பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களை மீட்டுப் பார்க்க உதவும் வகையில் சில குறுந்தகவலை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
Translate Tamil to any languages. |
ஞாயிறு, 14 நவம்பர், 2021
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

திங்கள், 27 செப்டம்பர், 2021
கண்ணும் குறளும் கண்ணோட்டமும்
கண்ணென்ப பார்க்கத்தான் கண்ணாலே பார்த்ததை
உண்மையில் செய்வாராம் காண்.
(ஒரு
விகற்பக் குறள் வெண்பா)
நல்லவை மட்டுமே கண்ணாலே பார்த்தவர்
நல்லதையே செய்திடுவார் காண்.
(ஒரு
விகற்பக் குறள் வெண்பா)
கெட்டவை மட்டுமே கண்ணாலே பார்த்தவர்
கெட்டதையே செய்திடுவார் காண்.
(ஒரு
விகற்பக் குறள் வெண்பா)
கண்ணாலே கண்டதை மூளையாம் உள்வாங்க
எண்ணும் விளைவையே காட்டு. (ம்)
(ஒரு
விகற்பக் குறள் வெண்பா)
நல்லதைத் தானுறிஞ்சி கெட்டதைத் தான்விலக்கி
பார்க்காத கண்ணுந்தான் புண்.
(இரு
விகற்பக் குறள் வெண்பா)
வள்ளுவர் வாக்கிலே கண்ணுமே புண்ணாமே
கண்ணோட்டந் தான்படித்தால் காண்.
(இரு
விகற்பக் குறள் வெண்பா)
ஒரு பொருளின்,
ஒரு பொத்தகத்தின், ஒரு பாடலின் வெளியீட்டில் இருப்பதென்ன
என்றெல்லாம் பார்ப்பது கண்ணோட்டம் அல்ல. அப்பொருளின், அப்பொத்தகத்தின், அப்பாடலின் உள்ளடக்கத்தை அலசிப் பார்க்க
வேண்டும். அதன் அகம், புறம் மட்டுமல்ல; அந்த உள்ளடக்கத்தின் நன்மை, தீமை மட்டுமல்ல; பயனாளிக்கான பயனென்ன என்றவாறு கண்ணாலே
கண்டதும் மூளை இயங்கிச் செயற்படும். அவ்வாறான பார்வையே கண்ணோட்டமென எண்ணுகின்றேன்.
அவ்வாறு கண்டிராத கண்ணை வள்ளுவர் சொல்லுமாப் போல புண்ணென்று எண்ணுகின்றேன்.
ஒவ்வொருவர் செயலையும் உலகம் இப்படியான கண்ணோட்டத்திலே
கவனிக்கின்றது என்பதை மறக்க வேண்டாம். அதனடிப்படையிலேயே எனது குறள் வெண்பாக்களை ஆக்கியுள்ளேன். அதாவது எதனைப் புலன் உறுப்புகளால் உள்வாங்கிறோமோ
அதனை மூளை பதிவு செய்கிறது. அதன் விளைவுகளையே மனித வெளியீடுகளாக (எழுத்து, சொல், செயல், நடத்தை வழியாக) மூளை காண்பிக்கின்றது. சுருங்கக் கூறின் அவரவர் உள்ளத்தில் (உள்ளம் –
மூளை இயங்கும் விதம்) இருப்பதே அவரவர் வெளியீடாகக் காணமுடியும்.
https://www.thirukkural.net/ta/kural/kural-0574.html
என்ற இணையத் தளத்தில் இருந்து
பொறுக்கியது.
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். (௫௱௭௰௪ - 574)
தேவையான அளவுக்குக் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பதுபோலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்? (௫௱௭௰௪) — புலியூர்க் கேசிகன்
https://www.thirukkural.net/ta/kural/kural-0575.html
என்ற இணையத் தளத்தில் இருந்து
பொறுக்கியது.
