தமிழ் புலவர் திருவள்ளுவர் அவர்களால் ஆக்கிய குறள் வெண்பாக்களே திருக்குறளென அழைக்கப்படுகிறது. இத்திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களையும் 133 பகுப்புகளையும் (அதிகாரங்களையும்) 1330 பாடல்களையும் கொண்டிருக்கிறது. (சான்று: https://ta.wikipedia.org/s/4iz)
எந்தவொரு அறிஞரும் எந்தவொரு எடுத்துக்காட்டுக்கும் திருக்குறள் ஒன்றை எடுத்துக்காட்டும் அளவுக்குத் தனது திருக்குறளில் திருவள்ளுவர் உலகில் மின்னும் அறிவு அத்தனையும் தொகுத்துள்ளார். 2000 ஆண்டுகளுக்கு முந்திய திருக்குறள் தான் தமிழ் மொழியின் சிறந்த பல்துறை அறிவினை வெளிப்படுத்தும் இலக்கியமாகும்.
இப்படியொரு புலமைமிக்க இலக்கியம் ஒன்றை இனியெவராலும் எழுத முடியாது. அப்படியிருக்கையில் "நீங்களும் திருக்குறள் எழுதலாம்!" என்று எப்படித் தலைப்பை இடுவீர் என நீங்களும் கேட்கலாம். திருவள்ளுவர் ஆக்கிய குறள் வெண்பாக்களை நீங்களும் எழுதலாம் என்று சொல்ல வந்தேன்.
அப்படியென்றால் குறள் வெண்பா எழுதத் தேவையானவை எவை?
வெண்பாவிற் புகழேந்தி வடித்தார் நளவெண்பா
நளவெண்பாவை நாலுதடவை படித்தால் சுகமளிக்கும்
திருக்குறள் போன்ற குறள்வெண்பா புனையவே!
மேற்படி நளவெண்வைப் படித்தால் நல்ல ஓசைமிகு வெண்பா எழுதலாமென அறிஞர்கள் சொல்கிறார்கள்.
குறள் வெண்பா என்பது இலக்கணம் சார்ந்த பா/கவிதை. அதற்கு அசை, சீர், தளை, அடி, எதுகை, மோனை சார்ந்த இலக்கண அறிவு இருந்தால் போதும். அசை, சீர் பார்க்கும் போதும் அலகிடும் போதும் சொற்புணர்ச்சி கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தனையும் தெரிந்துவிட்டால் குறள் வெண்பாக் கட்டமைப்பைக் கற்றுவிடலாம்.
குறில் எழுத்து, நெடில் எழுத்து, மெய் எழுத்து எவையென இனம் காணத் தெரிந்தால் அசை பற்றி அறிந்து கொள்ளலாம். அதாவது எழுத்தசைவை அசை எனலாம்.
குறில் எனின் நேரசை எ-கா: க
குறில் + மெய் எனின் நேரசை எ-கா: கல்
நெடில் எனின் நேரசை எ-கா: கா
நெடில் + மெய் எனின் நேரசை எ-கா: கால்
குறில் + குறில் எனின் நிரையசை எ-கா: கன
குறில் + குறில் + மெய் எனின் நிரையசை எ-கா: கனம்
குறில் + நெடில் எனின் நிரையசை எ-கா: படா
குறில் + நெடில் + மெய் எனின் நிரையசை எ-கா: படார்
அசையைக் கணிக்கும் போது மாத்திரை அளவு தெரிந்திருத்தல் நன்று. எ-கா: ஐகாரக் குறுக்கம் - ஒன்றரை மாத்திரை (முதலெழுத்தாக வரும் போது), ஒரு மாத்திரை (இடையிலோ இறுதியிலோ வரும் போது). இவ்வாறே குறில், நெடில், மெய், குற்றியலிகரம், குற்றியலுகரம், ஔகாரக் குறுக்கம், ஐகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் எடுக்கும் மாத்திரை அளவைக் கருதினால் போதும்.
