Translate Tamil to any languages.

புதன், 14 ஏப்ரல், 2021

பொறுக்கி யாழ்பாவாணனின் பகிர்விது

 


 

"உலகத்தைத் திருத்த விரும்பினால் முதலில் உன்னை திருத்திக்கொள். பின்பு உலகம் தானாகவே திருந்தும்" என்றும் "உன்னைத் திருத்திக் கொள் மக்களாயம் (சமூகம்) தானாகவே திருந்தி விடும்" என்றும் சுவாமி விவேகானந்தர் சொன்னதாகப் பின்பற்றப்படும் கருத்திது.

 

"மற்றவர்களின் தவறுகளைப் பேசிக்கொண்டு இருப்பது தான் நமது பெருந்தவறு." என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னதாகப் பின்பற்றப்படும் கருத்திது.

 

இவற்றைப் பொறுக்கிய சின்னப்பொடியன் யாழ்பாவாணன், தனது பாவண்ணத்தில் தன் கைவண்ணத்தைக் காட்டியுள்ளார்.

 

பிறர்தவறைத் தான்பொறுக்கி நீபரப்பி நீகெடுவாய்

உன்தவறைத் தான்திருத்தி வாழ்

(இரு விகற்பக் குறள் வெண்பா)

 

உன்தவறைத் தான்திருத்து உன்னையே பார்த்து

பிறர்தம்மை மாற்றுவார் காண்

(இரு விகற்பக் குறள் வெண்பா)

 

பிறர்தான் திருந்திச் செயல்படப் பார்க்க

பிறர்பிழை தான்பிடிக்க வேண்டாம் - பிறருக்கு

நன்மைசெய்யின் தங்கள் பிழையைத் திருத்தினால்

நன்மையே வந்திடும் காண்.

(இரு விகற்ப நேரிசை வெண்பா)


சமகாலத்தில் பலர் எழுதிய கவிதைகளில் பொறுக்கிய பொருள் குறித்து புனைந்த பாவிது.

பேசப் பேசப் பேசலாம் இனிக்கவே

கேட்கக் கேட்கக் கேட்கலாம் குரலே

பார்க்கப் பார்க்கப் பார்க்கலாம் அழகே

நினைக்க நினைக்க நினைக்கலாம் உன்னையே!

                      (நிலை மண்டில ஆசிரியப்பா)

இப்படித்தான் எங்கெங்கோ பொறுக்கி எடுத்து ஆக்கிய பாக்களைத் தொகுத்து அச்சு நூலாக "யாழ்பாவாணன் கவிதைகள்" வெளிவந்திருக்கிறது. இந்திய விலை: 130/= இலங்கை விலை: 450/=

 


இந்நூலைப் பெற விரும்புவோர் தங்கள் முழுப்பெயர், முகவரியை (எண்: 0094703445441) signal, telegram, whatsapp, viber, imo ஊடாகவோ yarlpavanang1@gmail.com ஊடாகவோ அனுப்பினால் கடிதமூலம் அனுப்பிவைக்கப்படும்.

 

எனது வலைப்பூ, மின்னூல் வெளியீடு, இலக்கியப் போட்டிகள் நடாத்துவதோடு teamlink செயலி ஊடாக இணையப் பயிலரங்கம், கவிதை அரங்கேறும் நேரம், இணையப் பட்டிமன்றம் ஆகியவற்றைத் தொடருகிறேன். இந்தச் சித்திரைப் புத்தாண்டில் இருந்து நீங்கள் முன்னெடுக்கும் எல்லாச் செயல்களும் வெற்றி பெற எனது வாழ்த்துகளைப் பகிருகிறேன். இணையம் வழியே நற்றமிழைப் பேண உழைக்கும் உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.

 

சனி, 27 மார்ச், 2021

தூது சென்றோர் துணை சேர்ந்தனர்!

 

பொன்னானவளைத் தான்

கண்ணானவன் தான்

காதலிக்கத் தான்

வள்ளியைத் தான்

தூது விட்டான்!

கண்ணானவனைத் தான்

பொன்னானவள் தான்

காதலிக்கத் தான்

வெள்ளையனைத் தான்

தூது விட்டாள்!

தூது சென்றோர் தான்

தெருக்களில் சந்திக்கையில் தான்

தூதுத் தாள்களைத் தான்

படித்துப் படித்துத் தான்

தமக்குள்ளே பகிரத் தான்

உள்ளத்திலே காதல் பிறந்ததாம்!

கண்ணானவன் தான்

பொன்னானவள் தான்

தூதனுப்பாமல் தான்

நேருக்கு நேரே தான்

சந்தித்து இருந்தால் தான்

உள்ளம் திறந்து தான்

கதைத்து இருந்தால் தான்

காதல் மலர்ந்து இருக்குமே!