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்
அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். (௫௱௭௰௫ - 575)
கண்ணுக்கு அழகுதரும் ஆபரணம் கண்ணோட்டமே! அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது ‘புண்’ என்றே சான்றோரால் கருதப்படும் (௫௱௭௰௫) — புலியூர்க் கேசிகன்
நல்லதை எண்ணுவோம்; எம்மை அறியாமலே நல்லது வெளிப்படும்; எம்மை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முடியும்.

வியாழன், 16 செப்டம்பர், 2021
தெருத் தெருவாக வண்டிலில் பொத்தகம் விற்கும் நிலை
2022 இல வண்டிலில் பொத்தகம் வைத்துத் தெருத் தெருவாக விற்கும் நிலை எனக்கும் வரலாம் என்றெண்ணி இப்பதிவு. இதோ அந்த வண்டில் வணிகம்.
பொத்தகக் கடைகளில் பொத்தகம் தூசி படிந்து மூடிக் கிடக்கிறது. இணைய வெளியில்
பொத்தகம் படிக்காமல் காணொளி பார்க்கிறாங்க. எந்த வழியிலும் வாசிப்பு நாட்டம் உள்ளவர்களைக்
காணவில்லை. வலை விரித்துப் பிடிக்க முயன்றாலும் அகப்பட மாட்டார்கள் என நம்புகிறேன்.
அதனால் தான் இம்முயற்சியைக் காணொளியாக அறிமுகம் செய்துள்ளேன்.
மேலும், முகநூலில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ குழுவில்
https://www.facebook.com/groups/971804760234678
தெருத் தெருவாக வண்டிலில் பொத்தகம் விற்கும்
நிலையை விளக்கி நீங்களும் உங்கள் விருப்பிற்கு உரிய கவிதைகளை இணைக்கலாம். கவிதைகள்
மின்நூலாக வெளியிடப்படும். நான் இணைத்த கவிதையைக் கீழே தருகின்றேன்.
சிற்றுண்டி விற்பனை வண்டியிலும்
விற்பனைக்குப் பொத்தகங்கள் வந்தாச்சோ
தெருவழியே அலையும் வணிகருக்கு
வாசிப்பவர் இன்றிச் சோர்வாச்சோ
(தன்முனைக் கவிதை)
இப்பதிவோ இம்முயற்சியோ நமது சூழலில் வாசிப்பு நாட்டத்தினை ஏற்படுத்தும் நோக்கில் எழுந்தது. முகநூலில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ குழுவில் https://www.facebook.com/groups/971804760234678 இதனை வலுப்படுத்தும் நோக்கிலும் கவிதைகளை இணைக்கலாம்.
வாசிப்பு நாட்டம் இல்லாத சூழலில்
கற்றலில் நாட்டம் உள்ளவர் இருப்பரோ?
ஏன், அறிவாளிகள் தான் இருப்பரோ?
என்றெல்லாம் ஐயம் வர வாய்ப்பு இருக்கக்கூடும்.
ஒரு நாட்டின் சொத்தாக எழுத்தறிவுள்ள மக்களைப் பேணி வருகின்றோம். வாசிப்பு நாட்டம் இல்லாத
மக்களை நாட்டின் சொத்தாகக் கருத முடியாதே! நமது சூழலில் வாசிப்பு நாட்டத்தினை ஏற்படுத்தும்
பணிகளை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். அதனால், நாளைய வழித்தோன்றல்கள் அறிவாளிகளாக மின்ன
முடியும்.

புதன், 1 செப்டம்பர், 2021
உலக அமைதிக்கு ஓர் மருந்து
ஓரூரில ஒரு நாள் பல
மதத்தவரும் தத்தம் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபாட்டை முடித்த பின் வெளியேறித் தெரு வழியே
வந்தனர். அந்தத்
தெருவில் வெயிலுக்கு நிழல் தரும் மரங்கள் ஒன்றுமே இல்லை. சற்று நேரத்தில் காற்றோடு
மழை வந்து ஆள்களை நனைத்தது.