சொல்கள் இரண்டும் தமக்குள்ளே புணர்தலை சொற்புணர்ச்சி என்பர். இதில் இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி (தோன்றல் விகாரம், திரிதல் விகாரம், கெடுதல் விகாரம்) என இரண்டு வகையுண்டு.
எ-கா:-
பொன் + மலை = பொன் மலை என்றவாறு புணர்தலை இயல்புப் புணர்ச்சி எனலாம்.
பூ+கொடி = பூங்கொடி (புதிதாய் 'ங்' என்ற எழுத்துத் தோன்றியது) - தோன்றல் விகாரம்
பொன்+குடம் = பொற்குடம் (நிலைமொழி ஈறு 'ன்' என்பது 'ற்' எனத் திரிந்துள்ளது) - திரிதல் விகாரம்
மரம் + நிழல் =மரநிழல் (நிலைமொழி ஈறு 'ம்' என்பது கெட்டது) - கெடுதல் விகாரம்
பயிற்சிக்காக:-
மரம் + பெட்டி = மரப்பெட்டி (மகரமெய் கெட்டு, பகர மெய் தோன்றியுள்ளது) - கெடுதல் + தோன்றல் விகாரம்
பனை + காய் = பனங்காய் ('பனை' --> 'பனம்' --> 'பனங்' என்றவாறு மாற்றம்) - கெடுதல் + தோன்றல் + திரிதல் விகாரம்
அசைகளால் ஆக்கப்படுவது சீர் எனலாம். சீர் என்பது சொல் போன்று அமையும்.
ஓரசைச் சீர்கள்:-
நேர் அசை = நாள் எ-கா: நன்
நேர் + குற்றியலுகரம் = நேர்பு அசை = காசு எ-கா: நன்று
(வெண்பாவில் ஈற்றடி ஈற்றுச் சீராக வரும்)
நிரை அசை = மலர் எ-கா: சரக்
நிரை + குற்றியலுகரம் = நிரைபு அசை = பிறப்பு எ-கா: சரக்கு
(வெண்பாவில் ஈற்றடி ஈற்றுச் சீராக வரும்)
மேற்படி நான்கும் அசைச்சீர் என அழைக்கப்படும்.
ஈரசைச் சீர்கள்:-
நேர் + நேர் = தேமா = மாச்சீர்
நிரை + நேர் = புளிமா = மாச்சீர்
நேர் + நிரை = கூவிளம் = விளச்சீர்
நிரை + நிரை = கருவிளம் = விளச்சீர்
மூவசைச் சீர்கள்
நேர் + நேர் + நேர் = தேமாங்காய் = காய்ச் சீர்
நிரை + நேர் + நேர் = புளிமாங்காய் = காய்ச் சீர்
நேர் + நிரை + நேர் = கூவிளங்காய் = காய்ச் சீர்
நிரை + நிரை + நேர் = கருவிளங்காய் = காய்ச் சீர்
*காய்ச்சீர்கள் யாவும் வெண்பாவுக்கு உரியவை. ஓசை நயம் மிகு வெண்பாப் புனைய விரும்பின் விளங்காய் சீர்களைத் தவிர்க்கலாம்.
நேர் + நேர் + நிரை = தேமாங்கனி = கனிச் சீர்
நேர் + நிரை + நிரை = கூவிளங்கனி = கனிச் சீர்
நிரை + நேர் + நிரை = புளிமாங்கனி = கனிச் சீர்
நிரை + நிரை+ நிரை = கருவிளங்கனி = கனிச் சீர்
*வெண்பாப் புனையும் வேளை கனிச்சீர்களைத் தவிர்த்தல் வேண்டும். கனிச்சீர்கள் வெண்பாவில் சேர்ப்பதில்லை.
நிலைச் சீர், வருஞ் சீர் என்னும் இரண்டு சீர்களுக்கு இடையேயான தொடர்பை ஏற்படுத்துவது தளை ஆகும். தளையின் இயல்பானது நிலைச்சீரின் ஈற்றசை, வருஞ்சீரின் முதலசை என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளது. வெண்பாவில் இரண்டு தளைகளே வரும்.
