Translate Tamil to any languages.

வியாழன், 25 டிசம்பர், 2025

உள(மன) விருப்பம்

 



"எப்படிப்பட்ட பெண்ணை நீ விரும்புகின்றாய்?" என்று ஒரு ஆணிடம் கேட்டு பார்த்தேன்.

"தன் உள்ளத்தை தொட்ட, தன் உள்ளத்தில் குந்தி இருக்கின்ற, தன் உள்ளம் விரும்புகின்ற ஒருத்தி அகப்பட்டால் அவளை விரும்புவதாக..." அந்த ஆணும் சொன்னார்.


"எப்படிப்பட்ட ஆணை நீ விரும்புகின்றாய்?" என்று ஒரு பெண்ணிடம் கேட்டு பார்த்தேன்.

"தன் உள்ளத்தை தொட்ட, தன் உள்ளத்தில் குந்தி இருக்கின்ற, தன் உள்ளம் விரும்புகின்ற ஒருவன் அகப்பட்டால் அவனை விரும்புவதாக..." அந்தப் பெண்ணும் சொன்னார்.

இருவரது பதிலும் உள்ள (மன) ப் பொருத்தம் இருந்தால் ஒருவரை ஒருவர் விரும்புவதாகத் தெரிவிக்கிறது. அந்த உள்ள (மன) ப் பொருத்தம் எப்படி அமைகின்றது என்று நீங்களும் கேட்கலாம் தானே!

ஒருவரது எண்ணம், எதிர்பார்ப்பு, இலக்கு, விருப்பம், வெறுப்பு, நடத்தை போன்ற எல்லாவற்றிலும் ஒத்துப்போகக்கூடிய இன்னொருவர் இருப்பின் அவர்களுக்கு இடையே உள(மன)ப் பொருத்தம் இருக்கிறது எனலாம்.

காதலன் - காதலி, கணவன் - மனைவி போன்ற இணையர்கள் இணைந்து ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போல் வாழ்ந்தால் உள்ளம் (மனம்) ஒத்து வாழ்வதாகக் குறிப்பிடலாம். இருவரும் இருவேறு வழியில் பயணித்தால், உள்ளம் (மனம்) ஒத்துப்போகாமல் வாழ்வதாகக் குறிப்பிடலாம்.

உளநல மதியுரை பெற விரும்பின் 094 0703445441 இலக்கம் ஊடாக சிக்னல் செயலி வழி பெறலாம்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

தேவைக்கு மட்டும் கடவுளைத் தேடுகின்றார்.





சீடர்கள்: குருவே கடவுளை  வணங்குவோர் யார்? எங்கே?

குரு: கடவுளைப் பக்தர்கள் தான் வணங்குவர்! இதில் ஐயம் எதற்கு?

சீடர்கள்:  கடவுள் எங்கும் இருக்கிறார் என்கிறீர்கள்! எங்கு உள்ளவர்கள் அதிகம் கடவுளை வணங்குகின்றனர்!

குரு: தங்கள் உயிர் பிரியக்கூடாது என்றும் தங்கள் நோய்கள் மாறவேண்டும் என்றும் மருத்துவமனையில் தான் அதிகமானோர் கடவுளை வணங்குகின்றனர்!

சீடர்கள்:  அப்படி என்றால், அன்னதானம் சாப்பிடவும் அழகுப் பெண்களைத் திறன்பேசியில் படம் பிடிக்கவும் ஊர்வம்பு அலட்டவும் தான் கோவில்களுக்கு வருகின்றனரா?

குரு: வீணர்கள் வீண் வம்பு தும்பு பேசலாம் வேண்டாதவற்றைச் செய்யலாம். ஆனால், உண்மையான பக்தர்களுக்கே கடவுள் அருள் தருவார்!

சீடர்கள்: "நாம் கும்பிட்ட கடவுள், எம்மைக் கைவிட மாட்டார்" என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவருக்கு மட்டும் தான் பொருந்தும் போல...

குரு: ஆமாம்! கடவுளை நம்பினோர் கடவுளால் கைவிடப்படார்!

ஆக்கம்: யாழ்ப்பாவாணன் (மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

தீர்வுகளைத் தேடிக் கொள்ளுங்கள்.


சிக்கல்கள் இல்லாத இல்வாழ்வு தேவையெனில்

சிக்கலுக்குத் தீர்வைத்தான் நாடு.

(ஒரு விகற்பக் குறள் வெண்பா)


சிக்கல்கள் (பிரச்சனைகள்) இல்லாத 

குடும்பம் இருக்க முடியாது!

தீர்வுகள் இல்லாத  சிக்கல்களும்(பிரச்சனைகளும்) இருக்க முடியாது! கணவன் பெரிதா 

மனைவி பெரிதா என்று 

பட்டிமன்றம் நடத்துவது தான் 

குடும்பச் சிக்கல் (பிரச்சினை)! 

கணவன் பணிந்தாலும் 

மனைவி பணிந்தாலும் 

ஒருவர் நிமிரத் தான் வேணும்! 

எவர் நிமிர்ந்தாலும்

எவர் பணிந்தாலும் 

எவருக்கும் தாழ்வு இல்லையென்று

குடும்ப மகிழ்ச்சியே தேவையென வாழ்வதே

குடும்பச் சிக்கலுக்கு (பிரச்சினைக்கு)

தீர்வென்று 

உணர்ந்து கொண்டால் போதுமே!

(கவிதை போல...)


சிக்கல்களை சிக்கல்களாக

பார்த்துப் பயனில்லை

சிக்கல்களுக்குத் தீர்வுகளை

அலசினால் மகிழ்ச்சியே

(தன்முனைக் கவிதை)

திங்கள், 1 டிசம்பர், 2025

பாதிப்பும் வெளியீடும்

 


பகலவன் மூஞ்சியைக் காட்டினால் தான் 

உலகிற்கு வெளிச்சம் பாருங்கோ!

பகலவன் ஒளியை உறிஞ்சித் தான் 

நிலாவும் இரவில் சிரிப்பதைப் பாருங்கோ!

ஆசிரியர்மார் அழகாகக் கற்பித்தால் மட்டுமே 

மாணவர் உள்ளத்தில் அறிவு பெருகுமே!

உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்கள் 

சுற்றுச் சூழலில் இருந்தால் மட்டுமே 

நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்ற முடியுமே!

பணிகளைப் பயன்பாட்டைத் தருவோர் 

பக்கத்தில் இருக்காமல் போனால் 

பயன் பெறுவோர் எப்படிப் பயனீட்டுவர்? 

பாதிக்கப்பட்டவரிடம் தான் பதிலும் இருக்கிறதே!