மழைக்கு நனைந்தவர்கள்
மேலும் நனையாது தம்மைக் காக்க; ஆளுக்கொரு சமயம், ஆளுக்கொரு
கோவில், ஆளுக்கொரு கடவுள் என்று பிரிந்து வாழ்ந்ததை மறந்து ‘மழைக்கு ஒதுங்கினால் போதும்’ என்று ஆளாளுகள் அகப்பட்ட
மதங்களுக்கான ஆலயங்களில் தஞ்சம் புகுந்தனர். மழை தானே என்று அந்தந்த ஆலயங்களைச்
சேர்ந்தவர்களும் வெளியேற்றவில்லை.
ஆளுக்கொரு சமயம், ஆளுக்கொரு
கோவில், ஆளுக்கொரு கடவுள் என்று பிரிந்து வாழ்ந்தவர்கள் 'மழை', 'மழை' என்று எவரெவர்
மதக் கோவில் என்று பாராமல் நுழைந்து மழைக்கு ஒதுங்கியமை
தான் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று உணரவைக்கிறது. ஒவ்வொரு இயற்கை
மாற்றங்களும் இதனையே உணர்த்துகிறது.
இனியாவது, ஆளுக்கொரு
சமயம், ஆளுக்கொரு கோவில், ஆளுக்கொரு கடவுள்
என்று பிரிந்து வாழாமல் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என நாம்
எல்லோரும் ஒற்றுமையாக வாழலாமே! மதங்கள் கடவுளை
நெருங்க/ கடவுள் பக்கம் செல்ல மக்களுக்கு வழிகாட்டும். மக்கள் கடவுள் மீது
நம்பிக்கை வைத்து நல்லொழுக்கமாக வாழ மதங்கள் வழிகாட்டும்.
ஓர் உலகில் ஓர்
இயற்கையின் செயல்
ஒரு கடவுளின் செயல் என்றே கூறமுடியும். மலை உச்சியில் மழை பெய்து போட்ட வெள்ளம் பல ஆறுகளாகப் பிரிந்து ஒரு
கடலில் கலப்பது போலத் தான் பல மதங்களும் பல ஆறுகள் போல ஒரு கடவுளை அடையத் தான்
வழிகாட்டுகின்றன.
நாடு, மொழி,
இனம், மதம், சாதி
வேறுபாடுகளை மறந்து
"ஒன்றே
குலம் ஒருவனே தேவன்" என்று ஒரு தாய் ஈன்ற பிள்ளைகளாக வாழ்ந்தால் மட்டுமே ஊரில,
நாட்டில, உலகத்தில அமைதியை ஏற்படுத்தலாம். எல்லோரும் எள்ளளவேனும் எண்ணிப்பார்த்தால் கூட மனித ஒற்றுமையும் உலக
அமைதியும் நிலைநாட்டப் பங்கெடுக்கலாம்.
குறிப்பு - பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல்
லியோனி அவர்களின் பேச்சிலிருந்து நான் பொறுக்கிய தகவலை வைத்து எழுதியது. ஆயினும்
லியோனி அவர்களோ திரைப்பட இயக்குனர் கே.பாக்கியராஐ் அவர்களின் தகவலெனத் தனது
பேச்சில் குறிப்பிட்டிருந்தார். யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும். எமக்குத் தேவை
மனித ஒற்றுமையும் உலக அமைதியுமே!

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021
கரந்தை ஜெயக்குமார்: ஈழத்துத் தமிழிசை

திங்கள், 9 ஆகஸ்ட், 2021
ஆண்களுக்கு ஒரு புண், பெண்களுக்கு இரு புண்
காதல் இயற்கையாக அமைந்தால்
காதலில் பிரிவே கிடையாதாம் - அந்த
காதலர்களுக்குச் சோதிடத்திலும்
குறிப்பேதும் பார்க்காமல் பொருந்துமாம்!
