புதிய பாவலர்களே!(கவிஞர்களே!)
நீங்கள்
கவிதை எழுதும் போது;
கவிதை வரிகளை
ஒடித்து முறித்து எழுதுவதைப் பார்க்கிறேன்.
"எடுத்துக்காட்டாக
கொதிக்கும் வெயிலில் நடந்து
கொண்டு தண்ணீருக்கும்
அலைந்து
கொண்டே நானும்
அக்கரைக்குப் போறேனே!"
இதனைப் பார்த்தால்
கவிதை இல்லை என்றே சொல்லலாம்.
ஒடித்து முறித்த வரிகளை
ஒரே வரியாக ஒழுங்குபடுத்தினால்
சிறந்த உரைநடையாகக் கருதமுடியும்.
பாவா(கவிதையா)க இதனை மாற்ற முயல்வோமே...
"கொதிக்கும் வெயிலில் நடந்து கொண்டு
தண்ணீருக்கும் அலைந்து கொண்டே
நானும்
அக்கரைக்குப் போறேனே!"
சொற்களை மாற்றாமல்
வரிகளில் மாற்றம் செய்ததும்
கவிதையாக மாறிய நுட்பம் என்ன?
ஆமாம்,
ஒவ்வொரு வரியிலும் உணர்வு முட்டுகிறதே!
அதாவது,
ஒவ்வொரு வரியிலும் ஒரு வீச்சு
அல்லது
வெளிப்படுத்தும் ஒரு செயல் தென்படுகிறதே!
புதிய பாவலர்களே!(கவிஞர்களே!)
உங்கள் கவிதைகளில் - இந்த
நுட்பத்தைக் கையாளுங்களேன்!
உங்கள் பா(கவிதை)
மேலும் சிறக்க...
நீங்கள்
எதுகை, மோனை வரக் கவிதை ஆக்கலாமே!
இரண்டு சீரின்(சொல்லின்) முதலெழுத்து
ஒரே எழுத்தாகவோ அதற்கொத்த இனவெழுத்தாகவோ
பொருந்தி வருதல் மோனை ஆகுமே!
எடுத்துக்காட்டாக
'மல்லிகாவின் மூக்கில் மின்னியது மூக்குமின்னியே!'
இவ்வடியில் "ம்" குடும்ப எழுத்துகள்
ஒவ்வொரு சீரின்(சொல்லின்) முதலெழுத்தாக அமைந்து
மோனையாக வந்துள்ளதே!
இரண்டு சீரின்(சொல்லின்) இரண்டாம் எழுத்து
ஒரே எழுத்தாகவோ அதற்கொத்த இனவெழுத்தாகவோ
பொருந்தி வருதல் எதுகை ஆகுமே!
எடுத்துக்காட்டாக
'படித்து முடித்தால் மீட்டுப்பார்!'
இவ்வடியில்
படித்து, முடித்தால் ஆகிய சீர்களில்(சொல்களில்)
குறிலடுத்து'டி' அமைந்து எதுகையாக வந்துள்ளதே!
குறிலடுத்து அல்லது நெடிலடுத்து
எதுகை அமைதலே சிறப்பாகுமே!
எதுகை, மோனை வைத்து
புதுக்கவிதை ஒன்று எழுதுவோமா?
அப்படியாயின்
ஒரு சூழலை நினைவில் மீட்போம்...
ஓராண்
ஒரு பெண்ணை
உள்ளத்தில் நினைத்ததும் - அவன்
எண்ணத்தில் தோன்றிய
பாவை(கவிதையை)ப் பாருமிங்கே...
"அன்பே! அழகே!
என்னைப் பார்த்ததும்
என்ன நினைத்தாயோ
எனக்குத் தெரியாது - ஆனால்
உனக்குத் தெரியாமலே
உன்னை நான் விரும்புகிறேன்...
உன்னால் முடிந்தால் - நீ
என்னை விரும்புவாயா!"
புதிய பாவலர்களே!(கவிஞர்களே!)
இனிவரும் காலங்களில்
நீங்கள் கவிதை வரிகளை
ஒடித்து முறித்து எழுதாமல்
உணர்வைச் சுட்டும்; செயலை வெளிப்படுத்தும்;
வீச்சான வரிகளாக எழுதுங்களேன்!
பொருத்தமான இடத்தில்
எதுகை, மோனை பாவிக்கலாமே...
எதுகை, மோனை பாவிக்கையில்
கவிதைக்கு ஓசை நயம் பிறக்குமே!
புதிய பாவலர்களே!(கவிஞர்களே!)
தங்கள் பாக்(கவிதை)களில் காணப்படும்
சிறு தவறுகளைத் திருத்தினால் கூட
பா(கவிதை) உலகில்
உங்களை வெல்ல எவர் வருவார்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!