2016 இன் பின் தமிழுக்குப் புதுவரவாகத் தன்முனைக் கவிதைகள் (SELF -ASSERTIVE VERSES) பேசப்பட்டு வந்தாலும் தமிழ் வான் அவை 31/01/2021 அன்று நடாத்திய மெய்நிகர் (Zoom) நிகழ்வில் கவியருவி சாரதா.கே.சந்தோஷ் அவர்களின் உரையைக் கேட்ட பின்னரே நானும் இவற்றைக் கற்றுக்கொண்டேன்.
நான்கு வரிக் கவிதை என்றதும் CLERIHEW (ஹிளரிக்ஹியு
/ மகிழ்வூட் பா) எனும் ஆங்கில வடிவக் கவிதை தான்,
என் நினைவிற்கு வந்தது. ஆயினும், தெலுங்கில்
உலாவும் "நானிலு" வடிவக் கவிதையை ஒத்திருந்தாலும் இவை சற்று வேறுபட்டதென
உரையாளர் விளக்கிய பின்னரே எனக்குத் தெளிவு ஏற்பட்டது. இதனைத் தெலுங்கில் இருந்து
தமிழுக்கு இறக்குமதி செய்ய முயன்றவர்களில் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள்
முதன்மை பெறுகின்றார்.
தங்கள் முன்னேற்றக் கருத்துகளை அல்லது
தங்கள் உள்ளத்தில் பட்டுணர்ந்த கருத்துகளை நான்கு அடிகளில் (வரிகளில்) எட்டு
அல்லது பன்னிரு சீர்களில் (சொல்களில்) எழுதும் கவிதை வடிவத்தை தன்முனைக் கவிதைகள்
என உரையாளர் விளக்கினார். அதாவது எட்டுத் தொடங்கி பன்னிரு சொல்கள் வரக் கூடியதாக நான்கு
வரிகளில் இக்கவிதையை எழுதலாம் என்றார்.
முதலிரு அடிகளும் சொல்லும்
கருப்பொருளுக்கு முரணாகவோ விளக்குவதாகவோ தொடர்புபடுத்தி அடுத்திரு அடிகளையும் அமைத்தல்
இக்கவிதைக் கட்டமைப்பு என்றார். அடிக்கு (வரிக்கு) இரண்டு சீர் (சொல்) வீதம்
நான்கு அடிகளில் (வரிகளில்) எட்டு சீர் (சொல்) வரக்கூடியதாகவோ அடிக்கு (வரிக்கு)
மூன்று சீர் (சொல்) வீதம் நான்கு அடிகளில் (வரிகளில்) பன்னிரு சீர் (சொல்)
வரக்கூடியதாகவோ அமைவது அழகாய் இருக்கும் என்றார்.
கூடியவரை கூட்டுச் சொல்களைப் (இரண்டு, மூன்று சொல் இணைந்த சொல்களைப்)
பாவிக்காது எளிமையான சொல்களைக்
(தனிச் சொல்களைக்) கையாள வேண்டுமாம். இக்கவிதைக்குத் தலைப்பு இடத் தேவை இல்லையாம்.
இக்கவிதையில் குறியீடுகள் பயன்படுத்தத் தேவை இல்லையாம்.
ஆயினும், கவிதையைப் படிப்பவர் உள்ளத்தில்
மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வு மிக்க வரிகளால் சொல்ல வேண்டிய கருத்தினை
சிதைக்காமல் சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமாம். தேவைப்படும் போது தங்கள் கற்பனை
ஆற்றலுக்கு (கவித் திறனிற்கு) ஏற்ப எதுகை, மோனை, உவமைகளைப் பாவித்து
மூன்று காலங்களிலும் இக்கவிதையை எழுதலாமாம்.
வானமோ கறுத்தது
மழைக்கு அடையாளமாய்
ஏழையின் குடிசையில்
கூரையோ ஓட்டை
ஏழை வீட்டுக் குரல்கள்
காதைக் கிழித்து நுழைகிறது
மழை வந்தால் ஒழுகுமென
ஓட்டைக் கூரையைச் சீராக்கிறார்கள்
இவ்விரு எடுத்துக்காட்டும் கவியருவி
சாரதா.கே.சந்தோஷ்
அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து கற்றுக்கொண்டது.
காதல் பிழைத்தால்
சாதலை நாடுவது பிழையாம்
வாழ்க்கை பொன்னானது
வாழ்ந்து மகிழ்தலே சரியாம்
பணம் ஈட்டத் தானே
நாம் உழைக்கிறோம்.
மகிழ்வோடு வாழத் தானே
பணத்தைத் தேடுகிறோம்.