தாளில் அம்பு செய்து
எய்துவிட்டால் காதல் வரும்
பள்ளிப் பருவத்தில் தான்…
கண்ணடித்தால் காதல் வரும்
பாடல்களில் தான்…
அழகைக் காட்டியதும் - தங்க
அணிகலனைக் காட்டியதும் - நாலு
காசைக் காட்டியதும் மதிமயங்கி
காதல் ஊற்றெடுத்தும் வரும்
திரைப்படப் பாணியில் தான்…
இப்பவெல்லாம்
இயற்கைக் காதல் இங்கில்லை
மணமுறிவு போல காதல் முறிவு
மலிஞ்சு போச்சுக் காணும்!
தங்கள் தங்கள் விருப்படைய
காதலை ஊடகமாக்கினால்
பின் விளைவுகள் சொல்லிலடங்காதே!
மண், பெண், பொன் விருப்படைய
காதலிப்பதாய் ஆண்களும்
எடுப்புக்கு (Styleக்கு), வருவாய் ஈட்டலுக்கு
காதலிப்பதாய் பெண்களும்
ஒருவரை ஒருவர் ஏமாற்றியதால்
காதல் தோல்வியாம் - விளைவாக
ஆண்களுக்கு ஒரு புண்ணும்
(உள்ளப் புண் மட்டும்)
பெண்களுக்கு இரு புண்ணும்;
(உள்ளப் புண்ணும் கருப்பைப் புண்ணும்)
ஏற்பட்ட பின்னரே - அவர்களுக்கு
மூளையே வேலை செய்ததாம்!
காலம் கடந்து அறிவு வந்தும்
பயனேதும் தரப் போவதில்லையே!!
காதல் புனிதமானது தான் - அது
திருமணமே இலக்கு - அதற்குப் பின்
இருவர் உள்ளத்து எதிர்பார்ப்புமென
காதலிப்போருக்கு மட்டுமே போருந்தும்!
காதலித்த பின்னர்
திருமணத்திற்காகப் போராடிய
காதலர் இலக்கியங்கள் சொல்லுமே!

செவ்வாய், 27 ஜூலை, 2021
இணையத்தில் ஏமாளிகளும் ஏமாற்றிகளும்
இணைய வழியில் பலர் ஏமாளிகளாகவும் ஏமாற்றிகளாகவும் உலா வருகின்றனர். இணைய
வழியில் பணம் பறிக்கும் கும்பலே அதிகம். அந்த வகையில் விழிப்புணர்வாக இருக்கச் சிந்திப்போம்.\
நல்ல நட்பாக இணைகிறேன் என்றாள்
அன்புப்பரிசு அனுப்புவதாகச் சொன்னாள்
அந்தப்பொதி உன்வீட்டுக்கு வர
இந்தச்செலவு 200டொலர் அனுப்பாம்
விழித்தேன், மூளை
வேலை செய்தது
அன்புப் பரிசோ நஞ்சுப் பரிசோ
தன்செலவில் அனுப்பியிருந்தால் நம்பலாம்
பணமனுப்பினால் பொதிவராதெனப் படித்தேன்
படித்ததைப் பகிருவதே என் வேலை
படித்ததும் திருந்துவது நீங்கள் ஆச்சே!
சும்மா சொல்லக் கூடாது - ஒருவளென்
அம்மாவை விட அழகியவள் தான்
ஒன்றும் வேண்டாம் அன்பே தேவையென்றாள்
என்றும் என்னவள் இருக்க இவளேனென
நானொரு கிழவன், மனைவி
மகளிருக்கு
நானொரு போதும் ஏற்கேன் என்றேன்!
பரவாயில்லை, இணையவல்ல
இணையத்திலென்றாள்
பரவாயில்லையெனக் கவனிப்புடன்
அரட்டையடித்தேன்!
உங்கள் ஊருக்கு வரவுள்ளேன் என்றாள்...
