Translate Tamil to any languages.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

தமிழுக்கு வாசகர் தேவை!



கதைகளை வாசித்ததும் மறக்கலாம்
காட்சிகளைப் பார்த்ததும் மறக்கத் தான்
உள்ளத்தில் இடமில்லையே!
கதை இலக்கியத்தை விட
காட்சி இலக்கியம் வலியதோ?
கவிதைகளை வாசித்ததும் மறக்கலாம்
நல்ல பாடல்களைக் கேட்டதும் தான்
உள்ளம் மறக்க இடம் தராதே!
கவிதை இலக்கியத்தை விட
பாட்டு இலக்கியம் வலியதோ?
கட்டுரை படித்ததும் தூக்கம் வரலாம்
நகைச்சுவை படித்ததும் தான்
மூளைக்கு வேலையே கிட்டுதே!
கட்டுரை இலக்கியத்தை விட
நகைச்சுவை இலக்கியம் வலியதோ?
நானோ
இலக்கியச் சுவை அலசினாலும்
இலக்கியம் வாசிக்கத் தான்
எவரும் முன்வருவதாய் இல்லையே!
தமிழ்மொழி வாழத்தான்
தமிழிலக்கியம் வாழ வேண்டுமே!
தமிழிலக்கியம் வாழத்தான்
வாசிக்கும் உள்ளங்கள் வேண்டுமே!
உண்மையிலே
எழுத்துக்குத் தான் வாசகர்
பேச்சுக்குத் தான் கேட்போர்
காட்சிக்குத் தான் பார்வையாளர்
பாடலிசைக்குத் தான் இசைவிரும்பிகள்
என்றெல்லாம்
இலக்கிய நாட்டமுள்ளவர்களால் தான்
தமிழிலக்கியம் வாழ
தமிழ்மொழி வாழும் என்பேன்!

இலக்கணமறிந்து எழுதலாம் வா!

கதை என்றெழுதத் தான்
கட்டுரை தான் மலர்ந்தது...
கட்டுரை என்றெழுதத் தான்
கதை தான் மலர்ந்தது...
இரண்டையும் கலந்தெழுதத் தான்
முரண்டு பிடித்து மலர்ந்தது தான்
வசன கவிதை என்ற பதிவாச்சு!
வசன கவிதையைத் தான்
நீட்டி மடக்கிவிட மலர்ந்தது தான்
புதுக் கவிதை என்ற பதிவாச்சு!
புதுக் கவிதையென எழுதியதைத் தான்
நானும் புலவரிடம் காட்டினேன் - அவரோ
மோனை முட்ட, எதுகை விழத் தான்
மாச் சீர், விழச் சீர் மின்னாமலும்
காய்ச் சீர், கனிச் சீர் காணாமலும்
பூச் சீர், நிழல் சீர் வராமலும்
கவிதை என்று சொல்ல முடியாதாம்!
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை எல்லாம்
அறியாமல் எழுதுவதெல்லாம் தான்
கவிதையெனச் சொல்ல - எந்த
புலவர் தானும் இரங்கி வரமாட்டாராம்!
ஓ! கவிதை போலக் கிறுக்குவோரே
கவிதை இலக்கணம் அறியாமல்
எதுகையோ மோனையோ உரசாமல்
எழுதி வெளியிட்டு என்ன பயன்?
  
எழுதுவோரே கொஞ்சம் கேள்!

எழுதத் தான் எழுதுகோலைப் பிடித்தால்
எத்தனையோ எழுதிவிடலாம் - ஆனால்
இரண்டு பக்கத்தை எண்ணிப் பாரென
எழுதத் தான் மறந்து விடுகிறோமே!
தன் பக்கத்தை எவரும் சிந்திக்கலாம்
தனது முயற்சிக்கு உதவும் பக்கத்தை
மறந்து விட்டால் வெற்றி கிட்டுமா?
எடுத்துக்காட்டாகச் சொல்லப் போனால்
பேசத்தான் தெரிந்தால் பேசித்தான் காட்டலாம்
கேட்பவர் விருப்புடன் உள்வாங்கினாலே வெற்றி!
எடுத்துக்காட்டுக்கு விரும்பியதை எழுதலாம்
வாசகர் விருப்பறிந்து எழுதினால் மட்டுமே
விரும்பி எழுதியதை வாசிக்க ஆளிருக்குமே!
இரண்டு பக்கத்தை எண்ணிப் பார்த்தால்
எப்பவும் முயன்ற முயற்சியில் வெல்லலாமென
எழுதுகோல் ஏந்திய பெரியோர் வழிகாட்டினால்
நாட்டில எல்லோரும் முயற்சிகளில் வெல்வாரே!

3 கருத்துகள் :

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!