Translate Tamil to any languages.

வெள்ளி, 24 நவம்பர், 2017

தமிழுக்காகக் கொஞ்சம் உதவுவோம்!

எப்போதும் தமிழில் பேசுவோம்
தேவைப்பட்டால்
பிறமொழியிலும் பேசுவோம்
எப்படியாயினும் - தமிழில்
பிறமொழியைச் சேர்த்துப் பேசாதீர் - அது
தமிழைக் கொல்லும் பணியே!
தமிழைக் கொல்லும் பணியைச் செய்யாது
தமிழில் பேசித் தமிழராய் இணைவோம்!

எங்கும் எதிலும் எப்போதும்
பிறமொழிகளைக் கொஞ்சம் நீக்கி வை
அப்ப தான் தமிழ்மொழி வாழும்!
எப்பவும் தான் எல்லோரும் தான்
எண்ணியவாறு நற்றமிழைப் பேண
பிறமொழிகளைக் கொஞ்சம் விலக்கி வை!

உலகெங்கும் வாழும் உறவுகள் எல்லோருக்கம்
இலகுவாய்த் தமிழின் சிறப்பை உணர்த்த
ஹாவாட்டில் தமிழுக்கான இருக்கை அமைக்க
உணர்வுள்ள தமிழர் எல்லோரும் உதவலாமே!


ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என்பது, ஐக்கிய அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்கவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வசதி செய்யுமுகமாக நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள கல்விசார் இருக்கை ஆகும். தனியார் அறக்கொடைகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்படுகின்ற பிற கல்விசார் இருக்கைகளைப் போலவே தமிழுக்கான இந்த இருக்கையும் தமிழ் சமூகத்தினால் வழங்கப்படவிருக்கும் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான நன்கொடைகள் மூலம் அமைக்கப்படவுள்ளது.
ஏனைய தகவலுக்குக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

ஒவ்வொருவர் உள்ளத்திலும் உருளும்
தமிழின் சிறப்புகள் ஒவ்வொன்றும்
ஒவ்வொருவராலும் பகிரப்பட்டு - அவை
நாளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டும்!

பிறமொழி நீங்கில் தமிழ்மொழி வாழும்
வழியிலும் சரி வலைவழியிலும் சரி
தமிழ்மொழியைப் பேணலாம் வாரும்...
அப்ப தான் பாரும்
நாளைய தலைமுறை நற்றமிழைப் பேணும்!

ஞாயிறு, 12 நவம்பர், 2017

கள்ளக் காதலும் நகைச்சுவைக் காதலும்

இன்றைய (2017 இல் எழுதுகிறேன்) காலகட்டத்தில கள்ளக்காதல் அதிகம் என்பதால் தான் அறிஞர் ஒருவர் தனது வலைப் பக்கத்தில் (கூகிளில்) இப்படியொரு படத்தை இடுகையிட்டாரோ தெரியவில்லை.
மேலுள்ள படம் கூகிள் ஊடாக நகைச்சுவை எனத் தேடேக்க கிடைத்தது. அதனைச் சொடுக்க http://sakthistudycentre.blogspot.com/2013/08/free-hospital.html என்ற இணைப்பும் கிட்டியது. படத்தைப் பார்த்ததும் என்னுள் தோன்றியதை எழுதுகிறேன்.

கடற்கரையில காதலிக்க வந்த காதலி "கனநேரம் இங்க இருக்கேலாது" எனச் சொல்ல, "கொப்பரும் கொம்மாவும் 'வீட்டில ஆளைக் காணோம்' எனத் தேடுவினமோ?" எனக் காதலன் கேட்கிறான்.

"பள்ளிக்கூடத்தால பிள்ளைகள் வந்து என்னைத் தேடுவினம்" எனக் காதலி சொல்ல கடற்கரையில காதலிக்க வந்த காதலனோ "பிள்ளைகளின்ர தேப்பன்காரன் வந்தால் தன் தலை போயிடும்!" என எண்ணுகிறான்.