எங்கள் ஊரினழகைப் பார்க்கலாம்
என்றேன்...
வந்திறங்கச் சின்னச் செலவு வருமாம்...
தந்துதவு 500டொலர் என்றுரைத்தாள்
அவளும்!
இத்தனையும் உண்மை தான் உறவுகளே!
அத்தனையும் இணையத்தில் போலிகள் தான்!
சிந்திக்கச் சொல்லிவைச்சேன் உங்களுக்கு
சிந்திக்காது விட்டால் சிக்கலில்
சிக்குவீர்!
இணையத் திருடர் மற்றும் ஏமாற்றிகள்
காதல், காமம் என்றெல்லாம் வரலாம்
ஏமாறாதீர், வாழ்வையும்
வளங்களையும் இழக்காதீர்!
கண் முன்னே காண்போரைக் கூட
கண்ணாலே நம்ப முடிவதில்லைக் காணும்
தொலைதூர இணையவழி இணைவோரை நம்பி
விலைபோய்ப் பிச்சை எடுக்காமல் தப்பவே
இரண்டு பெண்களின் நான்கு கண்களில்
திரண்டிருந்த ஏமாற்று உட்பொதிவை
உமக்கு உரைத்தேன் ஏற்பீரென
நம்புகிறேன்!
நானென்ன ஆண்தானே, பெண்கள்
நிலையறிந்தோம்
ஏனென்று கேட்குமுன்னே தற்கொலை
செய்தார்கள்!
இருபாலாருமே இணைய வழியில் ஏமாறாதிருக்க
வருமெதிர் காலத்தில் ஏற்றம் காண
மாற்றம் கண்டு முன்னேறப் பாருங்கள்!

புதன், 30 ஜூன், 2021
தன்முனைக் கவிதைகள் (SELF -ASSERTIVE VERSES) - 2
சமகாலத்தில் பலரும் கவிதை எழுதுகிறார்கள். ஆனால், அவர்களைக் கவிஞர்கள் என்றழைப்பது குறைவு. ஏனென்றால், அவர்கள் கவிதைகள் போல எழுதிப்போட்டுத் தாம் கவிஞர்கள் எனப் பெயரிட முடியாது போயுள்ளனர்.
மரபுக் கவிதைகள் என்றால் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனப் பல யாப்பிலக்கணப்படி வரும். அதற்கு மேலே வசன கவிதைகள் (உரை நடையல்ல: கவிதை நடையாலானது), புதுக் கவிதைகள் (எதுகை, மோனை, உவமை, படிமம் எனப் பலவுண்டு) என்றவாறு பல கவிதை அமைப்புகள் இருக்கின்றன.
இவ்வாறான கவிதைகள் போல எழுதிப்போட்டு (அதாவது, அதன் இலக்கணக் கட்டமைப்பைப் பின்பற்றாது) இவ்வாறான கவிதைகள் எழுதினோம் என்றுரைத்தால் புலமை மிக்கவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வர். இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கிய நயம் இருந்தால் மட்டுமே புலமை மிக்கவர்கள் கவிதையாகக் கருத்தில் கொள்வர்.
இதனையும்
மீறிக் கவிதை நாட்டம் உள்ளவர்களுக்கு ஓர் எளிமையான கவிதைக் கட்டமைப்பை அறிமுகம்
செய்ய விரும்புகிறேன். இதற்கும் எளிமையான இலக்கணக் கட்டமைப்பு இருந்தாலும் கூட
கவிதை நாட்டம் உள்ளவர்களுக்கு இதுவோர் அடித்தளமாக (அத்திவாரமாக) இருக்குமென
நம்புகின்றேன். எளிமையாகக் கண்ணும் கருத்துமாக இதனை உள்வாங்கினால் எந்தக் கவிதை
எழுதவும் இக்கட்டமைப்பு ஊக்க மாத்திரையாக இருக்கும்.
