதி வழங்கிப் போட்டு "எல்லாம் சிறப்பாக நடந்தது, மணநாள் சாப்பாட்டை மறக்கேலாது" என்று கூறி விடை பெற்றேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!