காதலைச் சொல்லத் தூதுவிடவே

தூதுபோன ஆள்கள் தாம் காதலித்தே

மணமுடிக்கின்ற நாளில் வந்தாங்கே

மணமக்களை வாழ்த்தும் போதுதான்

தூதனுப்பிய ஆள்கள் தம்நிலையை

எண்ணி எண்ணி நொந்ததை

மொழிபெயர்க்க முயன்றவேளை

உள்ளத்திலே காதல் பிறந்ததாம்!

பிறர் நிலையைச் சொல்லவோ

தம் நிலையைச் சொல்லவோ

காதல் பிறந்தாலும் செயற்கையே

பழகப் பழகச் செயலாலே

உள்ளத்து இருப்பு வெளிப்பட

விருப்பச் செயல் மேலோங்க

சொல்லாமலே காதல் பிறக்குமாம்

அந்தக் காதல் தான்

எந்தக் காலத்திலும் அழியாத

இயற்கைக் காதல் காண்!

 


புதன், 17 மார்ச், 2021

ஓர் நகைச்சுவைக்காக...

ஓர் உண்மையைக் கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ எழுதினால் நகைச்சுவை பிறக்குமாம். அப்படியொரு முயற்ச்சி இது. இப்படி நீங்களும் முயன்று பார்க்கலாம்.
Honda Navi என்ற உந்துருளி, எனது 4 அடி 4 அங்குலம் உயரத்திற்கு அளவாக இருக்குமாம். நல்ல பொருத்தமாக இருக்கும் அதனை எவரும் விற்க விரும்பி இருந்தால் 0777384415 இற்குச் சொல்லுங்க?

ஏன்டா? சின்னப் பொடியா, Bajaj Platina 100cc ஆல புரண்டு விழுந்து கையைக் காலை முறிச்சுப் போட்டியோ? உடைச்சுப் போட்டியோ? அழகாய் விளம்பரம் போட்டிருக்கிறாய்! இல்லாட்டி, விளம்பரத்தில் பட்டயப் படிப்புப் படிச்சியோ?

கடவுளே! நானொன்றும் படிக்காதவன். காதலி விரும்பி வேண்டித் தந்த உருளி உயர்ந்து போச்சு. அதால அடிக்கடி. விழுந்து புரள்வதால் கைகால் முறிஞ்சு போகுது. இனி, கைகால் முறிஞ்சால் ஒட்ட இடமில்லையாம் ஒட்டகப்புலத்துப் பரிகாரி சொல்லிப்போட்டார்.

நூற்றுக் கணக்கான தடவை என்ர கைகாலுடைய, முறியத் துண்டாட ஒட்டித் தந்த கடவுள் அவர். இனி அவராலே ஒட்ட முடியாத என்ர கைகாலுக்கு மருந்து, கால் எட்டக்கூடிய சின்ன உந்துருளி தான். எங்கேனும் இருந்தால் பார்த்துச் சொல்லுங்கோவேன்.

காதலியேன் உயர்ந்த உருளியை வேண்டித் தந்தவள்? அவள் விரும்பினால் தரைதட்டும் கட்டை உருளி வேண்டித் தந்திருக்கலாமே! 

அவள் ஏழடி, நான் நாலடி, தொங்கித் தொங்கி உந்துருளி ஓடினால் உயர்ந்திடுவேன் என்றுதான் உயரமானதை விரும்பி வேண்டித் தந்தாள்! அவள் விரும்பியதிற்கு இணங்காட்டி, என்னைக் காதலிக்க மாட்டாளே! 

கையைக் காலை உடைச்சு உடைச்சு, ஒட்டி ஒட்டி ஒட்டகப்புலத்தார் இனி ஒட்ட இயலாது என்றதுமே அறிவு வந்தது! எவளோ ஒருவள் காதலிப்பாள் என்று உன்ர கைகாலை உடைத்து நொருக்கப் போன நீயல்லவா முட்டாள்! 

உதைவிட நீ விரும்பும் உன்ர காதலி கனவூர்திக்குச் சுமை ஏற்றி இறக்கினால் கூட ஏழடி நாலடியாகக் குறைந்திருக்குமே!

உயரங்கள் பொருந்தினால் தான்
காதல் மலருமா? 
உள்ளங்கள் பொருந்தினால் 
காதல் மலராதோ? 

இதைப் போய் காதலியிடம் கேட்டால், உள்ள உந்துருளியைக் கூடப் பறித்துப் போட்டு என்னைக் கழட்டிப் போடுவாளே! பிறகு நான் தனிக்கட்டையாகிப் போயிடுவேனே! 

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

பொங்கலன்று பயணம்


தை பிறந்தால் வழி பிறக்குமென

தை பிறக்கவும் ஆளுக்காள்

புதிய பயணத்தில் இறங்குவினம்!