இந்தக்
கவிதைக் கட்டமைப்பை தன்முனைக் கவிதைகள் (SELF - ASSERTIVE VERSES) என்றழைக்கிறார்கள்.
எட்டுச் சொல்களுக்குக் குறையாமலும் பன்னிரண்டு சொல்களுக்கு மேற்படாமலும் (8-12)
நான்கடிகளில் ஆக்கப்படுவதே இந்தக் கவிதைக் கட்டமைப்பு ஆகும்.
1. குறைந்தது
ஓரடியில் இரண்டு சொல்கள் வரலாம்.
2. அதிகமாக
ஓரடியில் மூன்று சொல்கள் வரலாம்.
3. மொத்தம்
நான்கு வரிகளில் எழுத வேண்டும்.
4. எளிமையான
சொல்களால் (அதாவது, தனிச் சொல்) எழுத வேண்டும்.
5. இரண்டு,
மூன்று சொல்கனை இணைத்துத் தனிச் சொல்லாகப் பாவிக்கக்கூடாது.
6. கற்பனை,
உவமையோடு மூன்று காலத்திலும் எழுதலாம்.
7. எதுகை,
மோனையும் வரக்கூடியதாக எழுதலாம்.
8. முதலிரு
அடிகளில் சொல்ல வேண்டிய செய்தி இருக்க வேண்டும். இரண்டாம் அடியில் திருப்பம்
இருக்க வேண்டும்.
9. அடுத்திரு
அடிகளும் அச்செய்தியை விளக்குவதாகவோ அச்செய்திக்கு முரணாகவோ அமையலாம். அதாவது
முதலிரு அடிகளும் சொல்லும் செய்தியை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும்.
10. இக்கவிதைக்குத் தலைப்பு, குறியீடுகள் இடத்தேவையில்லை. குறித்த சூழலைப் படம் பிடித்துக் காட்டியது போன்று கவிதையை அமைத்தால் சிறப்பு.
முத்தான பத்து ஒழுக்காற்று வேண்டுதலும் சிறந்த தன்முனைக் கவிதைகளைப் படைக்க உதவும். கவிதைகளுடன் தாங்களும் பிணைந்து இருந்தால் அதாவது தம்மை ஈடுபடுத்திக்கொண்டு கவிதை புனைந்தால் உங்களாலும் தன்முனைக் கவிதைகள் (SELF - ASSERTIVE VERSES) புனைந்து வெற்றி நடை போட முடியும்.
இந்தக் கவிதைக் கட்டமைப்பின் அடிப்படையில் தாங்கள் தெளிவு பெறச் சில எடுத்துக்காட்டுகளை முன்வைக்கின்றேன்.
1. பிள்ளைகள்
உள்ளம்
கல்லாகிப்
போச்சுது
பெற்றோர் உள்ளம்
பிள்ளைகளுக்காய் அழுகிறது
இரண்டு சொல்களாலான நான்கடிக் கவிதை இது. முதலிரு அடிகளுக்கு முரணாக அடுத்திரு அடிகளும் வந்தமைந்துள்ளது. ஓவ்வொரு வீட்டு நடப்பையும் படம் பிடித்துக் காட்டும் கவிதை இது.
2. வானம்
கறுத்துப் போயிட்டுது
மழை
வருவதற்கு அறிகுறியாம்
ஏழை வீட்டில்
குழப்பம்
ஓட்டைக் கூரையைச் சரிப்படுத்தவாம்
மூன்று சொல்களாலான நான்கடிக் கவிதை இது. முதலிரு அடிகளும் சொல்லும் செய்தி உண்மையானால் அடுத்திரு அடிகளும் அடுத்துச் செய்ய வேண்டியதை விளக்குகிறது. ஏழை வீட்டுத் துயரத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை இது.
