Translate Tamil to any languages.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

தமிழ் என்ன புளி நெல்லியா?


பிரெஞ்சுக் காரன்,
டொச்சுக் காரன்,
ஆங்கிலக் காரன்
எல்லோரும் தமிழ் பேசுறாங்க
நம்மாளுகள் மட்டும்
தமிழ் பேச மாட்டேங்கிறாங்க...

அமெரிக்காவிலும்
மாயன் இன முன்னோர்கள்
தமிழரின் வழித்தோன்றலாம்
சான்றுக்கு
மாயன் எழுத்துகளும்
தமிழ் எழுத்துகளும்
ஒன்றுபடுகிறதாம்...

ஆபிரிக்காவிலும் ஐரோப்பாவிலும்
சோவியத் உருசியாவிலும்
சீனக் கம்யூனிசக் குடியரசிலும்
முன்னை நாளில்
தமிழ் இருந்ததாகச் சான்றிருக்காம்...

ஆசியா தானாம்
தமிழுக்குத் தாய் மண்ணாம்
ஆசிய நாடுகளான
தமிழின் தாய் நாடாம்
பாரத(இந்திய) நாடு,
பாரத(இந்திய) நாட்டின் பிள்ளையாம்
ஈழ(இலங்கை) நாடு,
பாரத(இந்திய) நாட்டின் பேரப் பிள்ளைகளாம்
சிங்கை(சிங்கப்பூர்), மலே(மலேசியா) நாடுகள்
எங்கும் தமிழ் வாழ்வதாய் கூறிடினும்
கலப்பு/கூழ் (சாம்பாறு) கறி போல
பல மொழி கலந்து தமிழ் பேச
எப்படித்தானுங்க தமிழ் வாழும்?

தமிழ் என்ன புளி நெல்லியா?
தமிழ் பேச வாய் புளிக்கிறதா?

புளி நெல்லி கடிச்சு உண்டாலும் உண்டு
உண்ட பின் நீர் குடிச்சால்
இனிக்குமடா அடி நாக்கு!

படிக்கப் புளிக்கும் தமிழ் தானடா
பல்லைக் கடித்துப் படித்த பின்
அகத்தியனின் இலக்கணமும்
தொல்காப்பியனின் இலக்கண விளக்கமும்
வள்ளுவனின் குறளும் கம்பனின் பாட்டும்
படிக்கப் படிக்கத் தெரியுமடா
இனிக்கிறது தமிழென இனிக்கும் தமிழை!

தமிழைத் தேன்தமிழென
முன்னோர்கள் முன்மொழிந்தது
ஏன் தெரியுமா?
இனிக்கும் தமிழ்
தேன் போன்று தித்திக்கும் என்றே!

திக்கெட்டும் வாழும் தமிழா!
எனக்கெட்டிய தமிழை வைத்து
உனக்குப் பாபுனையப் படிப்பிப்பேன் - நீ
எனக்கு
உலகெங்கும் உயிரோடு தமிழ் வாழ
உன் பாவினில் எடுத்து விடு
கலப்பு/கூழ் (சாம்பாறு) கறி போலல்லாது
பிறமொழி கலவாத் தனித் தமிழை!

நம் தமிழ் வாழ்ந்தால் தானே
நாம் தலை நிமிர்ந்து
நாம் தமிழரென வாழ்வோம்
இவ்வுலகில்...!
திக்கெட்டும் வாழும் தமிழா!
கதைகள், கட்டு உரைகள்
நாடக, திரைக் கதை உரையாடல்
எல்லாம் எழுத வைப்பேன்
நான் - நீ
எனக்கு
உன் எழுத்தினில் புகட்டி விடு
உலகெங்கும் இனிக்கும் தமிழை!

2 கருத்துகள் :

  1. தேன்நெல்லி நாபுளித்துப் பின்இனிக்கும்! தேனான
    வான்வந்த நற்றமிழோ வாய்பேச – தேன்ஊறும்!
    தாழ்வேது நம்தமிழைக் கற்றவர்க்கு என்றோதும்
    யாழ்பாணர் யாப்பு சிறப்பு!


    --

    பதிலளிநீக்கு
  2. தாழ்வேது நம்தமிழைக் கற்றவர்க்கு என்றோதிய
    பெரியோருக்கு
    தங்கள் பாராட்டைச் சமர்ப்பணம் செய்கிறேன்.
    இவ்வண்ணம்
    தமிழெனும் கடலை நீந்திக் கடக்க முயலும்
    சின்னப்பொடியன் யாழ்பாவாணன்.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!