படிக்கப் படிக்க
அறிவு பெருகுமே
யாம் பெற்ற அறிவை
மாற்றாரும் பெற உதவலாமே
நேரம் எமக்காக மாறாது
படிக்கிற நேரத்தில படிக்கணுமே
செல்கின்ற இடங்களில்
கற்றோருக்குச் சிறப்பாமே
இந்நான்கு எடுத்துக்காட்டிலும் இரண்டு
சீர் (சொல்) கொண்ட அடிகளும் (வரிகளும்) மூன்று சீர் (சொல்) கொண்ட அடிகளும் (வரிகளும்)
மாறி மாறி வந்துள்ளன. எப்படியோ நான்கு அடிகளில் (வரிகளில்) எட்டுத் தொடக்கம்
பன்னிரு சீர்களில் (சொல்களில்) கவிதை அமைந்தால் போதும். சொற் சிக்கனம் கவிதைக்கு
அழகு என்பதை மறந்துவிட வேண்டாம்.
தெலுங்கு வடிவ நானிலு என்பதைத் தழுவி
தமிழில் தன்முனைக் கவிதைகள் எனப் பெயரிட்டு எழுதப்படும் குறுங்கவிதை "இது
தமிழ்க் கவிதை உலகில் புதியதோர் வடிவமைப்பு என்றும், கவிஞர்கள் எளிய
சொற்களால் மக்கள் மனதில் பதியும்படியான கருத்துகளை, தங்களை
முன்னிறுத்தி ஈடுபாடோடு எழுதப்படுபவை" என்று கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்
அவர்கள் நேர்காணல் ஒன்றில் கருத்துப் பகிர்ந்துள்ளார். (சான்று: https://sattappaarvai.blogspot.com/2019/11/blog-post_9.html)
இக்கவிதைக் கட்டமைப்பு, கற்பனை ஆற்றல் (கவித் திறன்) உள்ள
எல்லோருக்கும் இலகுவாக இருக்குமென நம்புகின்றேன். இதனை எல்லோரும் கையாளப் பழகினால், தமிழ் மொழியில் இக்கவிதைக்
கட்டமைப்பு ஊடாகச் சிறந்த இலக்கியங்களைப்
படைக்க முடியுமென நம்புகின்றேன். எனவே, இதனை
எல்லோருக்கும் அறிமுகம் செய்வோம். இனி உலகெங்கும் "தன்முனைக் கவிதைகள்" உலாவட்டும்.
*
மேலதீக அறிவினைப் பெறத் தன்முனைக் கவிதைகள் (SELF -ASSERTIVE VERSES) முகநூல்
குழுமத்தில் இணையுங்கள்.
https://www.facebook.com/groups/THANMUNAIKKAVITHAIGAL
இரண்டு சீர் நான்கு அடி வந்தால் வஞ்சித்துறை.
பதிலளிநீக்குமூன்று சீர் நான்கடி வந்தால் அது வஞ்சி விருத்தம் - இவை தமிழில் முன்னரே இருக்கும் பாவகைதாமே!
நன்றியை மறவேல்
என்றே சொல்லினர்
நன்றறி சான்றோர்
என்றும் எண்ணுவம்! - இது வஞ்சித்துறை.
அஞ்சிக்கு இல்லை அமைதி!
கெஞ்சிக்கு இல்லை உரிமை!
இஞ்சிக்கு இல்லை இனிப்பு!
எஞ்சிக்கு இல்லை போட்டி! - இது வஞ்சி விருத்தம்
தங்கள் கருத்தைப் பணிவோடு வரவேற்கிறேன்.
நீக்குஎனது பதிவில் சீர் (சொல்), அடி (வரி) பற்றி குறிப்பிட்டுள்ளேன். அசை, தளை பற்றிக் குறிப்பிடவில்லை. ஏனெனில், தன்முனைக் கவிதைகள் மரபு சாராதவை. புதுக்கவிதை போன்றது. 8-12 சொல்களை கையாண்டு பாப்புனையக் தான் அழைக்கின்றனர்.
தாங்கள் குறிப்பிட்ட வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம் எழுதுவோருக்கு எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை தெரிந்திருக்க வேண்டும். தன்முனைக் கவிதைகளுக்கு இவை தேவைப்படாது.
நம்மவர் பாவிக்கும் ஹைக்கூ, லிமரைக்கூ மூன்றடிக் கவிதைகள் தான். இவை மரபு சாராதவை.
மூன்றடி ஆசிரியப்பா, மூன்றடிச் சிந்தியல் வெண்பா இருக்கு. இவைக்கு எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை தெரிந்திருக்க வேண்டும்.
யாப்பு இலக்கணக் கட்டுக்குள் பாபுனைவது சிக்கல் என்போருக்கு, இவ்வாறான புதுவடிவங்கள் ஏற்புடையதாக இருக்கிறது.
நானும் மரபுக் கவிதையைத் தான் விரும்புகிறேன். எழுத விரும்பும் இளையோரை ஊக்கப்படுத்தவே இவ்வாறான புதிய கவிதைகளை அறிமுகம் செய்கிறேன்.
தன்முனைக்கவிதை பற்றி எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஎன்னையும் தன்முனைக்கவிதை ஈர்ததால் நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நன்றி நன்றி
கவிதை விளக்கத்துக்கு நன்றி
பதிலளிநீக்கு