3. உளநலம்
பேணினால்
நாளை நமதே
உழைப்பும்
சேமிப்பும் தான்
நாளையும் வாழ உதவுமே
இரண்டு சொல்களாலும் மூன்று சொல்களாலும் ஆக்கிய நான்கடிக் கவிதை இது. முதலிரு அடிகளுக்கு முரணாக அடுத்திரு அடிகளும் வந்தமைந்துள்ளது. உளநலம் இருந்தும் நாம் வாழ வருவாயும் சேமிப்பும் தேவை என்பதை உறுத்தும் கவிதை இது.
4. எல்லோரும்
படிக்கிறார்கள்
மக்களுக்குப்
பணியாற்றுவோர் சிலரே
மூளைசாலிகள்
வெளியேற்றம்
நாட்டிற்கு மனிதவளப் பற்றாக்குறையே
இரண்டு சொல்களாலும் மூன்று சொல்களாலும் ஆக்கிய நான்கடிக் கவிதை இது. முதலிரு அடிகளுக்கு முரணாக அடுத்திரு அடிகளும் வந்தமைந்துள்ளது. எங்கள் நாட்டு நிலைமையைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை இது.
மேலே நான்கு வகை எடுத்துக்காட்டுகள், அவை நான்கடியிலும் சொல்கள் கையாளும் ஒழுங்கை விளக்கி இருக்கும். இனி வரும் நான்கு கவிதைகளைப் படித்து, மேலதிகத் தெளிவைப் பெற்று நீங்களும் தன்முனைக் கவிதைகளில் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தலாம்.
கொரோனா
எச்சரிக்கை தான்
காற்றில்
பறக்கிறதே
மக்களும்
கவனிப்பதில்லை
கொரோனாவும் விரைவாகப் பரவுகிறதே
காதல் காதல்
என்று
தெருச்
சுற்றும் பிள்ளைகள்
பிள்ளைகள்
படிக்கிறார்கள் என்று
கனவு காணும் பெற்றோர்
குறைந்த
சொல்கள்
நிறைந்த
பொருளுள்ள கவிதைக்கு
இசையூட்டும்
சொல்லாடல்
கவிதையை வாசகர் சுவைக்கவே
எழுதுங்கள்
எழுதுங்கள்
நாட்டவர் நாலறிவைப்
படிக்கவே
சுவையான
எழுத்தாக்கம்
வாசகர் உள்ளத்தை ஈர்க்குமே
கவிதை புனைவதே எமது தொழில் என்போருக்கு, பாப் புனைவதில் நாட்டம் உள்ளோருக்கு இந்தத் தன்முனைக் கவிதைக் கட்டமைப்பு அறிமுகம் நன்மை தருமென நம்புகிறோம். சிறந்த தன்முனைக் கவிதைகளைப் படைக்க முத்தான பத்து ஒழுக்காற்று வேண்டுதலும் உதவும். இவ்வாறான எளிமையான கவிதைக் கட்டமைப்பின் பயிற்சியாக மேலுள்ள கவிதைகள் இருக்கும்.
மீள மீள வாசித்துப் புரிந்து தன்முனைக் கவிதைகள் புனைவதில் வெற்றி பெற்றால் ஏனைய கவிதைகள் புனைவது இலகுவாயிருக்கும். கொஞ்சம் கொஞ்சமாய் இலக்கணம் கற்று வசன கவிதை, புதுக் கவிதை, மரபுக் கவிதை, இசைப் பாடல் என நீங்களும் பாப் புனைவதில் முன்னேறலாம். நீங்களும் பாப் புனைவதில் முயன்று பெரிய கவிஞர்களாக மின்ன வேண்டுமென இலக்கிய உலகம் காத்திருக்கின்றது.
தன்முனைக்
கவிதைகள் (SELF
-ASSERTIVE VERSES) - 1
https://ypvnpubs.blogspot.com/2021/05/self-assertive-verses.html
மேலுள்ள இணைப்பைச் சொடுக்கி இதன் முதற் பகுதியைப் படித்துப் பயன்பெறுக.