1. இயற்சீர் வெண்டளை
மா முன் நிரை வரின்
விளம் முன் நேர் வரின்
2. வெண்சீர் வெண்டளை
காய் முன் நேர் வரின்
சீர்கள் சேருவதால் அடிகள் அமையும். குறள் வெண்பாவில் இரண்டு அடிகள் வரும்.
நான்கு சீர் அடி - அளவடி
மூன்று சீர் அடி – சிந்தடி
ஓசை ஒழுங்கோடு சீர்கள், அடிகள் தொடுக்கப்படுவதை தொடை எனலாம். இங்கு மோனைத் தொடை, எதுகைத் தொடை ஆகிய இரண்டயும் கவனிப்போம்.
மோனை - இரண்டு (இரண்டிற்கு மேல்) சீர்களுக்கு இடையேயான முதலெழுத்துப் பொருந்தி அமைதல்.
எ-கா: மணக்கும் மல்லிகை
பொருந்தி வரும் மோனை எழுத்துகள் இவ்வாறும் அமையலாம்.
அ - ஆ - ஐ - ஔ (க - கா - கை - கௌ)
இ - ஈ - எ - ஏ (கி - கீ - கெ - கே)
உ - ஊ - ஒ - ஓ (கு - கூ - கொ - கோ)
'ஞ்' இற்கு 'ந்' இனமாம்
'ம்' இற்கு 'வ்' இனமாம்
'த்' இற்கு 'ச்' இனமாம்
எதுகை - இரண்டு (இரண்டிற்கு மேல்) சீர்களுக்கு இடையேயான இரண்டாமெழுத்துப் பொருந்தி அமைதல். இங்கு முதலெழுத்துக் குறிலா நெடிலா எனக் கருத்தில் கொள்ள வேண்டும். இது சீர் எதுகை, அடி எதுகை என இரு வகைப்படும்.
எ-கா: வந்தவர் முந்தினர் - முதலெழுத்து குறில்
ஆடும் மாடும் மேய்ந்தன - முதலெழுத்து நெடில்
மாச் சீர், விளச் சீர், காய்ச் சீர் ஆகிய சீர்களாலான அளவடி, சிந்தடி ஆகியவற்றால் ஆனது குறள் வெண்பா ஆகும். இதன்
ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய ஒன்றில் முடிதல் வேண்டும்.
இதில் பொழிப்பு மோனை (1 ஆம்,3 ஆம் சீர்களில் வருதல்), ஒரூஉ மோனை (1 ஆம், 4 ஆம் சீர்களில் வருதல்) ஆகியன வரும். இரண்டடிகளில் முதற் சீரில் எதுகை வந்தமையின் ஒரு விகற்பக் குறள் வெண்பா என்றும் ஏனையவை இரு விகற்பக் குறள் வெண்பா எனவும் வகைப்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக,
திருவள்ளுவரின் குறள் ஒன்றினை அலகிட்டுப் பார்ப்போம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
மேற்படிக் குறள் உருவாக இடம் பெற்ற அசைகளைப் பிரித்தறிதலே அலகிடுதல் எனலாம்.
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
நிரை/நேர் நிரை/நேர் நிரை/நேர்/நேர் நேர்/நேர்
புளிமா
புளிமா புளிமாங்காய் தேமா
பக/வன் முதற்/றே உல/கு
நிரை/நேர் நிரை/நேர் நிரை/நேர்
புளிமா
புளிமா புளிமா
மேற்படிக் குறளில் மாச் சீர், காய்ச் சீர் வந்தன; முதலடியில் ஒரூஉ மோனை வந்தது; ஈரடிகளில் முதற்சீரில் எதுகை வந்தமையால் இது ஒரு விகற்பக் குறள் வெண்பா ஆகும்.
