Translate Tamil to any languages.

புதன், 30 ஜூன், 2021

தன்முனைக் கவிதைகள் (SELF -ASSERTIVE VERSES) - 2

சமகாலத்தில் பலரும் கவிதை எழுதுகிறார்கள். ஆனால், அவர்களைக் கவிஞர்கள் என்றழைப்பது குறைவு. ஏனென்றால், அவர்கள் கவிதைகள் போல எழுதிப்போட்டுத் தாம் கவிஞர்கள் எனப் பெயரிட முடியாது போயுள்ளனர்.

மரபுக் கவிதைகள் என்றால் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனப் பல யாப்பிலக்கணப்படி வரும். அதற்கு மேலே வசன கவிதைகள் (உரை நடையல்ல: கவிதை நடையாலானது), புதுக் கவிதைகள் (எதுகை, மோனை, உவமை, படிமம் எனப் பலவுண்டு) என்றவாறு பல கவிதை அமைப்புகள் இருக்கின்றன.

இவ்வாறான கவிதைகள் போல எழுதிப்போட்டு (அதாவது, அதன் இலக்கணக் கட்டமைப்பைப் பின்பற்றாது) இவ்வாறான கவிதைகள் எழுதினோம் என்றுரைத்தால் புலமை மிக்கவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வர். இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கிய நயம் இருந்தால் மட்டுமே புலமை மிக்கவர்கள் கவிதையாகக் கருத்தில் கொள்வர்.

இதனையும் மீறிக் கவிதை நாட்டம் உள்ளவர்களுக்கு ஓர் எளிமையான கவிதைக் கட்டமைப்பை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். இதற்கும் எளிமையான இலக்கணக் கட்டமைப்பு இருந்தாலும் கூட கவிதை நாட்டம் உள்ளவர்களுக்கு இதுவோர் அடித்தளமாக (அத்திவாரமாக) இருக்குமென நம்புகின்றேன். எளிமையாகக் கண்ணும் கருத்துமாக இதனை உள்வாங்கினால் எந்தக் கவிதை எழுதவும் இக்கட்டமைப்பு ஊக்க மாத்திரையாக இருக்கும்.

இந்தக் கவிதைக் கட்டமைப்பை தன்முனைக் கவிதைகள் (SELF - ASSERTIVE VERSES) என்றழைக்கிறார்கள். எட்டுச் சொல்களுக்குக் குறையாமலும் பன்னிரண்டு சொல்களுக்கு மேற்படாமலும் (8-12) நான்கடிகளில் ஆக்கப்படுவதே இந்தக் கவிதைக் கட்டமைப்பு ஆகும்.

1. குறைந்தது ஓரடியில் இரண்டு சொல்கள் வரலாம்.

2. அதிகமாக ஓரடியில் மூன்று சொல்கள் வரலாம்.

3. மொத்தம் நான்கு வரிகளில் எழுத வேண்டும்.

4. எளிமையான சொல்களால் (அதாவது, தனிச் சொல்) எழுத வேண்டும்.

5. இரண்டு, மூன்று சொல்கனை இணைத்துத் தனிச் சொல்லாகப் பாவிக்கக்கூடாது.

6. கற்பனை, உவமையோடு மூன்று காலத்திலும் எழுதலாம்.

7. எதுகை, மோனையும் வரக்கூடியதாக எழுதலாம்.

8. முதலிரு அடிகளில் சொல்ல வேண்டிய செய்தி இருக்க வேண்டும். இரண்டாம் அடியில் திருப்பம் இருக்க வேண்டும்.

9. அடுத்திரு அடிகளும் அச்செய்தியை விளக்குவதாகவோ அச்செய்திக்கு முரணாகவோ அமையலாம். அதாவது முதலிரு அடிகளும் சொல்லும் செய்தியை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும்.

10. இக்கவிதைக்குத் தலைப்பு, குறியீடுகள் இடத்தேவையில்லை. குறித்த சூழலைப் படம் பிடித்துக் காட்டியது போன்று கவிதையை அமைத்தால் சிறப்பு.

முத்தான பத்து ஒழுக்காற்று வேண்டுதலும் சிறந்த தன்முனைக் கவிதைகளைப் படைக்க உதவும். கவிதைகளுடன் தாங்களும் பிணைந்து இருந்தால் அதாவது தம்மை ஈடுபடுத்திக்கொண்டு கவிதை புனைந்தால் உங்களாலும் தன்முனைக் கவிதைகள் (SELF - ASSERTIVE VERSES)  புனைந்து வெற்றி நடை போட முடியும்.

இந்தக் கவிதைக் கட்டமைப்பின் அடிப்படையில் தாங்கள் தெளிவு பெறச் சில எடுத்துக்காட்டுகளை முன்வைக்கின்றேன்.

