Translate Tamil to any languages.

திங்கள், 13 ஜனவரி, 2014

தைப்பொங்கல்


பொங்கலோ பொங்கல் - தைப்
பொங்கலோ பொங்கல்!

வீட்டுக்கு முன்னே பாரப்பா
மாட்டுச் சாணமெடுத்து மெழுகியாச்சு
அம்மா அறுகம் புல்லெடுத்து வா - அடி
எம்மவளே அழகாய் கோலமிடடி
மணி ஆறாக முன்னே
கணீரென்ற அப்பாவின் குரல்!

பகலவன் வரவுக்கு முன்னே
நம்மவள் கோலமிட்டாள்
அம்மாவும் அறுகுவைத்து
பிள்ளையார் பிடித்துவைக்க
அண்ணன் நிறைகுடம் வைக்க
பாட்டி பிடித்த புதடுப்பு வைத்து - அப்பா
புதுப்பானையில தண்ணி விட்டு - அந்த
அடுப்பில நெருப்பை மூட்ட
அப்பு வந்து
பானைக்குள்ளே பாலை விட
எங்கட தம்மி
வெடி கொழுத்திப் போட
எங்கட வீட்டில
பொங்கல் பொங்கத் தொடங்கியாச்சு!

தென்னம் பாளை வைத்து மூட்டிய
பொங்கல் பானை அடுப்பெரிய - அந்த
அடுப்பைச் சுற்றி நம்மாளுகள்
எடுப்பாக எல்லோரும்
பொங்கல் பானை பொங்கி வழிய
பகலவன் வரவைக் காண
கூடிநிற்கக் காண்பதே அழகு!

பகலில் ஒளி தருவதால்
பகல் அவன் பகலவன்
மண்ணிற்கும் நிலவுக்கும்
கதிர் ஒளி பரப்புவதால்
கதிர் அவன் கதிரவன்
அண்டவெளிக்கு முதல்வன் என்பதால்
ஞாயிறு (சூரியன்) என்கிறோம் - அந்தப்
பகலவன் வரவைக் கண்டு - தையில்
பொங்கிப் படைப்பதேன்?

நெல் விதைக்கக் களை பிடுங்க
கதிர் தள்ளி நெல் விளைய
விளைந்த நெல்லை அறுவடை செய்ய
வேளைக்கு வேளை மழை கொட்டிய
நாளுக்கு நாள் நன்மை வழங்கிய
காலைக் கதிரவனுக்கு நன்றி கூறவே!

பொங்கல் பானை பொங்கி வழிய
புது அரிசி போட்டுக் கலக்கி
வெந்து வர வெல்லம் போட்டு
அடுப்புத் தணித்து முடித்து வைக்க
இலை போட்டுப் படையல் வைக்க
கூடி நின்ற எல்லோரும் காண
பொங்கல் இனிக்கப் பகலவன் வந்தானே!

படைத்த பொங்கலை அப்பா உண்ண
பானைப் பொங்கலைப் பங்கிட்டு உண்ண
விடிகாலைப் பொழுதும் பொங்கிக் கழிய
நண்பர்கள் வரவும் போக்கும் தொடங்க
உறவைத் தேடிநாம் போயும் வர
பொங்கல் நாள் இனிதே முடிந்ததே!

பொங்கலோ பொங்கல் - தைப்
பொங்கலோ பொங்கல்!



அறிஞர்களே! உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த நான் ஓர் களம் அமைத்துள்ளேன். அதாவது "தமிழா! நாம் பேசுவது தமிழா!" http://thamizha.findforum.net/ தளத்தில் இணைந்து உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த முன்வாருங்கள்.

4 கருத்துகள் :

  1. வணக்கம் ஐயா
    பொங்கலின் வரலாற்றையும் நிகழ்வையும் மிக நேர்த்தியாக கவியாய் தந்த விதம் ரசிக்க வைக்கிறது.
    ---------
    தங்களுக்கும்,இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!