* மேற்படி நீங்களும் திருக்குறள் எழுதலாம். உங்கள் திருக்குறளை http://www.avalokitam.com/ என்ற தளத்தில் சரி பார்த்துக்கொள்ள முடியும்.
படிக்கப் படிக்கப் படிப்பறிவு தான்பெருக
கண்டவர்தான்
வாழ்த்தும் உனக்கு.
மேற்படி யாழ்பாவாணனின் குறளைச் சரி பாருங்கள். இக்குறள் இந்தப் பாடக் குறிப்போடு பொருந்துகிறதா / முரண்படுகிறதா எனப் படித்து நீங்களும் சிறந்த திருக்குறளை ஆக்குவீர்களென நம்புகின்றேன். உங்கள் பயிற்சிக்காக நாரதரின் மாம்பழக் கதை கூறி இரு குறள் தந்து விளக்கம் தருகின்றேன்.
நாரதர் நாடகம்
சும்மாதான் நாரதர்தான் மாம்பழம்தான் நீட்டியதால்
அம்மையப் பன்தான் உலகு
(ஒரு விகற்பக் குறள் வெண்பா)
நாரதர் நாடுமிடம் கலகம் தானாம் - அவர்
சிவனுமை இல்லம் நாடியதன் விளைவு
உலகம் என்றால் எவ்வளவென மோதலாம்!
அம்மை, அப்பனே உலகமெனப் பிள்ளையாரும்
மயில் பறந்த இடமெலாம் உலகென முருகனும்
மோதிக்கொள்ள இடமளித்தது நாரதரின் மாம்பழமே!
நாரதர் கதை நாம் படித்தாலும்
நம் பெற்றவரை நாம் பேணுவதே பயன்!
அம்மையும் அப்பனும் தானுலகம் என்றுரைக்கும்
பிள்ளைதான் சுற்றியதன் கூற்று
(இரு விகற்பக் குறள் வெண்பா)
சிவனுக்கும் உமாதேவிக்கும் சேர்த்திடவே
நாரதர் மாம்பழம் ஒன்றை நீட்டினார்.
பிள்ளையார், முருகன் இருவரில்
எவருக்கு மாம்பழம் என்ற போட்டி?
முதலில் உலகைச் சுற்றும் அவருக்கே
மாம்பழம் என்ற தீர்ப்பு எழுதியாச்சு!
முருகன் மயிலேறி உலகைச் சுற்றிவர
பிள்ளையார் அம்மை, அப்பனைச் சுற்றிவர
அம்மை, அப்பனே உலகம் என்றாச்சே!
நாரதர் நாடகம் நன்மையிலே முடிந்ததே!
அற்புதமான விளக்கம் ஐயா... நன்றி...
பதிலளிநீக்குநல்ல முயற்சி நனிபுகழ் கிட்டுமே
பதிலளிநீக்குவெல்லும் நமது தமிழ்.
அழகு..தமிழ் அழகு!
பதிலளிநீக்குஇனிமை ..இனிமை
தேனிலும் இனிமை "தமிழ்"
உங்கள் கை வண்ணத்தமிழ்..!!!
சிறப்பான முயற்சி. உங்கள் பணிக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துகள்...
பதிலளிநீக்குசிறப்பான முயற்சி.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
சொல்லிய பாங்கு எனக்கும் சற்றே விளங்குகிறது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநிரை/நேர் நிரை/நேர் நிரை/நேர்/நேர் நேர்/நேர்
புளிமா புளிமா புளிமாங்காய் தேமா
11வது வகுப்பில் படித்தது.
படிக்கும் போது கொஞ்சம் புரிகிறது.
பாராட்டுகள். அறிவுக்குப் பொருந்தாத புராணக்கதைகளை எடுத்துக்காட்டுகளாக அமைக்காமல் தமிழ் மன்னர்கள், புலவர்கள், மக்கள் வாழ்வில் இடம்பெற்றவற்றை எடுத்துக்காட்டுகளாக அமைக்கவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!
பதிலளிநீக்கு