Translate Tamil to any languages.

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

பலரது கேள்விக் கணையும் என் பணிவான பதிலும்

 


மக்கள் முன்னிலையிலும் அச்சு ஊடகங்களிலும் உங்கள் மூஞ்சியை காட்டாமல் வலைப்பூ, வலப்பக்கம், குமுகாய (சமூக)த் தளம் போன்ற மின் ஊடகங்களில் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துவது ஏன்?


ஈழத்துப் போர்க்காலச் சூழலில் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் நாளேடுகள்(ஞாயிறு இதழ்),  சஞ்சிகைகள் (மாதாந்த, காலாண்டு இதழ்), பொத்தகங்கள் படித்துப் பொழுது போக்கி அறிவை வளர்த்துக் கொண்டிருந்த காலமது. அப்போது "நானும் எழுதிப் பார்க்கலாம் தானே!" என்று முயன்று பார்த்த்தேன். அம்முயற்சியின் வெற்றியாக முதலில் நாடகம் எழுதி இயக்கினேன். அடுத்து 25/09/1990 யாழ் ஈழநாதம் நாளேட்டில் எனது முதற்கவிதை வெளியாகியது. இவ்வாறு தான் இணையவழி இலக்கியப் பயணத்தைத் தொடருகிறேன்.

நான் கணித ஆசிரியராகவும் கணினி விரிவுரையாளராகவும் கனணி நிகழ்நிரலாக்குனராகவும் பணியாற்றினேன். அவ்வேளைகளில் அச்சு ஊடகங்களில் எனது பதிவுகள் வெளிவந்தன. நான் கற்பிக்கும் போது எனது மாணவர்களை வைத்து எனது நாடகங்களை நானே எழுதி இயக்கி அரங்கேற்றி உள்ளேன்.

கணினி நுட்பங்களில் சிறந்து விளங்கியதால் இணைய வழி நற்றமிழைக் கொண்டு செல்லும் பணியைச் செய்ய முயன்றேன். அதனால், இணைய வழி ஊடாக எனது படைப்பாற்றலை வெளிக்கொணர நாட்டம் ஏற்பட்டது. அதுவும் நானே எனது அனைத்து ஆற்றல்களையும் தனித்து உருவாக்கி அரங்கேற்றி விட முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

எனது தனிமையான முயற்சியாக மின் ஊடக இலக்கிய வெளியீடுகளை வெளியிட விரும்புகிறேன். அச்சு ஊடகங்களையும் அச்சு ஊடகங்கள் சார்ந்த வெளியிட்டு நிகழ்வுகளை மக்கள் முன்னிலையிலும் நடத்தும் வேளை பங்கெடுப்பேன்.

மென்பொருள் தயாரிக்கிறதுக்கு குழுத் தேவை. அதுபோல் நாடகம் எழுதி, இயக்குவதற்குக் குழுத் தேவை. அதுபோல பாடல், நடனம், இசை நிகழ்வுகளை அரங்கேற்றக் குழுத் தேவை. ஆகவே எழுத்தை மட்டும் அல்லது என்னால் நிகழ்வை இயக்க முடியும் என்பதை மட்டும் தகுதியாக வைத்துக் குழு அமைத்து நான் மக்கள் முன்நிலையில் தலைநிமிர முடியாது. பிறரது பங்களிப்புக்கு எனது சிறு பங்களிப்பை வழங்க முடியும் என்பதை உறுதி செய்கிறேன். ஆனால் எனது எதிர்கால இலக்கு இணைய வழி மின் ஊடக வெளியீட்டு முயற்சியாகவே இருக்கும்.

யாழ்ப்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்)
மாதகல் கிழக்கு, யாழ்ப்பாணம்,
வட மாகாணம், இலங்கை. 

திங்கள், 20 அக்டோபர், 2025

நம்முடலே காற்றடைத்த பையடா!



எமது உடலை இயக்கும் சக்தி
கடவுள் என்றாலும் கூட
எமது உள்ளத்தில் எடுக்கும் முடிவே
எமது பயணத்தைத் தீர்மானிக்கும்!
எமது உடலுக்கு உள்ளே
சிறு காற்றுப் (சுவாசப்) பை - அதனுள்ளே
இருக்கக்கூடிய காற்றே (உயிர் / ஆன்மா)
எம்மை இயக்குகின்றதாக - கோவிலில்
சமயப் பேச்சாளர் சொன்ன நினைவு!
நம்முடலே காற்றடைத்த பையடா!
காற்றுப் போனால் (உயிர் பிரிந்தால்)
பெறுமதியில்லாச் சடப்பொருள் தானடா!
என்றெல்லோ
என் பீட்டப்பன் சா வீட்டில்
என்னப்பன் எனக்குரைத்தான்!
ஆடுகின்ற ஆட்டமும் போடுகின்ற கூத்தும்
காற்றுப் (மூச்சுப்) போகும் வரை தான்...
காற்றடைத்த பையாம் - எம்முடல்
காற்றுப் போகும் முன்னரே
உறவுகளை அன்பாகப் பேணுவோம்
ஊருக்கு நல்லது செய்வோம் - எல்லாம்
காற்றுப் போன எம்முடல் நாறும் முன்
சுடுகாட்டுக்கோ இடுகாட்டுக்கோ
கொண்டு போய்ச் சேர்த்து அழிக்கவே!

ஆக்கம்: யாழ்ப்பாவாணன்
(காசி.ஜீவலிங்கம்)
இலங்கை.

