Translate Tamil to any languages.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

எண்ணியதெல்லாம் எழுதுங்கள்...


எழுதுவோன்
தன்னைப் பற்றி
தான் விரும்பியவாறு எழுதலாம்
ஆனால்,
அடுத்தவரைப் பற்றி
எதுவானாலும் எழுத முடியாதே!
எழுதுவோன்
எவரைப் பற்றி எழுதாவிட்டாலும்
வீட்டையும் ஊரையும் நாட்டையும்
கெடுக்கின்ற ஆட்களைப் பற்றி
எப்படி வேணுமென்டாலும் எழுதலாம்
ஆனால்,
தவறு செய்யாதோர் உள்ளம்
நோகும்படி எழுத முடியாதே!
எழுதுவோன்
சூழலைப் பார்த்து
கண்டதையும் எழுதிப் பயனில்லையே...
சூழலிலுள்ள பொட்டுக்கேட்டை
சூழல் சீர் கெடுவதை
சூழலைச் சீர் கெடுப்போரை
சூழலை மேம்படுத்தும் வழிகளை
எண்ணி எண்ணி எழுதலாமே!
எழுதுவோன்
தான் கண்ட ஆட்களின்/சூழலின்
உணர்ச்சி வெளிப்பாட்டை
அப்படியே எழுதினால் அழகு தான்
ஆனால்,
அவை பெறுமதி அற்றதே...
எடுத்துக்காட்டாக
தவறான வழிக்கு இட்டுச் செல்லும்
எந்த உணர்வுகளை எழுதினாலும்
எவரும் மதிக்கமாட்டார்களே!
எழுதுவோன்
உணர்வுகளால் வரும் கேட்டையோ
உணர்வுகளால் விளைந்த அறுவடையையோ
எழுதினால் தானே
நம்மாளுகளுக்கு - அவை
வழிகாட்டலாக அமையும் என்பேன்!
எழுதுவோன்
எண்ணியதெல்லாம்
எண்ணி எண்ணி எழுதலாம்
ஆனால்,
அவை பிறருக்கு நன்மை அளிக்கணுமே...
எடுத்துக்காட்டாகப் பாரும்
வாசகர்/வாசிப்போர்
பொழுதுபோக்காகப் படிக்க உதவணும்
வாசகர்/வாசிப்போர்
படிக்கும் போது களிப்படைய உதவணும்
வாசகர்/வாசிப்போர்
படித்தால் உள்ளம் நிறைவடைய வேணும்
வாசகர்/வாசிப்போர்
படித்தால் பின்பற்ற ஏதும் இருக்கணும்
வாசகர்/வாசிப்போர்
படிக்கையில் சிக்கல்களுக்கு தீர்வுகள் இருக்கணும்
வாசகர்/வாசிப்போர்
படிக்கையில் பலருக்குப் பாடமாக அமையணும்
வாசகர்/வாசிப்போர்
படிக்கையில் பலருக்கு வழிகாட்டலாக அமையணும்
எண்ணியதெல்லாம் எழுதுங்கள்- அவை
வீட்டுக்கும் ஊருக்கும் நாட்டுக்கும்
நல்லனவெல்லாம் கற்றுத்தர உதவட்டுமே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!