புதிய நெல்லுக் குற்றித் தான்

புத்தரிசி உருவாக்க உதவிய பகலவனுக்கு

புத்தரிசிப் பொங்கல் பொங்கிப் படைத்து

உண்டு களித்துப் பின்னர் தான்

கண்டு பிடித்த புதிய பயணத்தில்

ஆள் ஆளாய் பயணிக்கக் காண்பீர்!

ஆள் ஆளாய் பயணிக்கும் ஆள்கள்

உண்ட பொங்கல் வயிற்றினுள் சீரடைய முன்

கண்ட பொங்கலும் தங்கட பொங்கலும்

எப்படியென்று எடைபோட்டுப் பார்ப்பினம்!

எப்படியோ நம்வீட்டுப் பொங்கல் நன்றுதான்

எத்தனை ஆள்கள் வீட்டில பொங்கினவை?

எத்தனை ஆள்கள் வீட்டில உழைப்பில்லை?

எத்தனை ஆள்கள் வீட்டில பட்டினியாம்?

எத்தனை ஆள்களுக்கு நெல்வயல் இல்லை?

எத்தனை ஆள்களுக்கு நெல்விளைச்சல் இல்லை?

எத்தனையோ பொங்காத வீட்டாரும்

தண்டித் தின்று வாழும் நிலை கண்டீரோ?

தண்டித் தின்னப் பொங்கல் ஈயாதார் எவரோ?

தண்டித் தின்ன வழியற்றோர் சாவினைக் கண்டீரோ?

மகிழ்வற்ற மாற்றார் வீட்டுப் பொங்கல் கண்டீரோ?

மகிழ்வற்ற பொங்கல், புத்தாண்டு மலிவாம் கண்டீரோ?

நாடும் வழமைக்குத் திரும்பவில்லை - போதாக்குறைக்கு

நாட்டில இயற்கையும் ஒத்துழைக்க மறுத்தால்

நம்மாளுங்க எப்படித் தான் பொங்குவாங்க...?

நம்மாளுங்க நிலையை நாம் பயணிக்கும் போதே

கண்டபின் கண் கலங்குவதும் காண்பீரே!

கண்டபின் இயன்றதை உதவினாலும் கூட

நம்மாளுங்க மகிழ்வின்றி வாழுவதைப் பாருங்க...

நம்மாளுங்க எல்லோருக்கும் எப்பதான் விடியுமோ?

தை பிறந்தால் வழி பிறக்குமென

தை பிறக்கவும் ஆளுக்காள் பயணித்தாலும்

பயணிக்கும் போது பார்த்தவை கண்ணுக்குள்ளே

கண்ணுக்குள்ளே நுழைந்தவை உள்ளத்தில் உருளுதே!

எந்தத் தை பிறக்க - நம்மாளுங்களுக்கு

அந்த மகிழ்ச்சிக்கான வழி பிறக்கும்?

@ 2021 தைப்பொங்கல் நாளையொட்டி ZOOM இடம்பெற்ற கவிதா நிகழ்வொன்றில் வாசித்த பதிவிது.


திங்கள், 8 பிப்ரவரி, 2021

நம்பிக்கை

தங்களைப் பற்றிச் சொன்ன பிறகும்

எங்களைப் பற்றி விசாரிக்கும் ஆளை

உங்களுக்குத் தெரியுமா என்று கேட்போம்

எங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்று!

தங்களைப் பற்றி ஏதும் சொல்லாமல்

எங்களைப் பற்றி விசாரிக்கும் ஆளை

உங்களுக்கு எப்படித் தெரியும்? - அவர்களால்

எங்களுக்குச் சிக்கல் வரலாம் காண்!

நம்பிக்கை தானொருவர் நம்பிக்கை வைக்கத்தான்

நம்பிக்கை தந்திடும் காண்!

                 (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

 

நம்பக்கூடியவராக வெளிப்படுத்தும் ஒருவரை

நம்பத்தான் முடிந்தாலும் கூட - அவர்

நம்பக்கூடியவராக நடிக்கவில்லை என்றபின்

நம்பாமல் தான் இருக்க முடியுமா?



உள்ளத்தில் நொந்தபின் உள்ளத்தை நோகடிக்க

உள்ளத்தில் எண்ணாமை நன்று

                (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

உன்னுள்ளம் நொந்த பின்னாவது

மாற்றார் உள்ளத்தை நோகடிக்க

உன்னுள்ளத்தில் எண்ணாமல் இருப்பது நன்று.

உள்ளத்தை நோகடிப்பது

உள்ளப் புண்ணைத் தோற்றுவிக்கும்

உள்ளம் நொந்த பின்னாவது உணர்.