இந்த நேரம் பார்த்து எனது எண்ணத்தில் இப்படித் தோன்றிச்சு!

சும்மா காதலிக்கப் போகேக்க
கடற்கரையில காதல் சுகம் காணேக்க
நேரம் மட்டுப்படுத்தப்படேக்க தான்
கள்ளக்காதல் இதுவென்று தெரியவருமே!

அந்த எண்ணத்தை இப்படியும் எழுதிப் பார்த்தேன்.
1.
ஒருவன்: கள்ளக்காதல் தான் அதிகம் மகிழ்வைத் தருமே!

அடுத்தவன்: அப்படியா! அதெப்படி?

மற்றவன்: காதலிக்க வந்தவளின்ர கணவன் அல்லது அவளின்ர தகப்பனோ அண்ணன், தம்பியோ வந்து; அடி, உதை எல்லாம் பரிசாக வழங்கும் போது தெரியுமே!

2
ஒருவள்: மக்கள் முன் (Public) காதல் சுவையிருக்காதே!

அடுத்தவள்: "கண்ட கண்ட இடத்திலயும் கண்டறியாத இரண்டுகள்" என்று மக்களுக்கே வெறுத்துப் போச்சடி!

மற்றவள்: கணவன்மார் கண்டுட்டாங்கள் என்றால் எங்கட கதை போச்சடி!

அதே எண்ணத்தைத் தலைகீழாக இப்படி மாற்றி எழுதிப் பார்த்தேன்.
1
ஒருவன்: கள்ளக்காதல் என்று தெரிந்தும் தலை காட்டியது பிழையே!

அடுத்தவன்: எப்படியடா தெரியும், அவள் ஐந்து பிள்ளைகளுக்கு அம்மா என்று...

மற்றவன்: 'கண்டதே காதல் கொண்டதே கோலம்' என்றால் உப்படித் தாண்டா!

2
ஒருவள்: மக்களுக்கு (Public) முன்னால காதலிப்பதாகக் காட்டிப் பணக்காரியாகத் தலை காட்டினாய்! இப்ப என்னாச்சு?

அடுத்தவள்: மண், பொன், பணம் என அள்ளித் தந்தவன், ஐந்து பிள்ளைகளுக்கு அப்பனடி!

மற்றவள்: வருவாய் ஈட்டப் போய் வயிற்றில கருவை வேண்டியிருந்தால் உன் கதை முடிஞ்சிருக்குமடி!

அதே எண்ணத்தைத் தலைநிமிர்த்தி இப்படி மாற்றி எழுதிப் பார்த்தேன்.
1
ஒருவன்: முன்பின் அறியாமல் ஒருத்தியோட களவாகச் சந்திக்கலாமோ?

அடுத்தவன்: காதல் என்ற உணர்வு, தனியாகச் சந்திக்கத் தூண்டுமே! அவளே நாடியும் வந்தாள்...

மற்றவன்: வயிற்றில வளருற குழந்தைக்கு உன்னை அப்பனாக்க, இப்ப அவள் உன்னைத் தேடுறாளாமே!

2
ஒருவள்: மக்களுக்கு (Public) முன்னால அடுத்தவனை அடிக்கடி சந்தித்தால் தப்பாகத் தானே கதைப்பாங்க...

அடுத்தவள்: உதை அடிக்கடி நோட்டமிட்ட ஆள்கள் சொல்லியே, உன்ர கணவன் மணமுறிப்பு கேட்கிறாரோ?

மற்றவள்: கணவன் விலகினாலும் சந்தித்தவனைக் கட்டலாமென்றால் அவனுக்கும் நாலு மனைவியோ!

"வேடந்தாங்கல்" வலைப்பூவில கிடந்த படத்தைப் பார்த்து, நம்மாளுங்க "காதல்" என்று சொல்லிப் போடுகின்ற வேடங்களை எழுத வைத்த கடவுளை நேரில் சந்தித்தால் என்ன சொல்லியிருப்பார்?