1. பிள்ளைகள் உள்ளம்

கல்லாகிப் போச்சுது

பெற்றோர் உள்ளம்

பிள்ளைகளுக்காய் அழுகிறது

இரண்டு சொல்களாலான நான்கடிக் கவிதை இது. முதலிரு அடிகளுக்கு முரணாக அடுத்திரு அடிகளும் வந்தமைந்துள்ளது. ஓவ்வொரு வீட்டு நடப்பையும் படம் பிடித்துக் காட்டும் கவிதை இது.

2. வானம் கறுத்துப் போயிட்டுது

மழை வருவதற்கு அறிகுறியாம்

ஏழை வீட்டில் குழப்பம்

ஓட்டைக் கூரையைச் சரிப்படுத்தவாம்

மூன்று சொல்களாலான நான்கடிக் கவிதை இது. முதலிரு அடிகளும் சொல்லும் செய்தி உண்மையானால் அடுத்திரு அடிகளும் அடுத்துச் செய்ய வேண்டியதை விளக்குகிறது. ஏழை வீட்டுத் துயரத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை இது.

3. உளநலம் பேணினால்

நாளை நமதே

உழைப்பும் சேமிப்பும் தான்

நாளையும் வாழ உதவுமே

இரண்டு சொல்களாலும் மூன்று சொல்களாலும் ஆக்கிய நான்கடிக் கவிதை இது. முதலிரு அடிகளுக்கு முரணாக அடுத்திரு அடிகளும் வந்தமைந்துள்ளது. உளநலம் இருந்தும் நாம் வாழ வருவாயும் சேமிப்பும் தேவை என்பதை உறுத்தும் கவிதை இது.

4. எல்லோரும் படிக்கிறார்கள்

மக்களுக்குப் பணியாற்றுவோர் சிலரே

மூளைசாலிகள் வெளியேற்றம்

நாட்டிற்கு மனிதவளப் பற்றாக்குறையே

இரண்டு சொல்களாலும் மூன்று சொல்களாலும் ஆக்கிய நான்கடிக் கவிதை இது. முதலிரு அடிகளுக்கு முரணாக அடுத்திரு அடிகளும் வந்தமைந்துள்ளது. எங்கள் நாட்டு நிலைமையைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை இது.

மேலே நான்கு வகை எடுத்துக்காட்டுகள், அவை நான்கடியிலும் சொல்கள் கையாளும் ஒழுங்கை விளக்கி இருக்கும். இனி வரும் நான்கு கவிதைகளைப் படித்து, மேலதிகத் தெளிவைப் பெற்று நீங்களும் தன்முனைக் கவிதைகளில் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தலாம்.

கொரோனா எச்சரிக்கை தான்

காற்றில் பறக்கிறதே

மக்களும் கவனிப்பதில்லை

கொரோனாவும் விரைவாகப் பரவுகிறதே


காதல் காதல் என்று

தெருச் சுற்றும் பிள்ளைகள்

பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று

கனவு காணும் பெற்றோர்


குறைந்த சொல்கள்

நிறைந்த பொருளுள்ள கவிதைக்கு

இசையூட்டும் சொல்லாடல்

கவிதையை வாசகர் சுவைக்கவே


எழுதுங்கள் எழுதுங்கள்

நாட்டவர் நாலறிவைப் படிக்கவே

சுவையான எழுத்தாக்கம்

வாசகர் உள்ளத்தை ஈர்க்குமே

கவிதை புனைவதே எமது தொழில் என்போருக்கு, பாப் புனைவதில் நாட்டம் உள்ளோருக்கு இந்தத் தன்முனைக் கவிதைக் கட்டமைப்பு அறிமுகம் நன்மை தருமென நம்புகிறோம். சிறந்த தன்முனைக் கவிதைகளைப் படைக்க முத்தான பத்து ஒழுக்காற்று வேண்டுதலும் உதவும். இவ்வாறான எளிமையான கவிதைக் கட்டமைப்பின் பயிற்சியாக மேலுள்ள கவிதைகள் இருக்கும்.

மீள மீள வாசித்துப் புரிந்து தன்முனைக் கவிதைகள் புனைவதில் வெற்றி பெற்றால் ஏனைய கவிதைகள் புனைவது இலகுவாயிருக்கும். கொஞ்சம் கொஞ்சமாய் இலக்கணம் கற்று வசன கவிதை, புதுக் கவிதை, மரபுக் கவிதை, இசைப் பாடல் என நீங்களும் பாப் புனைவதில் முன்னேறலாம். நீங்களும் பாப் புனைவதில் முயன்று பெரிய கவிஞர்களாக மின்ன வேண்டுமென இலக்கிய உலகம் காத்திருக்கின்றது.

தன்முனைக் கவிதைகள் (SELF -ASSERTIVE VERSES) - 1

https://ypvnpubs.blogspot.com/2021/05/self-assertive-verses.html

மேலுள்ள இணைப்பைச் சொடுக்கி இதன் முதற் பகுதியைப் படித்துப் பயன்பெறுக.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!