தை பிறந்தால் வழி பிறக்குமென
தை பிறக்கவும்
ஆளுக்காள்
புதிய பயணத்தில்
இறங்குவினம்!
புதிய நெல்லுக்
குற்றித் தான்
புத்தரிசி உருவாக்க
உதவிய பகலவனுக்கு
புத்தரிசிப் பொங்கல்
பொங்கிப் படைத்து
உண்டு களித்துப்
பின்னர் தான்
கண்டு பிடித்த புதிய பயணத்தில்
ஆள் ஆளாய் பயணிக்கக்
காண்பீர்!
ஆள் ஆளாய் பயணிக்கும்
ஆள்கள்
உண்ட பொங்கல்
வயிற்றினுள் சீரடைய முன்
கண்ட பொங்கலும் தங்கட
பொங்கலும்
எப்படியென்று
எடைபோட்டுப் பார்ப்பினம்!
எப்படியோ நம்வீட்டுப்
பொங்கல் நன்றுதான்
எத்தனை ஆள்கள்
வீட்டில பொங்கினவை?
எத்தனை ஆள்கள்
வீட்டில உழைப்பில்லை?
எத்தனை ஆள்கள்
வீட்டில பட்டினியாம்?
எத்தனை ஆள்களுக்கு
நெல்வயல் இல்லை?
எத்தனை ஆள்களுக்கு
நெல்விளைச்சல் இல்லை?
எத்தனையோ பொங்காத
வீட்டாரும்
தண்டித் தின்று
வாழும் நிலை கண்டீரோ?
தண்டித் தின்னப்
பொங்கல் ஈயாதார் எவரோ?
தண்டித் தின்ன வழியற்றோர்
சாவினைக் கண்டீரோ?
மகிழ்வற்ற மாற்றார்
வீட்டுப் பொங்கல் கண்டீரோ?
மகிழ்வற்ற பொங்கல், புத்தாண்டு மலிவாம்
கண்டீரோ?
நாடும் வழமைக்குத்
திரும்பவில்லை - போதாக்குறைக்கு
நாட்டில இயற்கையும்
ஒத்துழைக்க மறுத்தால்
நம்மாளுங்க எப்படித்
தான் பொங்குவாங்க...?
நம்மாளுங்க நிலையை
நாம் பயணிக்கும் போதே
கண்டபின் கண்
கலங்குவதும் காண்பீரே!
கண்டபின் இயன்றதை
உதவினாலும் கூட
நம்மாளுங்க
மகிழ்வின்றி வாழுவதைப் பாருங்க...
நம்மாளுங்க
எல்லோருக்கும் எப்பதான் விடியுமோ?
தை பிறந்தால் வழி
பிறக்குமென
தை பிறக்கவும்
ஆளுக்காள் பயணித்தாலும்
பயணிக்கும் போது
பார்த்தவை கண்ணுக்குள்ளே
கண்ணுக்குள்ளே
நுழைந்தவை உள்ளத்தில் உருளுதே!
எந்தத் தை பிறக்க -
நம்மாளுங்களுக்கு
அந்த மகிழ்ச்சிக்கான
வழி பிறக்கும்?
@ 2021 தைப்பொங்கல் நாளையொட்டி ZOOM இடம்பெற்ற கவிதா நிகழ்வொன்றில் வாசித்த பதிவிது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!