போலிக் கண்களில் தெரிந்ததை நம்பி
அறிவுக் (ஞானக்) கண்ணால் பார்க்கத் தெரியாத
முட்டாள்களுக்குச் சொல்ல ஏதுமில்லை!

கடவுள் தான் இப்படிக் கையை விரிப்பார் என்றால், நம்ம சோதிடக்காரர் இருக்கிறாரே! அவரையும் நேர்காணச் சென்றேன்.

இயற்கையாய் இயல்பாய் இசைந்த - இரு
உள்ளங்களுக்குச் சோதிடம் தேவையில்லை - அது
வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கம் எதற்கும் சரியே!

சோதிடக்காரரின் பதில் என்னைச் சோதித்தது. அதாவது, இயற்கைக்கு முரணாக "காதல்" என்ற வெறியில் (போதையில்) தள்ளாடித் தள்ளாடி விழுகின்றவர்களைப் பற்றி எழுதியதாக எண்ணினேன். உடனே இப்படியும் எழுதத் தோன்றிச்சு!

நல்ல பொருளுக்கு விளம்பரம் வேண்டியதில்லை...
கள்ளச் சந்திப்போ பொதுச் (Public) சந்திப்போ
நல்ல காதலுக்கு ஒருபோதும் வேண்டியதில்லை...
எங்கிருந்தாலும் உள்ளங்கள் உரசினால் போதுமே!

ஞாயிறு, 5 நவம்பர், 2017

திரையிசைப் பாடல் எழுத முயலுங்கள்


நம்மாளுகள் திரைப் (சினிமாப்) பாடல் எழுதுவதைத் தெரிந்துகொள்ள விரும்பலாமென ஏற்கனவே நான் எழுதிய பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

பாடல் எழுத என்ன தேவை?
நல்ல கவிதை தேவை!
நல்ல கவிதைக்கு என்ன தேவை?
இனிமையான இசை தேவை!
அதெப்படி?

"உன்முகம் எனக்குத் தெரிந்ததால்
எனக்குள் காதல் வந்ததே!" என

யாழ்பாவாணனும் கிறுக்கிப்போட்டு
நல்ல கவிதை என்பான் - ஆனால்
இதில் உணர்வு இருக்கு - நல்ல
இசையைக் காணவில்லையே என்பீர்!

எவரோ தாக்குரை செய்திடவே
யாழ்பாவாணனும் தன்னை நொந்து
சற்று இசையை வரவழைக்க
முயன்று பார்த்திருக்கிறார் போலும்!

"உன்அகம் அறியாமலே உன்முகம் பார்த்தேன்.
என்அகம் அறிந்தே உன்மீது காதலானேன்." என
எழுதி வாசித்துப் பார்த்தாலும் கூட...

"உன்அகம் அறியாமலே
உன்முகம் பார்த்தேன்.
என்அகம் அறிந்தே
உன்மீது காதலானேன்." என
எழுதி வாசித்துப் பார்த்தாலும் கூட...

அதே உணர்வு இருக்க, அடுத்து
ஏதோ இசை முட்டுவதைப் பார்க்கலாமே!
எதுகை, மோனை எட்டிப் பார்க்க
எழுத முயன்றதால் இவ்விசை முட்டியதோ!

மெட்டு என்றால் இசைக் கூட்டு, அதையும் சொல்லி; கதைக்கான சூழல் பற்றியும் சொல்லி பாட்டெழுது என்பாங்க... அதற்குப் பழைய பாடல் மெட்டுகளை வைத்துப் புதிய பாடல்களை எழுதிப் பழகலாமே!
எடுத்துக் காட்டிற்காக

"இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை" என்ற

பாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.

மெல்லிசை காவிவரும்
குளிர்காற்றுக்கு நிறமுமில்லை
இன்னிசை இல்லையென்றால்
வரும் பாட்டொலி சுவைப்பதில்லை

இவ்வாறு இன்னொரு பாடலைப் பார்ப்போம்.

"வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே" என்ற

பாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.