          =============================


ஒளி ஏற்றி இருள் விலக்கும்

துளி கூடத் தீயது ஒட்டாமல்

கோடி உடுத்தி கோடிட்டுக் சொல்லு

தீபாவளி நன்மை செய்யச் சொல்லும்

தீபாவளி நாளில் நன்மை செய்வோம்.

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள் பகிர்வோம்!

இல்லாதோர் எல்லோருக்கும் இயன்றவுதவி செய்வோம்.
இயலாதோர் அன்புடன் மாற்றாரை அழைத்து
தீபாவளி வாழ்த்துகள் பகிர்ந்து
எல்லோருடனும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும்
தீபாவளித் திருநாள் ஆகட்டும்!

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

எல்லை மீறாதீர்!


"அட, கட்டையிலே போவானே!
அட, பாடையிலே போவானே!
அட, சவப்பெட்டியிலே போவானே!
அட, அகவை தொன்னூற்று ஒன்பதிலும்
பணம், பொருள், பண்டத்தை
அள்ளிக்கொண்டு போவேன்டா!
அடப்பாவி! என்ர பெட்டையைக் கெடுத்திட்டு
செத்துப் போவியேடா?
புண் வந்து, புளுப் பிடித்து,  உறுப்பழுகி, ஒழுகி
அணு அணுவாய் செத்துத்தான் போவாய்!"
என்றெல்லோ - எங்கட
அம்மம்மா, அப்பம்மா
மண்ணள்ளிப் பறக்க வீசி
தெருப்பொறுக்கியைத் திட்டேக்க பார்த்தேன்.
பெத்தவளுக்கே
பெண்ணின் அருமை தெரியும்
பொம்பிளைப் பொறுக்கிப் பொடியளுக்கு
இதெல்லாம் எப்பதான் விளங்குமோ?
"ஒருவனுக்கு - ஒருவள்" என்ற
ஒழுங்கைப் பின்பற்றி வாழ்ந்தால்
உலகத்திலே நற்பெயர் ஈட்டலாமே!

ஞாயிறு, 5 அக்டோபர், 2025

நல்ல நண்பர் தேவை


 

நான் தனிப்பிறவி அல்ல

நான் தெய்வப்பிறவி அல்ல

நான் - மக்களோடு

மக்களாக வாழவேண்டிய பிறவி!

அப்படியாயின் - நான் 

ஏன் தனிமையாய் இருக்கிறேன்?

என் உள்ளம் தொட்ட 

எந்த உறவையும் விட்டு 

நான் விலகியதில்லை!

என் உள்ளத்தைத் தொட்டுவிட

எவர் வந்து பழகினாலும் கூட

நான் உறவாக அணைப்பேனே!

என் தனிமையைப் போக்கவல்ல

அறிஞர், வாசகர், பயனர் 

எவரையும் வரவேற்கக் காத்திருக்கிறேன்.

என் எழுத்தையும் பேச்சையும் நம்பாமல் 

பழகிப் பாருங்கள் 

உள்ளம் பொருந்தினால் உறவாக முடியுமே!


ஆக்கம்: யாழ்ப்பாவாணன்

வெள்ளி, 3 அக்டோபர், 2025

தேடல்

 


எதோ ஒன்றைத் தேடும் 

எவரோ ஒருவரின் தேவையை

நிறைவேற்றிக் கொடுக்க 

எதோ ஒன்று 

எனக்கு உள்ளும் இருக்கலாம்!

இருப்பினும் - எவருக்கும் 

பயன்படக்கூடிய எதனையும் 

கற்றுக்கொண்டு தானிருக்கிறேன்!

என்னை நாடினால் 

ஏதும் கிடைக்கும் என்று

வருவோருக்கு வழங்கக்கூடிய - ஏதாவது 

என்னிடம் இருக்க வேண்டும் என்று 

நானுணருவதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!

புதன், 1 அக்டோபர், 2025

எழுத்தும் ஓர் உளமருந்து

 

என் இல்லாள் கூட "எழுதி எழுதி எழுதுதாளும் கிழிந்தும் எழுதுகோலும் தேய்ந்தும் போனது தான் மிச்சம். நாலு காசு வருவாய் வருகிறதா? தருகிறதா? என்னத்தை எழுதிக் கிழித்து என்னத்தைப் பண்ணப் போகிறாய்? நாலு காசு உழைத்தால் பரவாயில்லை!" என்கிறாள். எதிர்ப்புகள் வரினும் உள்ளம் நிறைவடையுத் தான் எழுதுகிறேன்.

மாற்றாருக்குச் சொல்லுகின்ற வழிகாட்டலையே நானும் பின்பற்றுகிறேன். அதனைக் கீழே தருகின்றேன்.

தாங்கள் எழுதுவதைத் தொடருங்கள்.

எவர் எதைச் சொன்னாலும் காதில் விழுத்துங்கள். ஊருலகம் ஏற்பதைப் பின்பற்றுங்கள்.

எழுதுவோருக்கு வாசகர் மட்டுமே பின்னூட்டி. அஞ்சாமல் தொடர்ந்து எழுதுங்கள்.

எழுத எழுத எழுத்தின் நடை அழுகுறும். உள்ளம் நிறைவடைய உள்நோய்கள் கிட்ட நெருங்காது. இலக்கியப் படைப்பாக்கம் கூட ஓர் உளச் சிகிச்சை தான்.