கிளியோடு விளையாடி
கிளியோடு உறவாடி
கிளியோடு பேச்சுக்காட்டி
பாட்டுப் போட்டோமே

இவ்வாறு இன்னொரு பாடலைப் பார்ப்போம்.

"கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ... ஓ... ராரிரோ...
ராரிரரோ... ஓ... ராரிரோ..." என்ற

பாடலின் மெட்டை / இசைக் கூட்டைக் கவனித்துக் கீழுள்ளவாறு பாடல் எழுதிப் பாருங்களேன்.

பெண்ணே உனைத்தானே
கண்ணில் அழகென
கண்டேன் உனை நானே
பெண்ணே உனைத்தானே
கண்ணில் அழகென
கண்டேன் உனை நானே
முந்தி எவர் உனைத் தான் பார்த்தான்
பிந்தி இவர் உனை நான் பார்த்தேன்
ராரிரரோ... ஓ... ராரிரோ...
ராரிரரோ... ஓ... ராரிரோ...

இவ்வாறு பழைய பாடல்களின் மெட்டுக்கு/ இசைக் கூட்டுக்கு பாடல் புனையப் பழகுவதன் மூலம் புதிதாகப் பாடல் புனையப் பயிற்சி கிடைக்குமென நம்புகின்றேன். ஆயினும், இதனை வழக்கப்படுத்தினால் நல்லதல்ல. ஏனெனில் உங்கள் பாடல், பழைய பாடல் மெட்டில் அமைந்திருக்குமெனத் தங்களைக் குறைவாக மதிப்பிட முயல்வார்கள். எனவே, இதனைப் பயிற்சியாகப் பேணிப் புதுப்புது மெட்டிற்கும் பாடல் புனைய முயிற்சி செய்யுங்கள்.

நானறிந்தவரை நல்ல இசைப் பாடல்களோ திரைப் பாடல்களோ அடியொன்றின் ஈற்றுச் சீரின் இசையை ஒட்டியே கேட்போர் உள்ளங்களில் குடியிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக "மே" என்ற இசையோடு கேட்போர் உள்ளங்களில் குடியிருக்கும் பாடலொன்றைக் கேட்டுப் படித்துப் பாருங்களேன்.


படம்: அவந்தான் மனிதன்
இசை: Ms விஸ்வநாதன்
பாடியவர்கள்: Tm சௌந்தர்ராஜன், p சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே
(அன்பு)

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே
(அன்பு)

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே
(அன்பு)

மானிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே
(அன்பு)

இந்தப் பழைய பாடல் மெட்டை வைத்துப் புதிய பாடல் ஒன்றை எழுதிப் பாருங்களேன்! எனது முன்னைய எடுத்துக்காட்டில் "அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்..." என்ற பாடல் வரிகளை கொடுத்திருக்கிறேன். நான் எழுதிய பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

"ததுங்கின ததுங்கின ததுங்கின ததுங்கின தா னானே
ததுங்கின ததுங்கின ததுங்கின ததுங்கின தா னானே"

என்ற மெட்டில் / இசைக் கூட்டில்

"கடலில எழும்புற அலைகள கேளடி ஓ மானே
மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே
கடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓ மானே
உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே"

என்றவாறு 'செம்பருத்தி' படத்தில் வருகிற பாடல் அமைந்திருக்குமோ? எப்படியோ இசையோடு கவிதை எழுதினாலும் திரையிசைப் பாடல் எழுதச் சில தகவல் தேவை. அவை எவை என்பதனை 'திரைப்படத்தில் மெட்டுக்கு பாடல் எழுதுவது எப்படி' என்ற தலைப்பில் கவிஞர் செந்தமிழ்தாசன் அவர்கள் விளக்குகிறார். நானும் உங்களுடன் அதனைப் பகிருகிறேன்.


இனி, திரையிசைப் பாடல் எழுதக் கற்றவற்றைத் தொகுத்துப் பார்க்க ஒரு பதிவு உண்டு. அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.